இலங்கை–இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதி உச்ச தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கான அர்த்தமுள்ள நிரந்தரத் தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு இந்தியா வகிபாகம் அளிக்கவேண்டுமென்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ளமையினால் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
புதுடில்லி சென்ற இந்த குழுவின் சார்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன் அங்குள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தக்கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
இங்கு கருத்து தெரிவித்த சி.வி. விக்கினேஸ்வரன் ,இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்கள் சீன சார்பு நிலையில் செயற்பட்டு வருகின்றனர்.
ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென்பகுதிக்கு அருகில் உள்ளன. அத்தோடு கலாசார, சமய, மொழி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் இந்தியாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளன.
அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பான்மையானவர்கள் இந்தியா எம்மை ஆதரிக்கும் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்திய– இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா முழு முயற்சி எடுக்கவேண்டும். இதன் மூலமே தமிழர்களினதும் இந்தியாவினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இந்தியா உரிய பங்களிப்புக்களை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வருடம் தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதமொன்றையும் அனுப்பிவைத்திருந்தனர். அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்கான விருப்பத்தை தெரிவித்து கடிதமொன்றை அனுப்புவதற்கும் முயற்சி எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி இன்னமும் கைகூடவில்லை.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்கினேஸ்வரன் இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களிடையே கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.
ஆனால் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தரக்கோரும் இந்தக் கடிதம் இன்னமும் அனுப்பிவைக்கப்படவில்லை. இந்த விடயத்தில் சில தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைமைகள் முரண்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் 1987ஆம் ஆண்டு இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இதன் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபை முறைமை அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த மாகாணசபை முறைமையை இனப்பிரச்சினை தீர்வுக்கான அடிப்படையாக கொள்ளலாம் என்பதே தமிழ்த் தேசியக்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.
இதனால்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைகளுக்கான முழு அதிகாரத்தையும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்துவதற்கு தெற்கின் தலைமைகள் தயாராக இல்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியேற்றயைடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்றும் உறுதி வழங்கியிருந்தார்.
இவ்வாறு உறுதி வழங்கப்பட்டதையடுத்து 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த பீடாதிபதிகள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
13ஆவது திருத்தச் சட்ட நகலை பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தி எரியூட்டியிருந்தனர். இவ்வாறான எதிர்ப்புக்கள் காரணமாக தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் கூட இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால்தான் இலங்கை–இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முழு முயற்சி எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் கோரிவருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினர் இதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அன்றுதொட்டு இன்றுவரை ஏதோ ஒருவகையில் செயற்பட்டு வருகின்றது.
இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட விடயத்திலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கின்றது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா பேருதவி புரிந்ததாக அன்றயை பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக் ஷ ,முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் நேரடியாகவே தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பங்களிப்பாற்றிய இந்தியா, யுத்தத்துக்கு காரணமான இனப்பிரச்சினை தீர்வுக்கு பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் ஆரம்ப கட்டமாக 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான சூழ்நிலை தெற்கில் இருப்பதாக தெரியவில்லை.
ஏனெனில் இந்தியாவுக்கு இலங்கை அரசியல் தலைவர்கள் மாறிமாறி வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்து அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியபோது 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என்று அறிவித்திருந்தார்.
இதேபோன்றே அவருக்கு பின்வந்த தலைவர்களும் இந்தியாவுக்கு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் தன்னை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார். அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனாலும் இதுவரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை கூட முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் முன்வரவில்லை. இதனால்தான் இந்தியா உரிய அழுத்தத்தை கொடுத்து இதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.
ஆனால் இந்திய மத்திய அரசாங்கமானது இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு நேரடியாக உரிய அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரியவில்லை. பூகோள ரீதியான விடயங்களை கருத்தில் கொண்டு இலங்கை மீது உரிய அழுத்தங்களை கொடுக்கும் விடயத்தில் இந்தியா பின்னடிப்புக்களை மேற்கொள்வதாகவே தமிழ்த் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
வடக்கு,கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் தொல்பொருள் என்ற பேரில் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. பெளத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை காணும் விடயத்தில் அக்கறை செலுத்தாது ஆக்கிரமிப்புக்கள் தொடர்வதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான செயற்பாடாக அமைந்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இந்தியாவானது உரிய அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் இலங்கை– இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தமிழ்த் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகள் முயற்சிக்கின்றன.
எனவே இந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது உரிய தீர்மானங்களை எடுத்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.