இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 9: இஸ்ரேல் – 75 ஆண்டுகளாக நிரந்தர முற்றுகையில் இருக்கும் தேசம்!

இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதற்குக் காரணம், அது பலமான தேசம் என்பது அல்ல! எதிரிகளை பலவீனப்படுத்தி தன்னை வலிமையாகக் காட்டிக்கொண்டதுதான்.

வரலாற்றுக் கதைகள் படிப்பவர்களுக்கு இந்த விஷயத்தைக் கற்பனை செய்வது சுலபமாக இருக்கும்.

அந்தக் காலத்தில் மன்னர்களின் கோட்டைகள் எதிரிப்படைகளால் முற்றுகை செய்யப்படுவதைப் படித்திருக்கலாம். சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்க, எந்த நிமிடத்திலும் தாங்கள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சம் இருக்க, அந்தக் கோட்டைக்குள் வாழும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

இஸ்ரேல் நாட்டில் வாழும் மக்களின் மனநிலை கடந்த 75 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது.

நாட்டுக்குள்ளேயே பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியிலிருந்து செயல்படும் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் தாக்குதல்களை சமாளிக்க வேண்டும். கொரில்லா போர் நடத்தும் இவர்களை எதிர்கொள்ளும் உபாயங்கள் எதுவும் இஸ்ரேல் ராணுவத்திடம் இல்லை

அண்டை நாடுகள் எதனுடனும் நல்லுறவு இல்லை. வடக்கில் லெபனானும் சிரியாவும் இருக்கின்றன. லெபனான் அரசும் எதிராக இருக்கிறது.

அந்த நாட்டிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது.

அங்கிருக்கும் அரசு படைகளும், எதிர்த்துப் போரிடும் கலக அமைப்பினரும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

அது, ‘இஸ்ரேல் நமக்கு எதிரி’ என்று நினைத்து தாக்குவது. கிழக்கில் ஜோர்டானும் இராக்கும் இருக்கின்றன. இரண்டுமே எதிரிகள்தான். சமீப ஆண்டுகளில் இராக்கில் ஸ்திரமற்ற சூழல் நிலவுவதால், அந்த வழியாகவும் அச்சுறுத்தல் இருக்கிறது.

தெற்கில் இருக்கும் எகிப்து, சமீபகாலமாகத்தான் தாக்குதல்களைக் குறைத்திருக்கிறது. ஒரே ஆறுதலாக மேற்குப் பக்கம் கடல் இருக்கிறது.

அந்தப் பக்கம் அச்சுறுத்தல் இல்லை. அதனால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் உள்பட அடர்த்தியாக மக்கள் வாழும் நகரங்கள் இந்த மேற்குப் பகுதியில்தான் இருக்கின்றன.

பலமுறை இந்த அண்டை நாடுகளுடன் போர் செய்திருக்கிறது இஸ்ரேல். இந்தப் போர்களைத் தொடர்ந்து எகிப்துடன் 1979-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஜோர்டானுடன் 1994-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், அந்த எல்லைகளைத் தவிர்த்துவிட்டு மற்ற இடங்களில் கவனம் செலுத்துகிறது இஸ்ரேல் ராணுவம்.

நம் வாழ்க்கைச்சூழலுடன் இஸ்ரேல் வாழ்க்கைச்சூழலை ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு வாழ்வதன் அபாயம் புரியும்.

அவசரமாக ஆபீஸ் போகும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, வழக்கமாகப் போகும் பஸ் இன்று லேட்டாக வருவது, திடீரென மழை பெய்து சாலைகளில் வெள்ளம் தேங்குவது, எதிர்பாராத நேரத்தில் பவர் கட் ஆவது போன்றவைதான் நமக்குப் பெரிய பிரச்னைகள்.

ஆனால், இஸ்ரேலின் பிரச்னைகள் எந்த வசதியான நாட்டிற்கும் இல்லாதவை! வசதியான அடுக்குமாடி வீட்டில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது எங்கிருந்தோ ஏவுகணை தாக்கி அந்த வீடு நொறுங்கி விழக்கூடும்.

