இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதல் ஆரம்பித்து எழுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. தற்பொழுது இந்த தாக்குதலை ஆரம்பமாக கொண்டு மத்திய கிழக்கு அரசியல் மூலோபாயம் திசை நகர்த்தப்படுகிறதா என்ற கேள்வி ஒன்று எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு பூகோள அரசியலில் இஸ்ரேலின் பாதுகாப்பு மீது இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஏன் இந்தியா கூட தனது கரிசனைகளை தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய வகையில் மேலைத்தேய அரசுகள் முன் நிற்கின்றன.
இதற்கு புலம்பெயர் யூதர்களின் நிறுவனங்கள் மேலை நாடுகளில் ஆளும் கட்சிகளிலும் எதிர்க்கட்சிகளிலும் கொண்டுள்ள செல்வாக்கு முதன்மை வாய்ந்தது என்றால் தவறில்லை.
யூத முதலாளிகளின் கைகளில் இருக்கும் நிதி அதிகாரமும் யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், ஆழ வேரூன்றி, அரச திணைக்களங்களில் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் கைகளில் இருக்கும் பலமும் முக்கியமானதாகும்.
இதில் முக்கிமான செல்வாக்கு பிரதான இணையத்தள ஊடகங்களும் தொலைகாட்சி, அச்சுப்பதிவு, வானொலி என பெருநீரோட்ட ஊடகங்களும் கொண்டுள்ள வலையமைப்பின் செயற்பாடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
அரசியல் பின்புலம் குறித்த விவகாரங்களில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மேலும் வலுகொடுப்பதாக பயன்படுத்தப்படுகிறது.
பார்வையாளர்கள் மத்தியிலும், வாசகர்கள் மத்தியிலும், நேயர்கள் மத்தியிலும் அதிகம் சுற்றில் விடக்கூடிய செய்திகள் ஓர் அரசியல் தலைவரின் விதியை நிர்ணயிக்க வல்லன. இந்த வகையில் ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அங்கத்தவர்களும் ‘நான்’, ‘எனது பதவி’ என்பதன் அடிப்படையிலேயே செயற்படுவர் என்பதை மையமாக கொண்ட மேலைத்தேய அரசியலை தெளிவாக புரிந்து கொள்ளும் ஒரு தருணமாக இன்றைய காலம் இருக்கிறது.
இது நாடுகளின் அரசியலில் மாத்திரமாக அல்லாது, வல்லமை மிக்க அரசியல் தலைமையின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபை வரையில் செயற்படுத்தப்படுகிறது.
உலகின் அரசியல் மூலோபாயத்தில் பயன்படுத்தப்படக்கூடிய ஒவ்வொரு அலகும் மிக நுணுக்கமாக நகர்த்தப்படும் மூலோபாயமாகும்.
இந்த விவகாரங்களில் இஸ்ரேலிய பலத்தை சர்வதேச அளவில் ஆய்வு செய்யக்கூடிய பல ஆய்வாளர்கள் மிக விழிப்புடன் கவனித்து வருதை காணக் கூடியதாக உள்ளது.
இந்த வகையில் மத்திய கிழக்கில் பலகாலமாக இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஓர் அரசாக குறிப்பிட்டு வரும் ஈரானை பலமிழக்க செய்வது குறித்த நகர்வுகள் ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. பல்வேறு ஊடகங்களிலும் ஈரான் மீதான அதீத குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
சர்வதேச அளவில் இராஜதந்திர முயற்சிகள் மூலம் ஈரானை அணுகுவதிலும் பார்க்க முழுக் குற்றத்தையும் ஈரான் மீது போடும் நிலை எழுந்து வருகிறது.
இது 1990களில் ஈராக் இரசாயன அழிவாயுதங்களை தயாரிக்கின்றது என்ற பெரும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாகும். இறுதியில் ஈராக்கிடம் இருந்து எந்த ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்படாத நிலை ஏற்பட்டது.
தற்பொழுது ஈரான் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில், “ஹமாஸ் போராளிகளுக்கு ஈரான் நிதி உதவியும் ஆயுதப்பயிற்சிகளும் கொடுத்து வருகிறது.
ஹமாஸ், தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஈரானுக்கு தெரிந்திருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன என்பதாகும். அது மாத்திரமல்லாது அண்மையில் சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் அமெரிக்க ஆதரவில் நடத்தி வரும் பேச்சுகள் ஈரானை விசனத்திற்குள் உள்ளாக்கி விட்டிருக்கிறது.
மேலும் இத்தகைய பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவுக்கு மிக விரையில் பொது மக்கள் தேவைக்கான அணுசக்தி திட்டத்தை பெற்று தர வல்லன.
அத்துடன் சவூதி-–அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கைகள் இஸ்ரேல்- –ஹமாஸ் பேச்சுகளுக்கு வழிவகுக்கலாம் என்பது ஈரானுக்கு ஏற்றதாக தெரியவில்லை” என்ற வகையிலும் செய்திகளும் ஆய்வுகளும் வெளிவருகின்றன.
