கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்).

இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது.

இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited – PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.

இந்த வாயு, மின்சார உற்பத்தி, உரத் தயாரிப்பு, மற்றும் சி.என்.ஜி.யாக மாற்றப் பயன்படுகிறது.

மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி

இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு என்ன?

இந்த ஒப்பந்தம், கோவாவில் 2024-ஆம் ஆண்டு இந்திய எரிசக்தி வாரத்தின் முதல் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) கையெழுத்தானது.

தற்போது இருக்கும் ஒப்பந்தத்தை விட மிகக் குறைந்த விலையில் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் தனது அறிக்கையில், எரிவாயு இறக்குமதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 1999-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், அது 2028-ஆம் ஆண்டு வரையிலானது என்றும் கூறியிருந்தது.

இப்போது புதிய ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டு துவங்கி 20 ஆண்டுகளுக்குச் செய்யப்பட்டுள்ளது.

எரிவாயு வாங்கப்படும் மொத்த விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத போதும், அதன் விலை தற்போதைய ஒப்பந்தத்தை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆங்கில செய்தித்தாளான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ படி, இந்தப் புதிய ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 50,000 கோடி இந்திய ரூபாயைச் சேமிக்க வழிவகுக்கும்.

பெட்ரோநெட் நிறுவனம் இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 85 லட்சம் டன் எல்.என்.ஜி வாயுவை இறக்குமதி செய்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தானது, இது 2028 வரை செல்லுபடியாகும்.

தற்போது இது 2048 வரை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் டன்களுக்கான மற்றொரு ஒப்பந்தம் 2015-இல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தங்கள்மீது தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் எரிவாயு வளம்

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக, இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

கத்தார் உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதியாளராக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா கத்தாரை முந்தியது.

கத்தார் ஆண்டுதோறும் 7.7 கோடி டன் எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, இதனை 2027-ஆம் ஆண்டு 12.6 மில்லியன் டன்கள் ஆக அதிகரிக்க விரும்புகிறது. இதன்மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அதன் பிடியை வலுப்படுத்த எத்தனிக்கிறது. இவ்விரு கண்டங்களில் எரிவாயு ஏறுமதிக்குள் அமெரிக்கா நுழைய முயற்சிக்கும் நிலையில் கத்தாருக்கு இது முக்கியமானதாகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. டிசம்பர் இறுதியில் மரண தண்டனை குறைக்கப்பட்டது.

 

இந்தியாவின் எரிவாயு தேவை

ஆற்றல் நுகரும் உலக நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொண்டுள்ளது. இதை அடைவதற்கு இயற்கை எரிவாயு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முயற்சியின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டின் பங்கை 6.3% இருந்து 15% ஆக அதிகரிக்க இந்திய அரசு விரும்புகிறது.

பெட்ரோநெட் மற்றும் கத்தார் எரிசக்தி இடையே தற்போதுள்ள நீண்ட கால ஒப்பந்தம் இந்தியாவின் எல்.என்.ஜி இறக்குமதியில் 35% ஆகும் என்றும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்றும் பெட்ரோநெட் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் குமார் சிங் கூறுகிறார்.

இந்த ஒப்பந்தம் எரிசக்தி பாதுகாப்பையும், தூய்மையான எரிசக்தி விநியோகத்தையும் உறுதி செய்வதோடு இந்தியா மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல உதவும் என்றும் அவர் கூறினார்.


இந்தியா எவ்வளவு எரிவாயு இறக்குமதி செய்கிறது?

கத்தாரைத் தவிர, இந்திய நிறுவனங்கள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன் எல்.என்.ஜி.க்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. ஆனால் இந்தியா பயன்படுத்தும் எல்.என்.ஜி.யில் பாதிக்கும் மேற்பட்டது கத்தாரில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ வர்த்தகத் தரவுகளின்படி, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 2 கோடி டன் எல்.என்.ஜி.யை இறக்குமதி செய்தது. இதில் சுமார் 54% (சுமார் 1.1 கோடி டன்கள்) கத்தாரில் இருந்து வந்தது.

அதே நிதியாண்டில், இந்தியா கத்தாரில் இருந்து மொத்தம் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளது, இதில் எல்என்ஜி இறக்குமதி சுமார் 69,200 கோடி ரூபாய் ஆகும். இது மொத்த இறக்குமதியில் 49.5% ஆகும்.

இயற்கை எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோலை விட தூய்மையானதாகக் கருதப்படுகிறது. இது கச்சா எண்ணெயை விட மலிவானது.

இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியைச் சார்ந்துள்ளது. அதன் கச்சா எண்ணெயில் தோராயமாக 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதேசமயம், இயற்கை எரிவாயு மிகவும் முக்கியமானதாகவும், நாட்டின் ஆற்றல் தேவைகளை மாற்றுவதற்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது.


புதிய ஒப்பந்தம் எப்படிச் செலவைக் குறைக்கும்?

இந்தியா மற்றும் கத்தார் இடையே எல்.என்.ஜி தொடர்பான இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஷிப் அடிப்படையில் (DES) செய்யப்பட்டது.

இதன்படி எரிவாயு கப்பல் மூலம் துறைமுகத்தை அடையும். அதாவது ஹோம் டெலிவரி போல எரிவாயுவை அனுப்பி வைத்துவிடுவார்கள்.

