தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் இந்தியாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் விஜயம் குறித்து ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் செய்திருக்கும் விமர்சனங்கள் பெரும்பாலும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) கடந்த கால இந்திய விரோத நிலைப்பாட்டை கருத்தூன்றிய முறையில் நினைவுபடுத்துபவையாகவே அமைந்தன.

அவற்றை நோக்கும்போது ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வரவேற்பதை விடவும் அந்த கட்சி இந்திய விரோத நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.

அவர்களின் இந்திய விஜயம் இலங்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தங்களையும் இந்தியா அழைத்துப்பேச வேண்டும் என்று கேட்கின்ற அளவுக்கு அந்த விஜயம் எல்லோரினதும் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.

இந்தியா வழமையாக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு புறம்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பெரிய கட்சிகளுடனேயே ஊடாட்டங்களைச் செய்துவந்திருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இடதுசாரி கட்சிகளை புதுடில்லி அரசாங்க மட்டத்தில் அழைத்துப் பேசியதில்லை.

இலங்கையினதும் இந்தியாவினதும் இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் கட்சிகளின் மகாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அந்த விஜயங்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் வட்டாரங்களுக்கும் ஓரளவு ஊடகக் கவனிப்புக்கும் அப்பால் பெரிதாக அக்கறைக்குரியவையாக இருப்பதில்லை.

ஆனால், இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் இந்தியப் பயணத்துக்கு அதிவிசேட முக்கியத்துவம் ஒன்று இருந்தது.

திசாநாயக்கவையும் தோழர்களையும் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது.

இலங்கை அரசியல் கட்சியொன்றின் தலைவர்களை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியிருப்பது அண்மைய தசாப்தங்களில் இதுவே முதல் தடவையாக இருக்கவேண்டும்.

திசாநாயக்க குழுவினருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் கவாட்ரா ஆகியோர் இலங்கையின் பொருளாதாரம், அரசியல் நிலைவரம், எதிர்கால அரசியல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்கள்.

ஐந்து நாள் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருக்கும் தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு சிந்தனைக் குழாம்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்கள்.

இலங்கை இரு தேசிய தேர்தல்களுக்கு தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்திருக்கும் திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக நம்பப்படும் ஒரு நேரத்தில் இந்திய அரசாங்கம் அவரை அழைத்துப் பேசியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இன்றைய அரசியல் – பொருளாதார நிலைவரத்துக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசுகின்ற அளவுக்கு முக்கியமான அரசியல் சக்தியாக புதுடில்லி நோக்குகிறது என்பது தெளிவானது.

இந்திய விஜயம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர்களுக்கும் பெரியதொரு அரசியல் மற்றும் இராஜதந்திர வெற்றியாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அதேவேளை இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமான அரசியல் சக்தியாக அவர்களை இந்தியா நோக்குவதில் உள்ள பொருத்தப்பாடு குறித்து பல மட்டங்களில் கேள்வியும் எழுகிறது.

திசாநாயக்கவுடன் இந்தியா சென்றவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடு திரும்பிய பிறகு கடந்த ஞாயிறன்று கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றியபோது, தங்களது விஜயம் திடீரென்று இடம்பெற்ற ஒன்றல்ல. கடந்த வருடம் டிசம்பரிலேயே பத்து நாள் விஜயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் பெப்ரவரிக்கு அதை பின்போட்டதாகவும் ஐந்து நாள் விஜயமாகக் குறுக்கிக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்திக்கு இராஜதந்திர மட்டத்தில் இவ்வாறாக அழைப்பு வந்தது இது முதல் தடவை அல்ல என்று கூறிய ஹேரத் ஏற்கெனவே திசாநாயக்க தலைமையில் குழுவினர் சீனாவுக்கும் சென்றுவந்ததாக தெரிவித்தார்.

இந்திய விஜயத்துக்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் சீன விஜயத்துக்கு கொடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் இந்திய விஜயம் முக்கியமானதாக நோக்கப்பட்டதற்கு இந்தியா தொடர்பிலான தங்களது கடந்த கால நிலைப்பாடே காரணமாக இருக்கக்கூடும் என்று சொன்னார்.

காரணமாக இருக்கக்கூடும் என்று ஹேரத் சொன்னாலும் அதுவே தான் பிரதான காரணம் என்பதே உண்மை.

“ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் நாம் புவிசார் அரசியல் போக்குகள் குறித்து அக்கறை கொண்டிருக்கிறோம். எமது வெளியுறவுகள் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஆபத்துக்குள்ளாக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கப்போவதில்லை.

இந்தியாவில் எமது பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் பற்றியதாகவே அமைந்தன.

இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கின்ற அதேவேளை பிராந்தியப் பாதுகாப்பை உறுதிசெய்வதே எமது நிலைப்பாடு என்பதை இந்தியாவுக்கு நாம் விளங்கப்படுத்தினோம்.

