ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது.

இந்தப் பகுதி தற்போது A, B, C என்னும் மூன்று நிர்வாகப் பிரிவுகளாக இருக்கிறது. ஒரு பிரிவு முழுவதும் இஸ்ரேலின் நிர்வாகத்திலும் மற்றொரு பிரிவு பாலஸ்தீன நிர்வாகத்திலும் மூன்றாவது இரண்டின் நிர்வாகத்திலும் இருக்கின்றன.

ஒரு நாள் பாலஸ்தீன நிர்வாகத்தில் இருக்கும் பெத்லஹேம் (Bethlehem ), ராமல்லா (Ramallah) போன்ற இடங்களைப் பார்க்க சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யும் கம்பெனிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேதியையும் குறித்துக்கொண்டோம்.

இந்த ஏற்பாடுகளைச் செய்த போதே ‘நாங்கள் உங்களை அங்கு கொண்டுபோய்விட்டுவிட்டு எல்லா இடங்களையும் காட்டிவிடுவோம்.

அதன் பிறகு நீங்களாகத்தான் திரும்பி வரவேண்டும். அப்படி நீங்களாக வந்தால்தான் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் வரும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்குப் புரியும்’ என்று சொல்லியிருந்தார்கள். நாங்களும் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டோம்.

அன்று காலை ஒன்பது மணிக்குப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். எங்களை அழைத்துச் செல்ல வந்த டாக்ஸி எங்களை ஏற்றிக்கொண்டு சென்றது.

சுமார் பத்து மைல் தூரம் சென்றதும் ஒரு சோதனைச் சாவடி அருகில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.

அவரால் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல முடியாது. இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்கள் யாரும் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல அனுமதி இல்லை. சோதனைச் சாவடியைத் தாண்டியதும் அந்தப் பக்கம் இன்னொரு ஓட்டுநர் எங்களை அவருடைய டாக்ஸியில் அழைத்துச் செல்வார் என்றார்கள்.

இரு பக்கமும் கம்பிகளால் அடைக்கப்பட்ட நீண்ட சோதனைச் சாவடிப் பாதையைக் கடந்து சென்ற பிறகு அந்தப் பக்கம் எங்களுக்காகக் காத்திருந்த ஓட்டுநரைச் சந்தித்தோம். அவரால் இஸ்ரேலுக்குள் வர முடியாது.

சோதனைச் சாவடியைத் தாண்டி வெளியே வந்தவுடன் பெத்லஹேம் ஊர் துவங்குகிறது. இங்கேயும் வளைந்து நெளிந்து செல்லும் பிரமாண்ட தடுப்புச் சுவரைப் பார்த்தோம்.

பாலஸ்தீனர்களுக்காக ஐ.நா. 1947-இல் ஒதுக்கிய இடங்களில் 1967 போரில் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களைச் சுற்றிக்கொண்டு இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியின் சுவரில் பாலஸ்தீனியர்கள் தங்கள் கோரிக்கைகளையும், கனவுகளையும் ஸ்பிரே பெயிண்டில் (spray paint) எழுதியிருந்தார்கள்.

ஊரைப் பார்க்கவரும் பயணிகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்தார்கள். என் கணவரும் அவர் பங்கிற்கு ‘விடுதலை’ என்று தமிழில் எழுதி வைத்தார்.

1948-லிருந்து யூதர்களின் வன்முறையாலும் பல முறை நடந்த போர்களாலும் பல பாலஸ்தீனியக் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறின.

இவர்கள் பக்கத்திலுள்ள லெபனான், ஜோர்டன் ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள். இப்போதைய பாலஸ்தீனத்திலும் அகதிகள் முகாம் இருக்கிறது.

அதில் ஒன்று ஐ.நா. மேற்பார்வையில் பெத்லஹேம் நகரில் இருக்கிறது. அதற்கு நடந்து போனோம். இங்கே நெருக்கமான வீடுகள், குறுகிய சந்துகள் இருக்கின்றன. ஜனநெருக்கமும் அதிகமாக இருக்கிறது. தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வருமாம். ஐ.நா. ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறது. பல வீடுகளில் குண்டடி பட்ட துவாரங்கள் இருந்தன.

அகதிகளின் இரண்டாம் தலைமுறையினர் வேறு நாடுகளுக்குப் போய் சம்பாதித்துப் பணம் அனுப்புவதால் மோசமான வறுமை இல்லை.

