கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர்.

அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது. “,

Share.
Leave A Reply

Exit mobile version