1999-இல் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் ஃப்ரீ ஆன் போர்டு (FOB) அடிப்படையில் செய்யப்பட்டது. FOB-இல் எரிவாயு வாங்குபவர்தான் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

விற்பனை செய்யும் இடத்தில் இருந்து எரிவாயுவை எடுத்துக் கொண்டு வர வேண்டும். ஆனால், DES உடன்பாட்டில் இந்தப் பொறுப்பு விற்பனை செய்யும் நாட்டுக்கு உரியது.

இதனால் DES-இன் கீழ் செய்யப்படும் ஒப்பந்தம் எரிவாயுவை வாங்கும் நாட்டுக்கு செலவைக் குறைக்கிறது.

இந்திய எரிவாயு இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிடெட் (பி.எல்.எல்) என்பது ஓ.என்.ஜி.சி, இந்தியா ஆயில், கெயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

குஜராத்தின் தாஹேஜ் துறைமுகத்தில் பி.எல்.எல் முனையம் உள்ளது. அங்கு கப்பல் மூலம் எரிவாயு கொண்டுவரப்பட்டு, பின்னர் அது வெவ்வேறு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

பி.எல்.எல் நிறுவனம், கத்தார் எரிசக்தியுடனான இந்த ஒப்பந்தம் உரங்கள், நகர எரிவாயு விநியோகம், சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற அதிக நுகர்வுத் துறைகளுக்கு தடையின்றி எரிவாயு வழங்குவதை உறுதி செய்யும் என்று கூறுகிறது.

கத்தாரின் எரிசக்தி அமைச்சரும், கத்தார் எரிசக்தியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாத் அல்-காபி, கடந்த செவ்வாயன்று கோவாவில் நடந்த இந்திய எரிசக்தி வாரக் கொண்டாட்டத்தில் இந்தியாவின் சந்தை பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் என்று நம்புவதாகவும் கூறினார்.

2015-ஆம் அண்டு கத்தாரின் மன்னருடன் பிரதமர் மோதி

இந்தியா – கத்தார் உறவு கடந்து வந்த பாதை

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் ஜூன் 2022-ஆம் ஆண்டு வந்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டார்.

அந்த நேரத்தில், இந்தியா ‘பொது மன்னிப்பு’ கோர வேண்டும் என்று கூறிய முதல் நாடு கத்தார்.

கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இஸ்லாமிய உலகில் கோபம் பரவாமல் இருக்க, பா.ஜ.க உடனடியாக நுபுர் ஷர்மாவை நீக்கியது.

அதைத் தொடர்ந்து எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இரண்டாவது பெரிய சவாலாக அமைந்து.

கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளையுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

வளைகுடா நாடுகள் தொடர்பான மோதி அரசின் கொள்கை

தனது கடந்த 10 ஆண்டு ஆட்சியில் நரேந்திர மோதி வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த முனைப்புகள் எடுத்து வந்துள்ளார்.

பிரதமர் மோதி இதுவரை நான்கு முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, சென்றிருக்கிறார். முதல் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 2015, இரண்டாவது பிப்ரவரி 2018 மற்றும் மூன்றாவது ஆகஸ்ட் 2019-இல் நடந்தது.

பிரதமர் மோதி தனது நான்காவது அமீரகப் பயணத்தை ஜூன் 2022-இல் மேற்கொண்டார். 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோதி ஐக்கிய அரபு அமீரகம் சென்றபோது, அது முந்தைய 34 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு மேற்கொண்ட முதல் பயணமாக இருந்தது. மோதிக்கு முன், இந்திரா காந்தி 1981-இல் ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பிரதமர் மோதி அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவரை வரவேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அங்கு வந்திருந்தார். அவர் அப்படி வருவது நெறிமுறைக்கு எதிரானது. இந்தியப் பிரதமருக்காக அவர் அதை மீறினார்.

மோதிக்கு கிடைத்த இந்த வரவேற்பு குறித்து பாகிஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த மே மாதம் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதாகவும், அவரை மத்திய அமைச்சர் ஒருவர் வரவேற்றதாகவும் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் இந்த நற்பெயர் தன்னை உறுத்துகிறது என்று அப்துல் பாசித் கூறியிருந்தார்.

ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நரேந்திர மோதிக்கு எதிர்பாராத நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, மோதி அரசு முகமது பின் சயீத் அல் நஹ்யானை சிறப்பு விருந்தினராக அழைத்தது.

அப்போது முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருக்கவில்லை. அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருந்தார்.

அதுவரை ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபரை மட்டுமே குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக இந்தியா அழைத்திருந்தது. ஆனால் 2017 குடியரசு தினத்தில் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அபுதாபியின் முன்னாள் மேற்கத்திய தூதர் ஒருவர், மோதியின் நடைமுறை அரசியல் மனப்பான்மையும் வலிமையான தலைவராக இருக்கும் பாணியும் சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக இளவரசர்களால் விரும்பப்படுவதாகக் கூறினார்.

பிரதமர் மோதி 2016 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்தார். 2019-இல் பஹ்ரைன், 2018-இல் ஓமன், ஜோர்டான், பாலஸ்தீனியப் பிரதேசம், மற்றும் 2016-இல் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

2015-இல் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி மற்றும் 2018-இல் ஓமன் சுல்தான் கபூஸ் கிராண்ட் மசூதியையும் பார்வையிட்டார். நரேந்திர மோதிக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் உயரிய குடிமகன் விருதும் வழங்கப்பட்டது.

 

Share.
Leave A Reply

Exit mobile version