அதில் தூங்கும் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாமல் போகக்கூடும். காரில் போகும்போது, திடீரென சாலையில் ஒரு குண்டுவெடித்து, அந்தக் கார் உருக்குலைந்து போகக்கூடும். கூட்டமாக இருக்கும் மார்க்கெட் பகுதியில் யாரோ ஒரு தற்கொலைப்படை ஆசாமி வந்து, தன் உடலில் கட்டியிருக்கும் வெடிகுண்டை இயக்கக்கூடும்.

அதனால், அருகில் இருப்பவர்களும் உடல் சிதறி சாக நேரிடும். (இதைவிட பல மடங்கு அபாயகரமான வாழ்க்கைச்சூழல் காஸாவிலும் மேற்குக்கரையிலும் வாழும் பாலஸ்தீனர்களுக்கு இருக்கிறது. அவர்கள் நாடற்றவர்கள், இஸ்ரேல் மக்கள் சொந்தமாக நாடு இருப்பவர்கள், அதுதான் வித்தியாசம்!)


ஹமாஸ் தாக்குதலில் இதுவரை இறந்த இஸ்ரேலியர்கள்

புதிதாக இதையெல்லாம் பார்க்கும் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ‘இப்படிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் ஒரு நிமிடம்கூட இருக்கக்கூடாது’ என்று தோன்றும்.

ஆனால், இஸ்ரேலியர்கள் குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே இதையெல்லாம் பார்த்துப் பழகி வளர்ந்ததால், அவர்களை இந்த எதுவும் பாதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்து வாழப் பழகிவிடுகிறார்கள்.

நமக்கு துப்பாக்கியுடன் திபுதிபுவென ராணுவ வீரர்கள் கூட்டமாக வீதிக்குள் ஓடிவந்து யாரையாவது சுடுவதைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும், மயக்கமே வந்துவிடும்.

பாலஸ்தீனத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு இது பழகிப் போன காட்சி. கிட்டத்தட்ட தினம் தினம் இதைப் பார்த்து வளர்கிறது அந்தக் குழந்தை.

இதேபோல இஸ்ரேலில் இருக்கும் பலருக்கும், வானத்தில் தீப்பிழம்பாக ஓர் ஏவுகணை வந்து பாய்வது சாதாரணக் காட்சி. தங்கள் கண்ணெதிரே ஒரு பேருந்து குண்டுவெடித்து உருக்குலைவது இயல்பான விஷயம்.

இன்று அப்படி ஒரு காட்சியைப் பார்த்தாலும், நாளை தயக்கமின்றி பேருந்தில் ஏறிப் பயணம் செய்வார்கள். தாக்குதல், வன்முறை, அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் வாழ்வதற்கு நிரந்தரமாக அந்த மக்கள் பழகியிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதற்குக் காரணம், அது பலமான தேசம் என்பது அல்ல! எதிரிகளை பலவீனப்படுத்தி தன்னை வலிமையாகக் காட்டிக்கொண்டதுதான்.

ராணுவ வல்லமை, ஆயுத வல்லமை, உளவு வல்லமை ஆகியவற்றால் அது தன் எதிரி நாடுகளுக்கு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளிடம் அது செல்லுபடி ஆகவில்லை என்பது வேறு விஷயம்.

இஸ்ரேல் என்ற நாடு உருவெடுப்பதற்கு முன்பாகவே அந்த நாட்டின் ராணுவம் உருவாகிவிட்டது என்பது ஆச்சர்யமான விஷயம்.

பிரிட்டிஷ் பிடிக்கு பாலஸ்தீனம் வருவதற்கு முன்பே அங்கு அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்க ஆரம்பித்தன.

யூதர்களின் பாதுகாப்புக்காக Hashomer என்ற அமைப்பு உருவானது. கிட்டத்தட்ட ராணுவம் போலவே இதை யூத இனத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் இணைந்து நடத்தினர். இதற்கென்று தனியாக ஓர் உளவுத்துறையும் இயங்கியது.


ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள்

இதேபோல முதல் உலகப்போர் காலத்தில் யூதர்களைக் கொண்டு Zion Mule Corps, Jewish Legion ஆகிய துணை ராணுவ அமைப்புகளை உருவாக்கி தங்கள் ராணுவத்துடன் பயன்படுத்திக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. பிற்காலத்தில் அதில் இருந்தவர்களை இணைத்து Haganah என்ற ராணுவத்தை யூதர்கள் உருவாக்கினர்.

