மாமியார் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மருமகன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பட்டா ஜோஷி. இவர் கடந்த 1993-ம் ஆண்டு வேலைத் தேடி சென்னை வந்தார்.

கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜோஷி வேலைப்பார்த்தபோது ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த இந்திரா என்பவரை காதலித்தார்.

பின்னர் இருவரும் கடந்த 13.7.1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அதனால் ஜோஷியைப் பிரிந்து அவரின் அம்மா வீட்டுக்கு இந்திரா சென்றார். இதையடுத்து இந்திரா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனால் ஆத்திமடைந்த ஜோஷி கடந்த 9.8.1995-ம் தேதி இந்திராவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு இந்திரா, அவரின் அம்மா ரமா, இந்திராவின் சகோதரர் கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.

அப்போது இந்திரா குடும்பத்தினருக்கும் ஜோஷிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோஷி கத்தியை எடுத்து அவர்களை குத்த முயன்றார்.

அதை தடுக்க முயன்ற போது இந்திராவுக்கும் கார்த்திக்குக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஜோஷியிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆனாலும் மருமகன் ஜோஷியிடம மாமியார் ரமா மட்டும் சிக்கிக் கொண்டார். அதனால் ரமாவைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த ஜோஷி, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்திரா குடும்பத்தினர் புகாரளித்தனர். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜோஷியைத் தேடிவந்தனர்.

ஆனால் அவரோ தலைமறைவாகி விட்டார். பல ஆண்டுகளாக ஜோஷியை அவரின் சொந்த மாநிலத்தில் ஆதம்பாக்கம் போலீஸார் தேடிச் சென்றும் அவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

கொலை நடந்த போது ஜோஷிக்கு 26 வயது. இதையடுத்து தலைமறைவு குற்றப்பத்திரிகையை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ஜோஷியைப் பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்ட ஜோஷி

இதையடுத்து தலைமறைவாக இருக்கும் ஜோஷியைப் பிடிக்க மடிப்பாக்கம் உதவி கமிஷனர் புருஷோத்தம்மன் மேற்பார்வையில், ஆதம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், தலைமைக் காவலர் பாலமுருகன், முதல் நிலைக்காவலர் எட்வின் தீபக், காவலர் மணிவண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் ஜோஷியின் பிளாக் அன்ட் ஓயிட் (கறுப்பு வெள்ளை புகைப்படம்) போட்டோவைக் கையில் எடுத்துக் கொண்டு சில வாரங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்துக்குச் சென்றனர்.

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரவணன் விவேக்கிடம் ஜோஷியின் புகைப்படத்தைக் காண்பித்து அவரைப் பிடிக்க உதவி கேட்டனர்.

இதையடுத்து ஒடிசா போலீஸார், தமிழக போலீஸாருடன் சேர்ந்து ஜோஷியின் சொந்த ஊருக்குச் சென்று அவர் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

அப்போது ஜோஷி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வருவது தெரியவந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீஸார், ஜோஷியை மடக்கிப் பிடித்தனர். அப்போது ஜோஷி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.

இருப்பினும் ஜோஷியின் அடையாளங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அவரைப் பிடித்த தமிழக போலீஸார், ஒடிசா போலீஸாருக்கு நன்றி கூறிவிட்டு சென்னைக்கு ஜோஷியை அழைத்து வந்தனர்.

கொலை நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 26 வயதில் தலைமறைவான ஜோஷி, 54 வயதில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோஷியை, ஆதம்பாக்கம் போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, போலீஸ் உயரதிகாரிகள் தனிப்படை போலீஸாரை பாராட்டினர்.

Share.
Leave A Reply

Exit mobile version