சென்னை புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது?

சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், சிறுசேரியை அடுத்த பொன்மார் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது.

அருகில் சென்று பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண் உயிருக்குப் போராடியுள்ளார்.

அவரை மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து, இறந்த நபர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி(24) எனத் தெரியவந்தது. “இவர் கடந்த எட்டு மாதங்களாக துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்,” என வழக்கை விசாரித்த போலீசார் தெரிவித்தனர்.

வெற்றிமாறன்

 

கொலை செய்தது யார்?

கொலையுண்ட நந்தினி

நந்தினியை கொலை செய்தது யார் ? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? இப்படி உயிருடன் எரித்துக் கொல்வதற்கான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் விசாரண நடத்தினர்.

இந்த நிலையில், நந்தினியின் முன்னாள் காதலன் என்று கூறப்படும் வெற்றிமாறனை விசாரித்த போது, அவர் தான் நந்தினியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், வெற்றிமாறன் ஒரு திருநம்பி என்பதும், அவர் நந்தினியின் பள்ளிப் பருவ நண்பர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில்,“வெற்றிமாறன் தன் பள்ளிப்பருவத்தில் பாண்டி மகேஸ்வரி என்ற பெண்ணாக இருந்துள்ளார். அப்போதிலிருந்தே நந்தினியும், மகேஸ்வரியும் நண்பர்கள்.

பள்ளிப் பருவத்திற்கு பிறகு, பாண்டி மகேஸ்வரி தனது பாலினத்தை உணர்ந்து, வெற்றிமாறனாக மாறி திருநம்பியாகி உள்ளார்,”என்றார் அந்த அதிகாரி.

கொலை எப்படி நடந்தது?

கைது செய்யப்பட்டுள்ள வெற்றிமாறனின் வாக்குமூலத்தின்படி, வெற்றிமாறனும், நந்தினியும் காதலித்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக நந்தினி வெற்றிமாறனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு சிலருடன் பழகியதால்தான், சந்தேகப்பட்டு கொலை செய்ய முடிவு செய்ததாக கைதான வெற்றிமாறன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இறந்த நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக வெளியே அழைத்துச் சென்றுள்ளார் வெற்றி. நேற்று காலை கோயிலுக்குச் சென்று, பின் மதியம் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு, மாலை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் வெற்றிமாறன்.

“அங்கு தான் சர்ப்ரைஸ் கொடுப்பதாகக் கூறி, கண்களை முதலில் கட்டி, பின் கை கால்களையும் கட்டியுள்ளார். பிறகு தான், பிளேடால் கை, கால், மணிக்கட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் அறுத்துள்ளார்.

இதில், அந்தப் பெண் வலி தாங்காமல் துடிக்கவே, அவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, பெட்ரோல் வாங்கி வந்து, உயிருடன் நந்தினியை எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்,” என்றார் வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர்.

சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட வெற்றிமாறனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version