“எதிர்காலத்தில் (போர் முடிந்த பிறகு) காஸா மீதான பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.” – பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த படுகொலைகளின் எண்ணிக்கையைக் கண்டுகொள்ளாத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரை போரை நிறுத்த முடியாது எனக் கூறிவருகிறார்

இப்படியிருக்க, அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கிய நாள்முதல், மௌனமாக இருந்துவந்த ஹமாஸ் குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar), இஸ்ரேலுடன் முன்னெப்போதுமில்லாத கடுமையான போரை ஹமாஸ் எதிர்கொள்வதாக முதல்முறையாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தை ஒழித்துக்கட்டும் திட்டத்துடன், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையில் அமைதி நிலவ மூன்று நிபந்தனைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) நாளிதழில் வெளியான செய்தியில், “ஹமாஸ் ஆட்சியாளர்களும், பாலஸ்தீன சமூகமும் அழிக்கப்படும்வரை அமைதி நிலவாது.

`ஹமாஸ் அழிக்கப்படவேண்டும், காஸா ராணுவமயமாக்கப்பட வேண்டும், பாலஸ்தீன சமூகம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும்’. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அண்டை நாடுகளுக்கு இடையே அமைதி நிலவுவதற்கான மூன்று நிபந்தனைகள்தான் இவை.

எதிர்காலத்தில் (போர் முடிந்த பிறகு) காஸா மீதான பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

அதோடு, தற்காலிக பாதுகாப்பு மண்டலத்தையும் உருவாக்க வேண்டும்” என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் இத்தகைய அறிக்கை வெளியான அடுத்த 24 மணிநேரத்தில், மத்திய ஜபாலியா மற்றும் தெற்கில் உள்ள கான் யூனிஸில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவமும் தெரிவித்திருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version