இஸ்ரேல் தேசம் உருவானதுமே, இந்த எல்லாவற்றிலும் இருந்தவர்களை இணைத்து இஸ்ரேல் ராணுவம் ஏற்படுத்தப்பட்டது.

இன்றைய தேதியில் உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலில் 18-வது இடத்தில் இருக்கிறது இஸ்ரேல்.

மத்தியக் கிழக்கு ஆசியாவில் துருக்கி, எகிப்து, ஈரான் போன்ற நாடுகளின் ராணுவங்களில், இஸ்ரேலைவிட வீரர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனாலும், நவீன ஆயுதங்கள் மற்றும் போர்முறையால் இஸ்ரேல் தனித்து நிற்கிறது.

எப்போதும் முற்றுகையில் இருக்கும் ஒரு தேசத்துக்கு ராணுவ பலம் முக்கியம் அல்லவா? இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்குப் பஞ்சமே இல்லை.

இஸ்ரேல் குடிமக்கள் எல்லோரும் 18 வயது நிரம்பியதும் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும்.

ஆண்கள் 32 மாதங்களும், பெண்கள் 24 மாதங்களும் ராணுவப் பணியில் இணைந்திருக்க வேண்டும். ஆண்களைப் போலவே பெண் வீராங்கனைகளையும் போர்முனைக்கு அனுப்பும் வெகுசில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று!

ராணுவத்தில் கிட்டத்தட்ட 88% பணிகளில் பெண்களும் பங்குபெறுகிறார்கள். கடந்த 1962 முதல் 2016 வரை இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளில் 535 பேர் போர்முனையில் இறந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் நிரந்தரமாக ராணுவத்தில் இணைய விரும்புவோர், அதன்பின் முறைப்படி சேர்ந்துகொள்ள முடியும்.

கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு வெளியேறியவர்களில் சிலரை ‘ரிசர்வ் சர்வீஸ்’ என்ற பிரிவில் வைத்திருப்பார்கள்.

அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் மட்டும் வந்து ராணுவப் பயிற்சி பெற்று, சிலவித ராணுவப் பணிகளைச் செய்துவிட்டுப் போவார்கள். எந்த நேரமும் போருக்குத் தயாராக இவர்கள் இருப்பார்கள்.

இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் ராணுவத்தில் இப்போது 1,69,500 பேர் முழுநேரப் பணியில் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி 4,65,000 பேர் ரிசர்வ் சர்வீஸில் இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும் இவர்களைக் களத்துக்கு அழைக்க முடியும் என்பதால்தான், ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், காஸா எல்லையில் மூன்று லட்சம் வீரர்களை இஸ்ரேலால் குவிக்க முடிந்தது.

கவச வாகனங்கள், டாங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் என்று உலகின் அதிநவீன ராணுவத் தளவாடங்களைக் குவித்து வைத்திருக்கிறது இஸ்ரேல் தரைப்படை. கடற்படையும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல் என்று பெரிதுதான்.

தேவைப்படும்போது அமெரிக்க கடற்படை உதவிக்கு வந்த நிற்கும். விமானப்படையில் F-15, F-16, F-35 என்று அதிநவீன விமானங்கள் 350 உள்ளன. இதுதவிர, ஹெரோன் எனப்படும் தாக்குதல் நடத்தும் டிரோன் படையும் அவர்களிடம் இருக்கிறது.

இஸ்ரேலின் இன்னொரு ஸ்பெஷல் அம்சம், Iron Dome எனப்படும் அதன் தற்காப்புக் கவசம். குறுகிய ரேஞ்சில் இயங்கும் ஏவுகணைகளை ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினால், அவற்றை வானிலேயே வழிமறித்து அழிக்கும் தொழில்நுட்பம் இது.