இந்த முகாமில் வேலைவாய்ப்பே கிடையாது. இதில் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களைச் செய்து வருகிறது.

அகதிகள் செய்யும் கைவினைப் பொருள்களை விற்கிறது. இதன் அலுவலகத்தில் ஒரு சிறு கண்காட்சியும் இருந்தது. பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையையும் கஷ்டங்களையும் பற்றிய புத்தகங்களையும் விற்கிறார்கள்.

அதில் மனதை நெகிழ வைத்தது பெரிய சாவிகள். 1948-இல் இஸ்ரேல் உருவானதாக அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்து அவர்களாக ஓடிவந்த அகதிகளும் இஸ்ரேலால் விரட்டியடிக்கப்பட்டவர்களும் வெஸ்ட் பேங்கிலும் ஜோர்டனிலும் சிரியாவிலும் லெபனானிலும் தஞ்சம் அடைந்தனர்.

இவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு என்றாவது திரும்புவோம் என்ற நம்பிக்கையில் சாவிகளைப் பத்திரமாக வைத்திருக்கிறர்களாம். அதைக் காட்டும் அடையாளம்தான் கண்காட்சியிலுள்ள சாவி. இவர்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு எப்போது திரும்பிச் செல்வார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.

இந்த அகதிகள் இருக்கும் இடம் ஒரு மேட்டுப் பிரதேசத்தில் இருக்கிறது. அங்கு செல்வதற்கு முன் எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. என்னைப் பயண வழிகாட்டியின் தந்தை நடத்தும் ஒரு கடையில் அரை மணி நேரம் உட்கார வைத்துவிட்டு என் குடும்பத்தினர் பக்கத்து இடங்களுக்குச் சென்று வந்தனர்.

அது ஒரு சிறிய கடை. நான் அங்கு இருந்தபோது வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை. முக்கியமாக பாலஸ்தீனியர்கள் உடை, அவர்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருள்கள் ஆகிய நினைவுப் பொருள்கள்தான் (souvenir) இருந்தன. ஜூன் மாதமாதலால் வெயில் கடுமையாக அடித்துக்கொண்டிருந்தது. குளிர்சாதன அமைப்பு எதுவும் இல்லை.

அந்த வெக்கையால் அசதி ஏற்பட்டு நான் சில நிமிடங்கள் கண்ணயர்ந்துவிட்டேன். கண்களைத் திறந்து பார்த்தால் கடைக்காரரைக் காணோம்.

நான் எழுந்திருந்து பார்த்தபோது அவர் கடைக்கு வெளியில் நின்றிருந்தார். நான் கண்ணயர்ந்து இருக்கும்போது, தான் கடையில் இருப்பது நாகரிகமல்ல என்று நினைத்துவிட்டார் போலும். நான் விழித்துவிட்டது தெரிந்ததும் உள்ளே வந்தார். முஸ்லீம்கள் எல்லாம் முரடர்கள் என்று நினைப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கட்டும்.

அகதிகள் முகாமை முடித்துக்கொண்டு பெத்லஹேமில் உள்ள பெரிய தேவாலயத்தைக் காணச் சென்றோம். இயேசுவின் பெற்றோர்கள் நாசரேத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இயேசு பிறந்தது பெத்லஹேம் நகரில். அங்கு அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்வார்கள். அவர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு வெள்ளி நட்சத்திரம் நட்டுவைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு குகை போன்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கி.பி. 160-இல் இந்த இடம் இயேசு பிறந்த இடமாக அடையாளம் பெற்றது. ஆனால் 326-இல் தான் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டின் இங்கு ஒரு கோயில் கட்டும்படி ஆணையிட்டான்.

கி.பி.530-இல் இது மறுபடி புதுப்பிக்கப்பட்டது. பின்னால் 10-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள் (Crusaders) அதை மேலும் அழகுபடுத்தினார்கள்.

தன் பிறகு இது பல முறை அழகுபடுத்தப்பட்டது. இப்போது பெரிய தேவாலயமாகக் காட்சியளிக்கிறது.

பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பிரமாண்டமான தூண்களோடும் சாண்டிலியர் விளக்குகள் பொருத்தப்பட்ட கூரைகளோடும் மிக அழகாக காட்சியளிக்கிறது. பெத்லஹேம் ஊரின் மையப் பகுதியில் மேஞ்சர் ஸ்கொயர் (Manger Square) என்னும் இடத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

பெத்லஹேம் நகரம் ஜெருசலேம் போன்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய ஸ்தலம் என்பதால் இதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இப்போது இஸ்ரேலிலிருந்து பல பாலஸ்தீன அகதிகள் வந்திருப்பதால் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகமாக இருக்கிறது.

பெத்லஹேமில் மதிய உணவை முடித்துக்கொண்டு ராமல்லா என்ற ஊருக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.

இது இப்போது பாலஸ்தீன அத்தாரிட்டியின் (Palestinian Authority) தலைமைச் செயலகமாக விளங்குகிறது. ராமல்லா என்ற பெயரிலிருக்கும் ‘ராம்’ என்றால் உயரம் என்று அர்த்தமாம்; அல்லா இஸ்லாமியரின் கடவுள்.. இந்த இரண்டும் சேர்ந்து உயரத்தில் இருக்கும் கடவுளின் இருப்பிடம் என்ற பெயர் இதற்கு வந்ததாம்.

ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற மற்ற தொன்மையான நகரங்களைப் போன்று ராமல்லாவும் தொன்மை வாய்ந்த நகரம். இது பல ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இருந்தபோது பெரிய நிலச்சுவான்தார்கள் நிறைய கட்டடங்கள் கட்டினர்; 1936-இல் இந்த ஊருக்கு மின்சாரம் வந்தது. மொத்தத்தில் இந்த ஊர் வளமடைந்தது.

பி.பி.சி. ஒரு வானொலி நிலையத்தைத் துவக்கியது. 1947-இல் ஐ.நா. பாலஸ்தீனத்தைப் பிரித்தபோது வெஸ்ட் பேங்கில் இருக்கும் இது பாலஸ்தீனர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

1948 போருக்குப் பிறகு இது ஜோர்டனுக்குக் கீழ் வந்தது. ஜோர்டன் அரசு சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளுக்கு இங்கு வசித்த பாலஸ்தீனர்கள் போய்வர சுதந்திரம் அளித்தது.

1967-இல் நடந்த போருக்குப் பிறகு இது இஸ்ரேலின் கீழ் வந்தது. இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் பிடித்துக்கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.

போர் முடிந்ததும் இஸ்ரேல் இங்கு வசித்த மக்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு எடுத்தது. அங்கு வசிக்கும் எல்லோருக்கும் இஸ்ரேலுக்குள் வருவதற்கும் அங்கு வேலைபார்ப்பதற்கும் ஒரு அனுமதி அட்டை வழங்கியது.

அப்போது வெளிநாட்டில் இருந்தவர்கள் அந்த அட்டையைப் பெற முடியாமல் போனது. அவர்கள் ராமல்லாவில் வசிக்கும் உரிமையை இழந்தனர்.

இஸ்ரேல் ராமல்லா உட்பட தான் பிடித்துக்கொண்ட வெஸ்ட் பேங்க் இடங்களில் பல கெடுபிடிகளைக் கையாண்டது. ராமல்லாவைச் சுற்றிப் பாதுகாப்புக்காக என்ற பெயரில் இஸ்ரேலியர்கள் மட்டுமே உபயோகிக்கக் கூடிய சாலைகளை அமைத்தது.

இதனால் ராமல்லா ஜெருசலேமிலிருந்து துண்டிக்கப்பட்டது. ராமல்லாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமிற்குப் போவதற்கு இஸ்ரேல் அமைத்திருக்கும் சோதனைச் சாவடிகளைத் தாண்டித்தான் போக வேண்டும். இந்தச் சோதனைச் சாவடிகளில் இருக்கும் (stationed) இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் ராமல்லாவாசிகளுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

1964-இல் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) தோன்றியது.

1969-இல் இதன் தலைவராக யாசர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இஸ்ரேலியர்களுக்கு எதிராக வெஸ்ட் பேங்கில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் செய்த வன்முறைச் செயல்களை இவர் தடுக்கவில்லை என்பதால் இவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேலும் இஸ்ரேலை ஆதரித்துவந்த அமெரிக்காவும் என்று அழைத்தன.

பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கையோடு இஸ்ரேல் என்ற நாடு இருக்கக் கூடாது என்று அராபத் கூறிவந்தார்.

ஆனால் இந்தக் கொள்கையிலிருந்து மாறி 1992-இல் நார்வே அதிகாரிகள் செய்த முதற்சிகளின் மூலம் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டார்.

