தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், மீண்டும் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுள்ளது திருநெல்வேலியில் இருக்கும் அதிசய கிணறு..

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் இருக்கும் கிணறுதான் ஆண்டுதோறும் மழைப்பொழிவு காலங்களில் ஹாட் டாப்பிக் ஆக மாறுகிறது. எவ்வளவு தண்ணீரை எடுத்தாலும் வற்றாத கிணற்றைப் பார்த்திருப்போம்.

ஆனால், எவ்வளவு தண்ணீரை ஊற்றினாலும் அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் கிணறாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமே.. அப்படி ஒரு அதிசய கிணறாக இருப்பதா ஒன்று அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மழை பெய்தபோது, அப்பகுதியில் இருந்த குளம் நிரம்பி அது கிணற்றுக்குள் சென்ற நிலையில், முழு நீரையும் சளைக்காமல் விழுங்கியது இந்த அதிசய கிணறு.

எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உள்வாங்கிக்கொள்ளும் இந்த கிணற்றால், சுற்றுவட்டாரங்களில் நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு நன்மையாக அமைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த கிணறு குறித்து சென்னை ஐஐடியில் இருந்து பல முறை ஆய்வு செய்த நிலையில், இந்த கிணற்றின் மூலமாக அப்பகுதியில் உள்ள நீர்மட்டம் உயர்த்தி விவசாயத்தையும் பெருக்க முடியும் என ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சுமார் 60 அடு ஆழம் கொண்ட இந்த கிணற்றுக்கு அடியில் பக்கவாட்டில், 40 அடி தூரம் வரை ஒரு நபர் நடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட அதிசயங்களை தன்னகத்தே அடைத்து வைத்திருக்கும் இந்த கிணற்றைப் பார்க்க, தென் மாவட்டங்களில் இருந்து பலரும் நேரடியாக சென்றனர். இந்த ஆண்டு அப்பகுதியில் சரியான மழைப்பொழிவு இல்லாததால், கிணறு வற்றிக்காணப்பட்டது. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

மழை பெய்தால் வெள்ள நீர் நேரடியாக இந்த கிணத்திற்கு தண்ணீர் வர கால்வாயும் அமைக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால், கிணற்றுக்கு தண்ணீர் வரதொடங்கியுள்ளது. நேற்று மாலையில் இருந்து கிணற்றுக்கு 100 முதல் 200 கனஅடி நீர்வரை வந்து கொண்டிருக்கிறது.

கடந்த பல மாதங்களாக வற்றிகிடந்த கிணறுக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது வரபிரசாதமாக பார்க்கப்படும் நிலையில், தொடர்ந்து தண்ணீர் உள்செல்வதால் அந்த பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் வரை இந்த கிணற்றில் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version