ஆனால், சமீப தாக்குதலில் குறுகிய காலத்துக்குள் அதிக ராக்கெட்களை ஏவி இதைத் தடுமாற வைத்து ஜெயித்தது ஹமாஸ். இதேபோல நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் David’s Sling, Arrow system போன்றவற்றையும் நிறுவியுள்ளது இஸ்ரேல். ஈரானோ, சிரியாவோ திடீரென தாக்கினாலும் பாதுகாக்க இந்த ஏற்பாடுகள்.

காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்

வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்களும் இருக்கின்றன. சுமார் 100 முதல் 400 வரையிலான அணு ஆயுதங்கள் அதனிடம் இருக்கலாம் என்று கணிப்பு சொல்கிறார்கள். நீர்முழ்கிக் கப்பலில் இருந்துகூட அணு ஆயுதங்களை ஏவுவதற்கு இஸ்ரேலால் முடியும்.

Also Read
இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 8: சமாதானத்துக்கான ஆலிவ் இலையை ஏந்தியவர் – யாசர் அராபத்தின் நிராசை!

இஸ்ரேல் இவ்வளவு தூரம் ராணுவ வல்லமை பெற்றதற்குக் காரணம், அமெரிக்கா. எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஒரு பக்கம்… அடிப்படைவாத அமைப்புகள் வளரும் களமாக இருக்கும் சிரியா, இராக், ஈரான் என்று மத்தியக் கிழக்கு ஆசியா விசித்திரமானது. அமெரிக்காவுக்கு இணக்கமான நட்பு நாடுகள் பல இருந்தாலும், எந்த நேரத்தில் யார் எதிராகத் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.

அதனால், இந்தப் பகுதியைக் கண்காணிக்கும் தனது விசுவாசியாக இஸ்ரேலை வைத்திருக்கிறது அமெரிக்கா. Foreign Military Financing என்ற திட்டத்தில் பல நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்கிறது.

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ உதவி செய்துள்ளது அமெரிக்கா.

இஸ்ரேலின் ராணுவத் தொழில்நுட்பமும் உலகப்புகழ் பெற்றது. துப்பாக்கிகள், மெஷின் கன்கள், ராக்கெட்கள், ராணுவக் கவச வாகனங்கள், டாங்கிகள், சிறு ரக போர் விமானங்கள், ராணுவ டிரோன்கள், ராணுவத் தகவல்தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள், ராக்கெட் தாக்குதல் தடுப்புக் கவச அமைப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறைய தொழிற்சாலைகள் இஸ்ரேலில் உள்ளன. உலகின் பல நாடுகளுக்கு இவற்றை விற்று பெருமளவில் இஸ்ரேல் சம்பாதிக்கிறது.

தாக்குதல் நடத்த கிளம்பும் இஸ்ரேல் டாங்கிகள்

இஸ்ரேலிடம் அதிகம் ஆயுதங்கள் வாங்குவது இந்தியாதான். என்னதான் அமெரிக்காவின் ஆசிய அடியாளாக இஸ்ரேல் இருந்தாலும், ரஷ்யா அந்த நாட்டிடம்தான் டிரோன்கள் வாங்குகிறது.

இன்னொரு பக்கம் சீனாவுக்கு அதிகமாக ஆயுதங்கள் விற்கும் நாடுகள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலின் கஸ்டமர்கள்.

‘இப்படி உலகத்துக்கே ஆயுதங்கள் விற்கும் நாட்டுடன் நமக்கு எதற்கு வம்பு? இஸ்ரேலை சீண்டினால் அமெரிக்காவின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும்’ என்று பெரும்பாலான அரபு நாடுகள் அதனுடன் சமாதானமாகப் போய்விட்டன.

அதனால், மரபுசார்ந்த ராணுவத் தாக்குதல் நடத்தும் போர்களை இனி செய்ய வேண்டியிருக்காது என்றே அந்த நாடு நம்புகிறது. அவர்களுக்குத் தலைவலியாக இருப்பது ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள்தான்.

Israeli Prime Minister Benjamin Netanyahu

உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பை வைத்திருக்கும் இஸ்ரேல், இவர்கள் விஷயத்தில்தான் தடுமாறுகிறது. இஸ்ரேலின் அந்த உளவு அமைப்புகளின் கரங்கள் உலகம் முழுக்க நீண்டிருக்கின்றன.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version