இஸ்ரேலும் பாலஸ்தீன நாடு உருவாவதை ஒப்புக்கொண்டது. 1993-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தானது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனம் தனி நாடாக இயங்கும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் தான் பிடித்துக்கொண்ட இடங்களிலிருந்து வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜெருசலேமின் எதிர்காலம், இஸ்ரேலிலிருந்து வெஸ்ட் பேங்கிற்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த அகதிகள், வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் அமைத்த குடியிருப்புகள் ஆகியவை பற்றிய விபரங்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை. பாலஸ்தீன தேசிய அத்தாரிட்டி (Palestinian National Authority) உருவாக்கப்பட்டு ராமல்லா வளர்ச்சி அடையத் தொடங்கியது.

Yitzhak Rabin  Yasser Arafat

ஆஸ்லோ ஒப்பந்தத்தின் காரணகர்த்தாக்களுள் ஒருவரான இஸ்ரேல் பிரதம மந்திரி யிட்சக் ராபின் (Yitzhak Robin) தீவிரவாத யூதன் ஒருவனால் கொலைசெய்யப்பட்டர்.

அதன் பிறகு 1996–இல் பதவிக்கு வந்த நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை. 2001-இல் பதவிக்கு வந்த ஏரியல் ஷேரன் காலத்தில் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்க இஸ்ரேலையும் பாலஸ்தீனப் பகுதிகளையும் பிரிக்க பிரமாண்டமான சுவரை 2002-இல் கட்ட ஆரம்பித்தார். ராமல்லா இருக்கும் பகுதியிலும் இந்தச் சுவர் செல்கிறது.

இந்த ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக எங்களை ஏற்றிச் சென்ற வேன் சென்றது. பல இடங்களையும் காட்டிவிட்டுக் கடைசியாக பேருந்து நிலையத்தில் எங்களை விட்டுச் சென்றனர்.

வழியில் யாசர் அராபத்தின் (இவர் 2004-இல் பாரீஸில் இறந்தார்) கல்லறை இருந்தது. அது பல இடிபாடுகளுடன் காணப்பட்டது.

பயண வழிகாட்டி ‘அராபத் இறந்த பிறகும் ஏமாற்றப்பட்டர்’ என்று கல்லறை சரியாகக் கட்டப்படாததைச் சுட்டி காட்டினார். (பாரீஸில் அவரை விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சமீபத்தில் அவர் கல்லறையிலிருந்து அவர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.)

முதலில் கூறியபடியே எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுப் பயண வழிகாட்டி சென்றுவிட்டார். நம் நாட்டு பேருந்துகள் போல்தான் கூட்டம் அங்கு வழிந்துகொண்டிருந்தது.

108-ஆம் எண் பேருந்துகள் எல்லாவற்றிலும் எங்களைக் கட்டணம் எதுவும் இல்லாமல் ஏற்றிக்கொள்வார்கள் என்றும் நேரே ஜெருசலேமிற்கு வந்துவிடலாம் என்றும் பயண வழிகாட்டி கூறியிருந்தார்.

ஜெருசலேமிற்கும் ராமல்லாவிற்கும் இடையே உள்ள தூரம் பத்து மைல்களுக்கும் குறைவு. தடுப்புச் சுவர் இருப்பதால் அதைச் சுற்றிக்கொண்டு போக வேண்டியிருப்பதால் இருபது மைல்களுக்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது.

108-ஆம் எண் பேருந்துகள் வந்த வண்ணமாக இருந்தன. அதில் ஒன்றில் ஏறி நாங்கள் ஜெருசலேமை நோக்கிப் பயணம் செய்தோம். வழியில் இஸ்ரேலின் சோதனைச் சாவடி ஒன்று இருந்தது. அங்கு பேருந்தை நிறுத்தச் சொன்னார்கள். திடீரென்று இஸ்ரேலியப் படைவீரர்கள் இருவர் – ஒரு ஆணும் பெண்ணும் – பேருந்திற்குள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஏறினர்.

(இஸ்ரேலில் இளவயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை உண்டு. யூதர்களுடைய வேத புத்தகமான தோராவை (Torah) ஓதும் சநாதன யூதர்களுக்கும் (Orthodox Jews) இஸ்ரேலில் வாழும் அரபு இஸ்ரேலியர்களுக்கும் இதிலிருந்து விலக்கு உண்டு.

