நாட்டில் கல்வி அறிவு மிகுந்த மாநிலம் என அறியப்படும் கேரளாவில் வரதட்சணை பிரச்னையால் இளம்பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், அடிக்கடி தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்துவருகின்றன.

வரதட்சணை பிரச்னையால் திருமணம் நின்றுபோன துக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதும், அந்த வழக்கில் பெண் மருத்துவரின் நண்பரான மற்றொரு மருத்துவர் கைதுசெய்யப்பட்ட சம்பவமும், தேசத்தையே அதிரவைத்துள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் மருத்துவர் ஷகானா (26). திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்த நிலையில், அதிக அளவு மயக்க ஊசி செலுத்தி கடந்த 5-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது அறையில் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தில், “எல்லோருக்கும் தேவை பணம்தான், எல்லாவற்றையும்விட பெரியது பணம்தான். அவர்களின் வரதட்சணை ஆசையால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என் வாழ்க்கையை நாசமாக்குவதுதான் அவனது லட்சியமாக இருந்தது. நான் வஞ்சிக்கப்பட்டேன். ஒன்றரை கிலோ நகைகளும், ஏக்கர் கணக்கில் நிலங்களும் கேட்டால், எங்கள் வீட்டினரால் கொடுக்க முடியாது என்பது உண்மை” என எழுதியிருந்தார்.

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட டாக்டர் ரூவைஸ்

இது குறித்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் போலீஸ் விசாரணை நடத்தி, அதே கல்லூரியில் படித்துவந்த சீனியர் மாணவரான டாக்டர் ரூவைஸ் (28) என்பவரைக் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசுகையில், “ஷகானாவும் கொல்லத்தைச் சேர்ந்த ரூவைஸும் நட்பாக பழகி வந்தனர். இருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசினர்.

ஷகானாவின் வீட்டினர் 50 சவரன் நகைகள், 50 லட்சம் மதிப்புள்ள நிலம், கார் ஆகியவை வரதட்சணையாகக் கொடுக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர். ஆனால், ரூவைஸின் வீட்டில் அதைவிட அதிக வரதட்சணை கேட்டிருக்கின்றனர்.

எனவே திருமணம் நின்றுபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து வாட்ஸ்அப்பில் ரூவைஸிடாம் சாட் செய்த ஷகானா, ‘திருமணம் நின்றுபோனால் நான் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து ஷகானாவின் நம்பரை பிளாக் செய்தார் ரூவைஸ். அதன் பின்னர்தான் ஷகானா தற்கொலை செய்துகொண்டார். ரூவைஸ் கைதுசெய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 21-ம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது” என்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் ஷகானா

“திருமணத்துக்கு முன்பே பணத்தாசையில் அதிக வரதட்சணை கேட்டு ஒரு உயிரைப் பறித்திருக்கிறார் டாக்டர் ரூவைஸ். அப்படியானால் அவரிடம் மருத்துவம் பார்க்கச் செல்லும் நோயாளிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்” என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து மருத்துவக்கல்லூரியிலிருந்து ரூவைஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், மருத்துவப் பட்டத்தை ரத்து செய்வதாகவும் மருத்துவக்கல்வி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

நாட்டில் கல்வி அறிவு மிகுந்த மாநிலம் என அறியப்படும் கேரளாவில் வரதட்சணை பிரச்னையால் இளம்பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், அடிக்கடி தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்துவருகின்றன.

அதிலும், இப்போது கைதான டாக்டர் ரூவைஸின் சொந்த ஊரான கொல்லத்தில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. ஷகானாவைப் போன்றே ஆயுர்வேத மருத்துவம் படித்துவந்த கொல்லத்தைச் சேர்ந்த விஸ்மயாவின் மரணம், 2021-ம் ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆயுர்வேத டாக்டருக்கு படித்துவந்த விஸ்மயாவுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண்குமாருக்கும் 2020 மே மாதம் திருமணம் நடந்தது. அப்போது 100 சவரன் நகைகளும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும், ஒரு ஏக்கர், 20 சென்ட் நிலமும் வரதட்சணையாகக் கொடுத்திருந்தார்கள்.

வரதட்சணையாகக் கொடுத்த காரின் மதிப்பு குறைவு எனக் கூறி, விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார் கிரண்குமார்.

இதையடுத்து அவர் 2021-ம் ஆண்டு, ஜூன் 21-ம் தேதி பாத்ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கிரண்குமார் கைதுசெய்யப்பட்டதுடன், அரசு வேலையிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கெல்லாம் மேலாக, அதிக வரதட்சணையுடன் வேறு திருமணம் செய்யும் ஆசையில், தன்னுடைய மனைவியை பாம்பைக் கடிக்கவைத்துக் கொலைசெய்த சம்பவமும் கொல்லத்தில்தான் நடந்தது.

கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ராவுக்கும் சூரஜ் என்பவருக்கும், 2018-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 112 பவுன் நகைகள், கார் என வரதட்சணை கொடுத்திருக்கிறார்கள்.

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்தும் பலன் இல்லாததால், கூடுதல் வரதட்சணையுடன் வேறு பெண்ணைத் திருமணம் செய்யும் ஆசையில் மனைவியைக் கொலைசெய்ய திட்டமிட்டார் சூரஜ்.

இயற்கையாக மரணம் ஏற்பட்டது போன்று மனைவியைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, பாம்பாட்டி ஒருவரிடம் ரூ.10,000-க்கு கருநாகப்பாம்பை வாங்கினார். தாய் வீட்டில் நின்ற உத்ராவைத் தேடிச் சென்று கருநாகப்பாம்பால் கடிக்கவைத்துக் கொலைசெய்தார் சூரஜ். 2020, மே 6-ம் தேதி நடந்த இந்தக் கொலை மக்களால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

கிரண்குமார் – விஸ்மயா

இது போன்று பல வரதட்சணை மரணங்கள் கேரளாவில் அரங்கேறி வருகின்றன. சமூகத்தில் உயர்ந்த பணியில் இருக்கும் ஆண்கள் அதிக வரதட்சணை கேட்பதும், மருத்துவம் போன்ற உயர் படிப்பு படித்த பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதும் சமூக ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது. வரதட்சணை கொடுமைகளுக்கு கடும் நடவடிக்கைகளை அரசும், போலீஸும் எடுத்துவருகின்றன. ஆனாலும், அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

“வரதட்சணை கேட்டால் நீ போடா எனச் சொல்லும் தைரியம் பெண்களுக்கு வரவேண்டும்” என்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் கருத்து, மரணங்களை மாற்றும் மருந்தாக அமையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version