அமெரிக்காவில் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் ஒரு பகுதி உடைந்து ஆயிரக்கணக்கான அடிகள் காற்றில் பறந்தது.

அமெரிக்கன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி சென்று கொண்டிருந்தது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் உட்பட வெளிப்புறப் பகுதி உடைந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் அதன் 65 போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களையும் ‘தற்காலிகமாக’ தரையிறக்கியுள்ளது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் இந்த விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

விமானப் பணியாளர்கள் காற்றழுத்தப் பிரச்னை குறித்துப் புகாரளித்ததை அடுத்து விமானம் பத்திரமாகத் திரும்பியதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தில் 177 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


போயிங் நிறுவனம் விளக்கம்

இந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம், இந்தச் சம்பவம் குறித்து நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும், நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு எந்த விசாரணைக்கும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஃப்ளைட்வேர் (Flightwear) மற்றும் ஃப்ளைட்ராடார் 24 (FlightRadar24) என்ற விமான கண்காணிப்பு இணையதளங்களின்படி, அந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 9 ஆகும்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாகவும், விமானம் போர்ட்லேண்டில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிறுவனம், “இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. இருப்பினும், எங்கள் விமானக் குழுவினர் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர் என்பதுடன் நிலைமையை பாதுகாப்பாக கையாள தயாராக உள்ளனர்,” எனத்தெரிவித்துள்ளது.

விமான கண்காணிப்புத் துறையின் தரவுகளின்படி, விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தபோது 16,000 அடி (4,876 மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்று தெரியவந்துள்ளது.

‘விமானத்தின் ஜன்னல்கள் உடையத் தொடங்கின’

ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட படங்கள், இரவு வானத்தின் பின்னணியில் பறக்கும் விமானத்தின் சில பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டதைக் காட்டுகின்றன.

மற்றொரு படம் உடைந்து விழுந்த பகுதிக்கு அருகில் உள்ள இருக்கையைக் காட்டுகிறது. ஜன்னல் இருக்கை காலியாக இருந்ததாகவும், குஷன் இல்லாமல் முன்னோக்கி சாய்ந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இந்தப் படங்களின்படி, பாதிக்கப்பட்ட பகுதி விமானத்தின் மூன்றாம் பிற்பகுதியில், இறக்கை மற்றும் என்ஜினுக்குப் பின்னால் இருந்தது.

ஃபியூஸ்லேஜின் ஒரு பகுதி என்பது சில விமான நிறுவனங்களால் கூடுதல் அவசர வெளியேற்றப் பகுதியாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் அலாஸ்கா ஏர்லைன்ஸில் அல்ல.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருவதாக அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் சமூக ஊடகமான X இல் பதிவிட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு மீண்டும் சிக்கல்

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பல பாதுகாப்பு சிக்கல்கள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு “விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றில் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட விமானம்” என்று அழைக்கப்படுகிறது.

மார்ச் 2019 இல், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இதேபோன்ற சூழ்நிலைகளில் இரண்டு விபத்துகளில் பயணிகளின் உயிரிழப்புக்களுக்குக் காரணமாக இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளாக அவை பயன்படுத்தப்படவில்லை.

ஒவ்வொரு மேக்ஸ் விமானமும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டது. அதன் பின்னரே அந்த ரக விமானத்திற்கு மீண்டும் போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் வெளியில் இருந்து பார்ப்பதற்குத் தெரியவில்லை. மேலும், இது போன்ற மாற்றங்களை வழக்கமாக பயணிகள் கவனிப்பதில்லை.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, நீண்ட ஆய்வுக்குப் பிறகு, இந்த வகை விமானங்களின் பிழைகள் சரிசெய்யப்பட்டதாகவும், போயிங் நிறுவனம் இப்போது 737 மேக்ஸ் வகை விமானங்களை விரைவாக ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கூறிவருகிறது.

போயிங் நிறுவனத்தின் தரவுகளின்படி, சுமார் 13 லட்சத்து 737 மேக்ஸ் விமானங்கள் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கடந்த மாதம் அனைத்து விமான நிறுவனங்களையும் பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளில் போல்ட்டுகள் தளர்வாக இருக்கின்றனவா என மேக்ஸ் வகை விமானங்களில் ஆய்வு நடத்த வலியுறுத்தியிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version