அரேபியர்களை இஸ்ரேல் அரசு நம்புவதில்லை. அதனால் அவர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. வேதம் ஓதுவதால் சநாதன யூதர்களுக்கு விலக்கு உண்டு. ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.)

எல்லோருடைய பாஸ்போர்ட்டுகளையும் பரிசோதித்துவிட்டு இளைஞர்கள் அனைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.

அப்படி அழைத்துச் சென்றவர்களில் எங்கள் மகள்கள் இருவரும் சேர்த்தி. இதை எதிர்பார்க்காத நான் கொஞ்சம் வெலவெலத்துப் போய் படைவீரர்களிடம் ஏதோ கேட்கப் போனேன்.

ஆனால் அவர்கள் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் எல்லோரையும் பேருந்தை விட்டுக் கீழே இறங்கச் சொல்லி சாலையின் ஓரத்திலிருந்த சோதனைச் சாவடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு இருபது நிமிடங்கள் கடந்தன. உள்ளே சென்ற சிலர் சிறிது நேரத்தில் வெளியே வந்தனர். ஆனால் எங்கள் மகள்கள் வரவில்லை.

அதுவரை பேருந்தை நிறுத்தியிருந்த ஓட்டுநர் பேருந்தை மறுபடி ஓட்டத் தொடங்கினான். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மகள்கள் வராமல் போக வேண்டாம் என்று முடிவுசெய்து நாங்களும் பேருந்தை விட்டு இறங்கினோம்.

சோதனைச் சாவடிக் கட்டடத்திற்கு முன்னால் நின்றுகொண்டு எங்கள் மகள்கள் வருகிறார்களா என்று வாயிலைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் இன்னொரு 108-எண் பேருந்து வந்தது. அதிலிருந்தவர்களில் சிலரையும் படைவீரர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர். அவ்வப்போது சிலர் வெளியே வந்த வண்ணம் இருந்தனர். இதுவரை எங்கள் மகள்கள் வெளியே வராததால் எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது.

இரண்டாவதாக வந்த பேருந்து ஓட்டுநரை அணுகி அவர் பேருந்திலிருந்து உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டோம்.

அவர் தன் பேருந்தில் வந்தவர்கள் சிலர் இன்னும் உள்ளே இருப்பதாகவும் முதல் பேருந்தில் (அதாவது நாங்கள் வந்த பேருந்து) இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்துவிட்டதாகவும் கூறினார். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி ஆகிவிட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் கட்டடத்திற்கு வெளியே நின்றிருந்த படைவீரர்களை அணுகினோம். (இவர்கள் கைகளிலும் துப்பாக்கி.) அவர்கள் உள்ளே சென்று விபரம் அறிந்து வருவதாகக் கூறினர்.

உள்ளே சென்ற பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தவர்கள் எங்கள் மகள்கள் இன்னும் உள்ளே இருக்கிறார்கள் என்றும் சிறிது நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் கூறினர். மிகவும் கலவரப்பட்டுப் போயிருந்த எங்கள் முகங்களைப் பார்த்ததனாலோ என்னவோ இரண்டு சிறிய நாற்காலிகளைக் கொண்டுவந்து எங்களை அவற்றில் அமரச் சொன்னார்கள்.

கட்டடங்களுக்கு வெளியே – சாலையின் ஓரத்தில் – பதைபதைத்துக்கொண்டு – குறிப்பாக நான் – உட்கார்ந்திருந்தோம்.

அதன்பிறகும் மகள்கள் வெளியே வர கால் மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதிலும் பெரிய மகள் வந்து பத்து நிமிஷங்களுக்குப் பிறகுதான் சிறிய மகள் வெளியே வந்தாள்.

சில நிமிஷங்கள் கழித்து வந்த ஒரு 108-எண் பேருந்தில் ஜெருசலேம் நோக்கிப் பயணித்தோம். இந்தச் சோதனையும் அவதியும் பாலஸ்தீனர்களுக்கு தினசரி அனுபவம். ஏன் நாங்களாகத் திரும்பி வர வேண்டும் என்று சொன்னார்கள் என்பது புரிந்தது.

பாலஸ்தீனத்தை யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக (இஸ்ரேலை) உருவாக்க வேண்டும் (இஸ்ரேல் பயணம் 8)

 

 

 

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version