“என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று வெறுப்பு மற்றொன்று அன்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்,” என்று தனது இசைப் பயணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வார்த்தைகள் இவை.
கடந்த 1992ஆம் ஆண்டு, தனது முதல் திரைப்படமான ‘ரோஜா’ மூலம் இந்திய சினிமாவின் இசைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் எனச் சொன்னால் அது மிகையாகாது.
இன்றுவரை தான் இசையமைக்கும் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு வகையான புதுமையைச் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 56ஆவது பிறந்த நாள்.
இரவு நேரங்களில் இசையமைக்கும் வழக்கம்
“ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு இரவு நேரத்தில் சென்றால் அங்கே பல பிரபலாமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்,
நடிகர்கள் அவருக்காகக் காத்திருப்பதைக் காணலாம் அல்லது அவர்கள் தங்களது திரைப்படப் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுடன் ஆலோசித்து கொண்டிருப்பார்கள்.
நாம் கேட்டு ரசித்த பல பாடல்கள் மற்றும் ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கான பிண்ணனி இசையும் பாடல்களும் இரவு நேரத்தில் உருவாக்கப்பட்டவையே. இப்போது அந்த வழக்கத்தைக் கொஞ்சம் மாற்றியுள்ளார், பகலிலும் இசைப் பணிகளைக் கவனித்து வருகிறார்,” என்கிறார் அனுபமா.
“அவரை 1990களில் பேட்டி எடுக்கச் செல்லும்போது, பாலிவுட்டை சேர்ந்த பலரை அவரது ஸ்டுடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு தமிழரின் இசைக்காக இந்தி திரையுலகமே சென்னை வந்து காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது,” எனக் கூறுகிறார் அனுபமா.
மிகச் சிறந்த மனிதர், ஆன்மீகவாதி
ரம்ஜான் மாதத்தின்போது 30 நோன்புகளையும் தவறாமல் கடைபிடிப்பார். ஒவ்வொரு நோன்பு நாள் அன்றும் மாலையில், அவரது வீட்டிற்கு எதிரே உள்ள அரசுப் பள்ளியில் ஏழைகளுக்கான ‘ஜக்காத்’ எனும் உதவியை வழங்குவார்.”
“செய்திகள் சேகரிப்பதற்காக அவரைப் பல முறை சந்தித்துள்ளேன். ஏதாவது கிசுகிசு கிடைக்குமா என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பேன். ஆனால் யாரைக் குறித்தும் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியது கிடையாது. அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருவார்.
ஒரு பிரபலமான நபர் ஒருமுறை அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். அது பற்றிக் கேட்டபோதும்கூட, அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை என சிரித்துக்கொண்டே சொன்னார்,” என்கிறார் அனுபமா.
மேலும், “எப்படி இவரால் இவ்வளவு பாஸிட்டிவான நபராக இருக்க முடிகிறது என நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
ஒருவேளை இப்படி ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும் நல்ல மனிதராகவும் இருப்பதால்தான் கடவுள் அவரை இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார் போல,” என்று கூறினார் அனுபமா.
ஆஸ்கர் விழா மேடையில் தமிழில் பேசத் தூண்டிய நிகழ்வு
விருது பெற்ற அனுபவம் குறித்துக் கேட்டபோது, “பின்னணி இசை விருதுக்காக என் பெயர் அறிவிக்கப்பட்டபோது இது கனவா அல்லது நிஜமா என நினைத்தேன்.
மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது. நான் ஒரு கிளேடியேட்டரை போல் உணர்ந்தேன். மேடையில் பேசுவதற்குக் கூட ஏதும் தயாரித்து வைக்கவில்லை. இயல்பாக என்ன தோன்றுகிறதோ அதையே பேச நினைத்தேன்.”
“நான் கீழே அமர்ந்திருந்த போது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ… இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். அதனால்தான் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன்.
நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். கடவுள் அருள் புரியட்டும் என்று சொன்னேன். சிலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டனர். மதத்தை ஒப்பிட்டு பேசினர்,” என்று கூறினார்.
விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பு
ஆஸ்கரை வென்று நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவத்தைக் குறித்து பேசும்போது, “ஆஸ்கர் விருதுகளை என் கைப்பையில் வைத்திருந்தேன். விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் என் பையை பரிசோதித்தபோது, சுமார் 100 அதிகாரிகள் வரை திரண்டிருந்தனர்.
ஒரு அதிகாரி தனது கையில் 2 ஆஸ்கரை தூக்கிக் காட்டி நான் என்ன வைத்திருக்கிறேன் பாருங்கள் என்றார். உடனே அங்கு சிரிப்பலை எழுந்தது,” என அவர் நினைவுகூர்ந்ததாக அனுபமா கூறினார்.
திலீப்குமார் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை
அம்மா, அக்கா, தங்கைகள் எனப் பெண்கள் சூழ்ந்த உலகம் ஏ.ஆர்.ரஹ்மானுடையது. தன்னுடைய தந்தையின் இறப்பால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமாக இசை உலகிற்குள் நுழைந்திருக்கிறார். திலீப் குமார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ரஹ்மானாக மாறினார்.
தன்னுடைய இயற்பெயரான திலீப் குமாரை வெறுத்திருக்கிறார். புதியதொரு மனிதனாக உருமாற விரும்பியுள்ளார். அதன் காரணமாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார்.
எண்ணற்ற விருதுகள்
விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம்.
ஏ.ஆர்.ரஹ்மான் 1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் விருது மட்டுமில்லாமல் கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வென்றிருக்கிறார். 2010ஆம் ஆண்டில் ரஹ்மானுக்கு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது.
தமிழ் மீதான பற்று
ககாந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’99’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தின் கதாநாயகனும் மேடையில் இருக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் இந்தியில் பேசினார். அப்போது, “இந்தியா?” எனக் கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார் ரஹ்மான்.
கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
அமித் ஷாவின் பேச்சு வெளிவந்த மறுநாளே அதுகுறித்து திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்ப, ‘தமிழ்தான் இணைப்பு மொழி’ என அவர் கருத்து கூறினார்.
அதற்கு சில நாட்கள் முன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழுக்கும் அமுதென்றுபேர்!’ என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் ‘தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!’ என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.
நேர்மறையான எண்ணங்கள்
எப்பொழுதும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே சிந்திப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். தனக்கு கிடைத்த தோல்விகள், ஏமாற்றங்களால் அந்த பக்குவம் வந்ததாக கூறுவார்.
“Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற தனது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவின்போது, திரைத்துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்காத வரையில் தோல்வியைச் சந்தித்ததாகவும், அப்போதெல்லாம் தனக்குள் தற்கொலை எண்ணம் உருவானதாகவும் பகிர்ந்திருந்தார்.