காஞ்சிபுரத்தில் கொலை நடந்த சில மணி நேரத்தில் 2 இளைஞர்களை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். சரணடையுமாறு எச்சரித்த போது அரிவாளால் தாக்கியதால் வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட வேண்டியதாயிற்று என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட இருவரும் சில மணி நேரத்திற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் ஒரு நபரை பழிக்குப் பழி வாங்கும் வகையில் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
கொலையும், அதனைத் தொடர்ந்து என்கவுண்டரும் நடந்தது எப்படி?
தொழிற்சாலைகள் நிறைந்த கோவில் நகரம் காஞ்சிபுரம்
கோவில் நகர் என்று அழைக்கப்படும் காஞ்சி மாநகரில் பல்வேறு தொழிற்சாலை மற்றும் கோவில் சார்ந்த கடைகள், பட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதில் மாதம் மற்றும் வார மாமுல் வாங்குவதில் யார் கெத்து..? யார் பெரிய ரவுடி..? என்று போட்டியில் பிரபல ரௌடி மறைந்த ஸ்ரீதர் தனபால் தொடங்கி தற்போது வரை 15 ஆண்டு காலமாக பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அவ்வப்போது போலீசாரும் இந்த குற்ற செயல்களை தடுக்குவதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் கொலை சம்பவங்கள் மற்றும் கஞ்சா கடத்துதல், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்துதல் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மது போதையில் கொலை
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நாராயணமூர்த்தி, ரகு மற்றும் அன்பு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வெள்ளக்குளம் பகுதியில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதில் ரகு மற்றும் நாராயணமூர்த்தி இருவரும் இணைந்து சக நண்பரான அன்பை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இருவருக்குள் யார் பெரியவர் என்று போட்டியில் ரகுவை கொலை செய்ய திட்டமிட்ட நாராயணன் மது அருந்த அதே பகுதிக்கு வர வைத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட ரகு, நாராயணன் எடுத்து வந்த கத்தியால் அவரையே குத்தி கொலை செய்துள்ளார். இதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நாராயணன் இறப்பை தாங்க முடியாத அவரின் இரண்டாவது சகோதரரான பிரபா, ரகுவை பழிவாங்க தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் .
இந்நிலையில் ரகு சிறையில் இருந்து வந்து சென்னையில் தங்கி காஞ்சிக்கு வர முடியாமல் இருந்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சிக்காக ரகு வீட்டிற்கு வந்தபோது ரகுவை கொலை செய்ய முயன்ற போது, தவறுதலாக ரகுவின் அண்ணன் தேமுதிகவின் மாநில பேச்சாளர் சரவணன் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் ரகு தலை மறைவானார்.
பழி தீர்க்க தொடர் முயற்சி
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ரகு தனது தந்தையாரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்காக வீட்டுக்கு வந்ததை அறிந்த பிரபா கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு மற்றும் பட்டா கத்தியுடன் வீட்டில் மீது ஏறி வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. ரகு அப்போதும் தப்பித்துவிட அவரது மற்றொரு சகோதரரான ஆட்டோ ஓட்டுநர் செந்தில் கொலையுண்டார்.
பிரபாவை கொலை செய்ய காஞ்சிபுரம் வந்த குழு
ஹெல்மெட் அணிந்து வெட்டிக்கொலை
இந்த நிலையில் ரகு இந்த பகுதியில் இல்லாததால் பிரபா மிகப்பெரிய குழுவை உருவாக்கியுள்ளார்.
தியாகுவின் கூட்டாளியாக மாறிய பிரபா பல்வேறு கொலை முயற்சி கஞ்சா கடத்துதல் உள்ளிட்ட 40 வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று காலில் முறிவு ஏற்பட்டு நேற்று நீதிமன்றத்தில் கையொப்பமிட சென்றுள்ளார்.
இதை தெரிந்து கொண்ட ரகுவின் கூட்டாளிகள் சென்னையில் சிறையில் பழக்கமான நண்பர்களுடன் இணைந்து சிறிய கார் மூலம் பிரபாவை கொலை செய்ய காஞ்சிபுரம் வந்தனர் .
அவர்கள் பிரபாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்துள்ளனர். பட்டப் பகலில் இந்த சம்பவம் அரங்கேறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்கவுண்டர் செய்ய பயன்படுத்திய குண்டுகள்
தனிப்படை அமைத்து என்கவுண்டர்
இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டது. நான்கு தனிப்படைகள் மாவட்டம் முழுவதும் சிசிடிவி காட்சிகளை வைத்து கார் எண்ணை வைத்தும் தேடி வந்தனர்.
