காஸாவில் போருக்கு பின்னரான தீர்வுத் திட்டம் என்னவாக இருக்கும் என்பதில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்தீனிய அதிகாரம் திரும்புதல், அல்லது அரபு – சர்வதேச இராணுவ அமைதிப்படை பிரசன்னம் அல்லது இஸ்ரேலிய மறு ஆக்கிரமிப்பு ஆகிய அனைத்தும் காஸாவின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் என இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அரபு – சர்வதேச அமைதிப்படை
ஆயினும், அரபு -சர்வதேச அமைதிப்படை பிரசன்னத்தை விட மீள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலே சாத்தியமாக இடமுண்டு.
காஸா போரின் உடனடி தாக்கம் என்பது, மத்திய கிழக்கு முழுவதும் மேலும் பரவும் பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கும் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஹமாஸ் அமைப்பு, தெற்கு இஸ்ரேலில் ஊடுருவி தாக்கிய பிறகு, போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு முக்கிய கேள்வியாக, காஸாவின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது இப்போது மிகவும் முக்கியமானது.
போர் முடிவின் பிறகு காஸாவில் என்ன அரசியல் ஒழுங்கு உருவாகும் என்பது தெளிவாக இல்லை. எவ்வாறாயினும், அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் பலஸ்தீன அதிகார சபையின் பிரதிநிதிகள் முன்னணி பாத்திரத்தை வகிப்பது முக்கியம் என்று ஜோ பைடன் நிர்வாகம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆயினும் காஸா பகுதிக்குள் இஸ்ரேல் அத்துமீறி புகுந்து ஹமாஸிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது சட்டபூர்வமற்றதானது என பல அரபு நாடுகள் கருதுகின்றன. இந்த யுத்தம் முடிவடைந்தவுடன் காஸாவில் ஹமாஸுக்குப் பதிலாக பலஸ்தீனிய அதிகார சபையில் மஹ்மூத் அப்பாஸ் தலைமை ஏற்பதற்கான சாத்தியக்கூறுகளை பைடன் அரசு சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும், இந்த யோசனை மிகவும் சிக்கலானதாகும். காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே அப்பாஸின் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
காஸாவில் அப்பாஸுக்கு ஆதரவு இல்லை:
அக்டோபர் 7 ஆம் திகதி நடந்த திடீர் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடியின் எதிர்பாராத விளைவுகளில் ஒன்று, பல ஆண்டுகளாக மேற்குக் கரையில் ஆதரவை இழந்து வரும் அப்பாஸின் ஃபத்தா கட்சியின் ஆதரவு மேலும் குறைவதாகும். ஆனாலும் ஹமாஸின் புகழ் அதிகரித்தது என்பது உண்மையே.
பலஸ்தீனியர்களுக்கு எதிரான யூத குடியேற்றவாசிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தடுக்க இஸ்ரேல் எந்தவிதமான கரிசனையையும் காட்டாதபோது அல்லது இஸ்ரேலுடனான ஒத்துழைப்புடன் மஹ்மூத் அப்பாஸ் அரசால் என்ன நன்மைகள் ஏற்படப்போகின்றன என்ற பலஸ்தீன மக்களின் ஆவேசமும் உள்ளது.
மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதன் பிரதிபலிப்பாக, காஸாவில் உள்ள பலஸ்தீனியர்கள் மஹ்மூத் அப்பாஸ் அரசு ஆட்சியை ஏற்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே கருதுகின்றனர்.
ஆயினும் ஜனநாயக வழியில் காஸாவில் பலஸ்தீனியர்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கருதப்படுகிறது.
காஸா நகரில் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவின் மத்தியில் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் அகதிகளாக அல்லல்படும் வேளையில், எந்த ஒரு அரபு நாட்டின் இராணுவமும் தங்களுக்கு உதவவில்லை என்ற ஆதங்கமும் உண்டு.
போருக்கு பிந்திய நிர்வாகம்:
காஸாவில் போருக்குப் பிந்திய நிர்வாகத்தை நிர்வகிக்கும் அரபு- சர்வதேச அமைதிப்படை பற்றி சில எண்ணங்கள் உள்ளன. ஆனால், அரபு நாடுகளின் கண்ணோட்டத்தில், பலஸ்தீனத்தை இஸ்ரேலும் அதன் மேற்கத்திய ஆதரவு அரசுகளுமே நிர்வாகிக்க வேண்டிய நெருக்கடி என்றும், அதை நிர்வகிப்பது அரபு நாடுகளின் பொறுப்பல்ல என்ற கண்ணோட்டமும் உள்ளது.
