சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவல் உருவாகியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தினால் அங்கு சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளதோடு, சிறுவர்கள் அதிகளவில் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொவிட் வைரஸ் சீனாவில் இருந்துதான் உலகுக்கு பரவியது. இது பெரும் பேரழிவினை உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியது.
இலட்சக்கணக்கான மக்கள் இந்த கொவிட் தொற்றின் பேரழிவு தாக்கத்தில் பாதிக்கப்பட்டனர்.
இதில் இருந்து இன்னும் சீனா முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் ஒரு புதிய வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
அதாவது, தற்போது சீனாவில் எச்9என்2 என்ற வைரஸ் தொற்று மற்றும் குழந்தைகளை பாதிக்கும் சுவாச நோய் பரவி வருவதோடு நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
அதிகப்படியான மக்கள், குறிப்பாக குழந்தைகள் அதிகளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீஜிங் குழந்தைகள் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்தில், தற்போதைய தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை சராசரி 7,000 ஆகும். இந்த எண்ணிக்கை “மருத்துவமனையின் திறனை விட அதிகமாக உள்ளது” என்று கூறினார்.
இதேவேளை, தியான்ஜினில் உள்ள மிகப்பெரிய குழந்தை மருத்துவமனை ஒரு சாதனையை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது, ஒரே நாளில் அதன் வெளிநோயாளர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த அசாதாரண சூழ்நிலை தொடர்வதன் காரணமாக, குழந்தை மருத்துவரைப் பார்க்க நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு காத்திருந்தும் மருத்துவர்களை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதில், லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலதிக வகுப்புகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, நிமோனியா வகை தொற்றால் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனிநபர்கள், பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஆயினும் சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள செய்தி உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், ஏற்கனவே சீனாவில் உருவாகிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உலகையே பல நாட்கள் முடக்கி வைத்தது. அதன் தாக்கம் இன்னும் பல நாடுகளில் உள்ளது.
பொருளாதார ரீதியான பல சரிவுகளை நாடுகள் கொவிட்டினால் சந்தித்ததோடு இன்னும் அதில் இருந்து மீள முடியாது பல நாடுகள் தவிக்கின்றன. இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. இந்நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் சீனாவில் உருவாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.