பிரபாவை கொலை செய்த குற்றவாளிகள் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள பொன்னேரிக்கரை புதிய ரயில்வே நிலையம் மேம்பாலம் கீழ் பகுதியில் மது அருந்தி கொண்டிருப்பதாக கிடைத்த தகவல்படி சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமார் இருவரும் சென்று அவர்களை சரணடைய கேட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் சரணமடைய மறுத்து போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த மற்றொரு தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர் என்பவர் மீண்டும் ரகுவை சரண் அடையுமாறு எச்சரித்துளார். அதற்கும் மறுத்த இருவரும் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உடனடியாக ரகு மற்றும் ஆசான் இருவரையும் போலீசார் சுட்டு கொலை செய்தனர். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்கவுன்டர்கள் மீது சட்டப்படியான விசாரணை நடத்திடவும், மேலும் என்கவுன்டர் கொலைகள் நடக்காமல் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
காவல்துறையினர் மீது தாக்குதல்.
என்கவுண்டரின் போது போலீசார் காயம்
என்கவுண்டருக்கு முன்னதாக அவர்கள் இருவரும் தாக்கியதில் இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வடக்கு மண்டல தலைவர் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் சரக துணைத் தலைவர் பொன்னி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்ட காவலர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாக காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி கூறியுள்ளார்.
என்கவுண்டர் தொடர்பாக மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “ரவுடி பிரபாகர் மீது 31 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று பிள்ளையார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகள் அதிகாலையில் ரயில்வே மேம்பாலத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவல் கிடைத்தது.
குற்றவாளிகளை பிடிக்க சம்பவ இடத்திற்கு சென்ற காவலர் ராமலிங்கம் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கியதால் காயம் அடைந்தனர்.
உடனிருந்த காவலர்கள் ரகு என்கின்ற ரகுவரன், பாஷா என்கின்ற அசேன் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
அப்பொழுது அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவரது உடல்களும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும் இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். ” என்றார்.
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் காஞ்சிபுரத்தில் பேட்டி
375 ரவுடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஐஜி கண்ணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் சரகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறை முனைப்புடன் செயல்படுவதாகவும் மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 375 ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களது நடவடிக்கையை காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்,
குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் த க்கியதில் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் ஆகியோரை சந்தித்து நடந்த விஷயங்களை கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த ஐஜி கண்ணன்,”காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதால் அவ்வப்போது ரவுடிகள் புதிதாக உருவாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 375 ரவுடிகளை கண்காணித்து வருகிறோம். தொழிற்சாலைகளில் ரவுடிகள் யாரேனும் மாமூல் கேட்டு மிரட்டினால் அதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம் தகவல் தெரிவிக்காவிட்டாலும் கூட நவீன தொழில்நுட்ப உதவியுடன் அவர்களை கண்டுபிடித்துவிடுவோம்” என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீப காலத்தில் என்கவுன்டர் மூலம் குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது
“போலீஸ் என்கவுன்டரும் கொலையே”
காஞ்சிபுரத்தில் 2 இளைஞர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக ஆற்றல் சமூக மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான லூசியாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“ஒருவரை கொலை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. தவறிழைப்பவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன்பு விசாரணை நடத்திய பின்பு அதன்படி தான் தண்டிக்கப்பட வேண்டும். போலீஸாருக்கு யார் இந்த அதிகாரத்தை வழங்குகின்றார்கள்.
மேலும் ரவுடிகள் உருவாக்கம் என்பது அவனுடைய தனிப்பட்ட ஆசையாக பெரும்பாலும் இருப்பதில்லை. சமூக புறக்காரணிகள் மூலமாகவே அவன் உருவாகின்றான். எனவே அவன் உருவாகும் சூழல் மற்றும் அவன் மீது பதியப்படும் வழக்குகள் கொண்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் .
தற்பொழுது பெரும்பாலும் அரசியல்வாதிகள் பணக்காரர்களின் பாதுகாப்பிற்காகவே என்கவுன்டர்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
பெரும்பாலும் ஒருவர் தமக்காக கொலைகள் செய்வது குறைவே. பெரும்பாலும் மற்றவர்களுக்காகவே செயல்படுகின்றார்கள். அந்த காரணிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
ஒரு சில நேரங்களில் காவல்துறையினரின் தவறான வழிகாட்டுதலும் அல்லது தவறான தண்டிக்கும் முறைகளும் ஒருவனை ரவுடியாக மாற்றி விடுகின்றன.
லூசியா, ஒருங்கிணைப்பாளர், ஆற்றல் சமூக மையம்
என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறலான செயலாகும். யாருக்கும் யாரையும் கொள்வதற்கு உரிமை இல்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும் இதை இதை ஆய்வு செய்ய வேண்டும் இது தொடர்கதை ஆகாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
“தீயவர்களை அழிப்பதனால் மட்டும் தீமைகள் அழிவதில்லை. எனவே போலீசார் என்கவுன்டர் செய்ததும் கொலை தானே. குற்றவாளி என்றாலும் அவனுக்கு உரிமை உள்ளது. சட்டத்தின்படி மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு தர வேண்டும். போலீசார் என்கவுண்டர் செய்வது தற்பொழுது அதிகரித்து உள்ளது இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்” என்றார் லூசியா.