மேலும், காஸாவின் பாதுகாப்பு பொறுப்பில் அமர்த்தப்படும் எந்தவொரு அமைதிக்கான அரேபிய இராணுவப் படையும் பெரும் ஆபத்துக்களுக்கு உட்படும். பஹ்ரேன், எகிப்து, அல்லது ஜோர்தானியப் படைகள் இஸ்ரேலின் பங்காளிகளாகவே மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது.
இதனாலேயே போருக்குப் பிந்திய காஸா ஆளுகையின் பொறுப்பை அரபு – சர்வதேச அரசுகள் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் அரிதாக உள்ளன. காஸாவில் தற்போதைய மோதலுக்குப் பிறகு பொதுமக்கள் மேலும் கடும் ஆத்திரத்துடன் இருக்கும் தருணத்தில், காஸா ஆளுகையின் பொறுப்பை அரபு – சர்வதேச அரசுகள் ஏற்றுக்கொள்வதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகங்களும் உள்ளன. காஸாவில் மனிதாபிமான தேவைகள் அதிகமாக இருக்கும் இந்த வேளையில், மக்கள் ஆத்திரம் மற்றும் வெறுப்பு நிறைந்தவர்களாக உள்ளார்கள்.
டிசம்பர் மாத தொடக்கத்தில் பஹ்ரேனில் நடந்த ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) மனமா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஜோர்தானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி பேசுகையில், காஸாவுக்கு அரபு துருப்புக்கள் எதுவும் செல்லாது என்றும் அரபு நாடுகளை பலஸ்தீன பொதுமக்கள் எதிரிகளாக பார்க்க வேண்டிய தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். அரபு அமைதிப்படை பற்றிய யோசனை நிராகரிக்கப்பட வேண்டும் என்பதில் அரபு அரசாங்கங்கள் முழுதாக உடன்படுகின்றன என்று ஜோர்தானின் தலைமை இராஜதந்திரி வலியுறுத்தினார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம், எதிர்காலத்தில் காஸா ஆளுகையில் இஸ்ரேல் நேரடிப் பங்கை வகிப்பதைப் பற்றிக் குரல் கொடுத்துள்ளது. ஆயினும் ஹமாஸுக்குப் பிந்திய காலகட்டத்தில், காஸா மீதான நேரடி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு திரும்பக் கூடாது என்று அமெரிக்க பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தது 18,000 பாலஸ்தீனியர்கள் காஸாவில் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, இஸ்ரேல் காஸாவில் தனது இராணுவப் பிரசன்னத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தால், எதிர்காலத்தில் காஸாவில் தொடர் வன்முறை மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும். இதுவே இஸ்ரேலின் இராணுவத்திற்கு தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் ஏற்கெனவே நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, ஒரு தந்திரோபாய ஆக்கிரமிப்பு என்பது அமைதிக்கான வெற்றியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அமைதி திரும்புவது வெகு தொலைவில் தான்.
நிலைமை சீரடைவதற்கு நீண்ட காலம் ஆகும் என்று மிலனை தளமாகக் கொண்ட சர்வதேச அரசியல் ஆய்வுகள் நிறுவனத்தின் (ISPI) அறிக்கை விளக்கியுள்ளது.
இறுதியில், காஸாவில் போருக்குப் பிந்திய நிலைமைக்கு இஸ்ரேலிய தலைமை ஒரு தெளிவான, யதார்த்தமான மூலோபாயத்தை வகுக்கத் தவறிவிட்டது என்று உறுதியாகக் கூறலாம். அதேவேளை, பலஸ்தீனியர்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு மீண்டும் திரும்ப முடியாது. அத்தகைய மறுசீரமைப்புக்கான பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் எங்கு வாழ வைக்கப்படுவார்கள் என்பதும் பாரிய கேள்விக்குறியாகும்.
இரு நாடுகள் தீர்வு
சர்வதேச சமூகம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை காட்டுகின்றனவா என்பதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
துரதிஷ்டவசமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கொள்கை வகுப்பாளர்கள் ஹமாஸே மோதலுக்குக் காரணம் என்று மதிப்பிடுகிறார்கள். மோதலுக்கு ஹமாஸ் மட்டும் காரணம் அல்ல. பலஸ்தீனியர்கள் இஸ்ரேலை எதிர்க்கக் காரணமான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், காஸாவிலோ அல்லது இஸ்ரேலிலோ எந்த நேரத்திலும் அமைதி இருக்காது என்பது வரலாற்றுப் பாடமாகும்.
காஸாவில் இன்னொரு ‘நக்பா’ என்ற திட்டத்தை நிறைவேற்ற தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் முயலுமா என்பது பற்றி இப்போது கூற முடியாது விட்டாலும், இஸ்ரேல் அடைய விரும்பும் இன அழிப்பு இலக்குகள் ஆபத்தானவையாகவே தெரிகிறது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா Virakesari