மேற்குறிப்பிட்ட எல்லா விவகாரங்களும் நேரடியாக ஈரானுடன் பேசி தீர்த்து கொள்ளக்கூடிய விவகாரங்களாக இருந்து வருகின்ற போதிலும், ஈரானை சர்வதேச குற்றவாளியாக நிறுத்தும் வகையிலும் தனிமைப்படுத்தும் வகையிலும் பரவலான செய்திகள் உள்ளன.
அதேவேளை, அண்மையில் சீன தலைமையில் சவூதி அரேபிய, ஈரானிய தலைவர்கள் சந்திப்புகள் இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சீன தலைமையிலான பேச்சுகள், இஸ்ரேலிய ஆதரவு கொண்ட மேலைத்தேய தலைமைத்துவத்தையும் மூலோபாய நகர்வுகளையும் சீர் குலைக்கும் வகையிலானது என்பதை நினைவில் கொண்டு, ஏற்கெனவே போட்டி பொருளாதார வளர்ச்சியில் உள்ள சீனாவுக்கும் எதிராக இந்தியாவை கொண்டு வரும் அதேவேளை ஈரானுக்கும் எதிராக இந்தியாவை முன்நிறுத்தும் தந்திரமாக அண்மையில் இடம் பெற்ற இந்திய ஜி 20 பிரகடனத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய-– மத்தியகிழக்கு- ஐரோப்பா ‘வர்த்தக ஒழுங்கை’ திட்டத்திற்கு ஈரான் எதிரானது என்பதாக சித்தரிக்கப்படுகிறது.
ஆனால், இந்த இஸ்ரேலிய திட்டம் பலிக்குமா என்பது கேள்விக் குறியாகும் . இவ்வாறு ஈரானை தனிமைப்படுத்தக் கூடிய வகையிலான மேலைத்தேய நகர்வுகள் பலவற்றை உதாரணமாக கூறலாம்
இந்த நிலையிலேயே தற்பொழுது செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான ஹெளத்தி படைகளின் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது .
செங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த யேமன் நாட்டின் கிளர்ச்சி படைகளான ஹெளத்தி படைகள், ஈரானிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட தாக்குதல் பிரிவுகளாகும்.
அண்மையில் சவூதி அரேபியாவுடன் இடம்பெற்ற எல்லைப்புற மோதல்களில் ஈரானிய ஆளில்லா விமானங்களின் உதவியுடன் சவூதிப்படைகளை நிலை குலைய வைத்திருந்ததுடன் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களையும் நடத்தி இருந்தன.
இதனால் சவூதி இராணுவம் தனது படைகளை விலக்கி கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் பின்பு யுத்தம் அற்ற நிலையில் யேமன் சுதாகரித்து வரும் நிலையில் தற்பொழுது செங்கடலில் வர்த்தக கடற்கலன்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதல்கள் ஹெளத்தி படைகளால் தான் மேற்கொள்ளப்பட்டனவா அல்லது உள்நாட்டில் ஹெளத்தி படைகளுக்கு எதிராக போராடிய உதிரி படையணிகளால் மேற்கொள்ளப்பட்டனவா என்பது கேள்விக்குறியாகும் ஆனால், தாக்குதல்கள் அமெரிக்க தலைமையிலான நாடுகளை ஒன்று சேர்க்கும் தன்மையிலானது.
ஏனெனில், ஏற்கெனவே ஈரானிய முகவர்கள் என பலராலும் கருதப்படும் ஹெளத்தி படைகள் இதில் ஈடுபட்டிருப்பதானது ஈரானுக்கெதிராக சர்வதேசத்தில் பல நாடுகளை ஒன்று திரட்டும் தன்மை கொண்டதாகவே பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆனால், ஈரான் இதில் வசப்படுமா என்பது தான் முக்கியமான விவகாரமாகும்.
ஈரானை சர்வதேச அரங்கில் முழுக்குற்றவாளியாக மாற்றும் அனைத்து தந்திரங்களும் தற்பொழுது முடுக்கி விடப்பட்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் புவியியல் ரீதியாக வளைகுடாவை தனது கேந்திரமாக கொண்ட ஈரான், நாற்புறமும் மலைதொடர்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உள்நாட்டு யுத்தங்கள் தவிர வேறு எதனாலும் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாகாத தரைப்பிரதேசமாக அது உள்ளது.
இரண்டாம் உலக போர்காலத்தில் பிரிட்டன் மற்றும் சோவியத் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருந்தாலும் அவை நேசப்படைகளாக செயற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் திட்டங்கள் மிகவும் பாரதுாரமான பின்விளைவுகளை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை .
ஆனால், மத்திய கிழக்கில் உறுதியான அரசியல், இராணுவ மற்றும் உள்ளக நிர்வாக கட்டமைப்பை கொண்ட ஒரே அரசு தற்போது ஈரான் மட்டுமே. ஆனால், ஈரானின் இந்த உறுதியான நிலை இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு பாதகமானது என்பது இஸ்ரேலின் நீண்ட கால கொள்கையாக உள்ளது.
-லோகன் பரமசாமி-