பிராந்தியப் பாதுகாப்பை சீர்குலைக்கக்கூடிய எதையும் நாம் செய்யப்போவதில்லை. சீனாவுடனான உறவுகளை நிறுத்துமாறு எம்மை இந்தியா ஒருபோதும் கேட்கவில்லை.

எமது நடவடிக்கைகளில் எதுவுமே பிராந்திய பாதுகாப்புக்கு கேடுவிழைவிக்கக் கூடியதாக ஒருபோதும் அமையாது என்று நாம் உறுதியளித்தோம்” என்று ஹேரத் மேலும் கூறினார்.

இந்தியாவில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தியின் தலைவருடன் தொடர்புகொண்ட ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் அரசியல் விவகார ஆசிரியர் அவர் கூறியதாக கடந்த வாரம் பின்வருமாறு எழுதினார் :

“வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ ஜெய்சங்கருடன் நான் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுடையவையாக அமைந்தன. நாம் மாறிவிட்டோம். அதை அவரும் ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவும் மாறிவிட்டது. இந்தியாவின் பாதுகாப்பு உட்பட அதன் அக்கறைகள் குறித்து நாம் கவனம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்த அம்சங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுடனான பேச்சுவார்த்தையிலும் கவனம் செலுத்தினோம்”

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருப்பதாக திசாநாயக்க இந்தியாவில் இருந்த வண்ணம் கூறியபோதிலும், நாடு திரும்பிய பிறகு செய்தியாளர்கள் மகாநாட்டில் விஜித ஹேரத் பிராந்திய பாதுகாப்பு என்று பொதுப்படையாகக் கூறியது கவனத்துக்குரியது.

ஜனாதிபதியோ அல்லது மற்றைய தலைவர்களோ கூறுவது போன்று இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதாக ஒருபோதும் நடந்து கொள்ளப்போவதில்லை என்று பிரத்தியேகமாக கூறுவதை அவர் தவிர்த்ததை தற்செயலான ஒன்றாக கருதமுடியவில்லை.

இலங்கையில் இந்தியாவின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதை ஆதரிக்கக்கூடிய மாற்றுக் கட்சியொன்றை புதுடில்லி தேடுவதன் வெளிப்படையான அடையாளமே தேசிய மக்கள் சக்திக்கு நீட்டிய நேசக்கரமாகும் என்பதே அவதானிகளின் பரவலான அபிப்பிராயம்.

இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தென்னிலங்கையில் இந்திய விரோத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் தேசிய மக்கள் சக்தி இலங்கையின் நலன்களுக்கு முரணாக இந்தியாவுடன் நெருங்கிப்போவதாக பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

இந்த சக்திகள் இந்தியா இலங்கையில் செய்யவிருக்கும் முக்கியமான முதலீடுகளுக்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்புக் காட்டாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்குடனேயே அதன் தலைவர்களை புதுடில்லி அழைத்துப் பேசியதாக வியாக்கியானம் செய்கின்றன.

இது இவ்வாறிருக்க, இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமான எந்தொரு அரசியல் தீர்வையும் ஏன் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தைக் கூட ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தியுடனான இந்தியாவின் ஊடாட்டத்தை தமிழர்கள் விரும்பமாட்டாரகள் என்பது நிச்சயம்.

அதேவேளை, இலங்கையில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அல்லது உதவக்கூடிய வலிமையான அரசியல் சக்திகளாக இன்றைய தமிழ்க் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் புதுடில்லி நம்பவில்லை என்பது வெளிப்படையானது.

இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்களை திசாநாயக்க குழுவினருடன் இந்திய அதிகாரிகள் கலந்தாலோசித்திருப்பார்கள் என்றும் கூறமுடியாது. அவ்வாறு தகவல் எதுவும் வந்ததாகவும் இல்லை.

இலங்கையின் நெருங்கிய அயல்நாடான இந்தியா முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறிவிட்டது என்றும் அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும்போது அவை இந்தியாவில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் கவனத்திற் கொண்டு செயற்படப்போவதாக இரு மாதங்களுக்கு முன்னர் சென்னை இந்து ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் திசாநாயக்க கூறினார்.

ஜே.வி.பி.யின் பழைய கொள்கை நிலைப்பாடுகள் பலவற்றில் இருந்து பெருமளவுக்கு மாறிவிட்ட அதன் இன்றைய தலைவர்கள் சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்றமுறையில் தங்களை தகவமைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டுகின்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மாத்திரம் இன்னமும் விதிவிலக்கானதாக இருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜே.வி.பி.யின் இந்திய விரோத கடந்த காலத்தை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்பது முக்கியமாகக் கவனத்துக்குரியது.

-வீரகத்தி தனபாலசிங்கம்

Share.
Leave A Reply

Exit mobile version