ஒரு பெரும் காட்டை எரித்து அழிக்க ஒரு சிறிய நெருப்புப் பொறி போதும்.

அந்த பென்னம்பெரிய காடு அழிந்த பிறகு, புதிதாய் சில, உருவாகும்.

அபிவிருத்தி என்கிற பெயரில் இட அமைப்பு மாறும். தோற்றம் மாறும். கட்டடங்கள், நிறுவனங்கள், வீதிகள் என காட்சிகள் மாறும். இது ஒருபுறம் புதியவை தோன்றுவதாக கருதலாம். இது ‘ஆக்கம்’.

இன்னொருபுறம், காடு அழிக்கப்பட்டால் காட்டில் வாழும் உயிர்கள், காட்டையும் காட்டில் உள்ள உணவுகளையும் நம்பி சீவித்த விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும். அல்லது மனித குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மனிதர்களோடு மோதி இறக்கும். அல்லது உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இது ‘அழிவு’.

ஆக்கமோ, அழிவோ எது நடப்பதற்கும் காரணமாவது காடழிப்பு. அந்த காடழிப்பை ஏற்படுத்துவது நெருப்பு. அந்த நெருப்பு படர மூலமாக விளங்குவது ஒரு சிறிய ‘நெருப்புப் பொறி’.

ஒன்று ஆக்கப்படலாம்… ஆனால், அழிப்பது பாவம். இந்த பாவத்தின் பெரும்பகுதியில் சிக்குவது அந்த சின்னஞ்சிறு நெருப்புப் பொறியே. ஏன்? காட்டை மொத்தமாய் எரிந்து சாம்பலாக்கிவிடுகிறதே.

அந்த நெருப்புப் பொறியை மகாகவி பாரதியார் ‘அக்கினிக் குஞ்சு’ என்கிறார்.

இதன் உட்கருத்து…

பெருங்காட்டை அழிக்க சிறு நெருப்புத்துளி தேவை. அதே போல ஒரு கொடியதை அழித்து, அதை சீராக்கி, அதன் மூலம் சூழலுக்கும் சமூகத்துக்கும் சுற்றியுள்ள கூட்டத்துக்கும் ஒரு நன்மையை விளைவிக்க, ஒரு சிறு நெருப்புப் பொறி போல் ஒரு புள்ளி வைத்தால் போதும்.

இந்த காரியத்தை செய்ய ஆலமரம் போன்ற ஒருவர் தேவையில்லை. வயதில் சிறியவராயினும், நல்லது நடந்தால் சரி. வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ விதைத்துச் சென்ற சிந்தனை இதுதான்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…

ஒரு நன்மைக்காக மட்டுமே இந்த அக்கினிப் பொறியை கொளுத்துப் போட்டால் பாரதி சொன்னதில் உள்ள அர்த்தம் புரியம்.

‘நன்மைக்காக மட்டுமே…’

வாழ்க பாரதி!

(டிசம்பர் 11… இன்று ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியாரின் ஜனன தினம்)

– மா. உஷாநந்தினி Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version