இதனால், எகிப்தில் வாதைகளை அனுப்பியும், இறுதியில் எகிப்தியர்கள் வீடுகளில் உள்ள தலைப்பிள்ளைகள், மிருகஜீவன்களில் தலையீற்றுகளையும் கடவுள் நேரடியாக அழித்து எபிரேயர்களை எகிப்தில் இருந்து புறப்பட்டு போக செய்தார் (யாத்திராகமம் 12.29).
மோசே, அவரது இளைய சகோதரர் ஆரோன் ஆகியோர் தலைமையில் புறப்பட்டனர்.
விவிலியத்தின்படி மொத்தம் 6 லட்சம் எபிரேய ஆண்கள் புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது (யாத்திராகமம் 16.37). அவர்களுடன் மனைவிகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் உள்ளிட்டவையும் சென்றன.
செங்கடல் அருகே அவர்கள் தங்கியிருந்தபோது பார்வோன் மன்னர் 600 ரதங்கள் மற்றும் தனது படைகளுடன் வந்தார். யாத்திராகமம் 14: 21-ன்படி, மோசே தன் கையை சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
அப்போது மோசே தலைமையிலான எபிரேயர்களுக்கு கடவுளே நேரடியாக போரிட்டு வெற்றி பெற செய்துள்ளார். பார்வோனின் ரதங்கள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
மூழ்கிய ரதம் ஒன்று அகழ்வராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டு அரேபியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரமாக மாறிய கசப்பு தண்ணீர்
செங்கடலில் இருந்து பிரயாணப்பட்ட எபிரேயர்கள் சூர் பாலைவனத்தில் தங்கினார்கள். அங்கு தண்ணீர் இன்றி அலைந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதனால் அவ்விடத்துக்கு “மாரா’ என்று பேரிடப்பட்டது.
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முணுமுணுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று (யாத்திராகமம் 15: 23 முதல் 25-ஆம் வசனங்கள் வரை).
சூயஸ் கால்வாய்
எபிரேயர்களுக்கு, கடவுள் செய்த இந்த அற்புதத்துக்கு சாட்சியாக மாராவில் இப்போதும் அந்த கிணறு உள்ளது. இந்த இடம் சூயஸ் கால்வாயில் இருந்து சுமார் அரை மணி நேர பயண தூரத்தில் உள்ளது.
பார்வோன் மன்னர் காலத்தில் சூயஸ் நகரம் இருந்தது. மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் பிரிக்கும் கால்வாய் தான் சூயஸ் கால்வாய். சூயஸ் கால்வாயை கடப்பதற்கு 3 கி.மீ. தூரமுள்ள சுரங்க சாலையை எகிப்து அரசு உருவாக்கியுள்ளது.
சூயஸ் கால்வாய்க்கு ஒரு முனையில் ஆப்பிரிக்க கண்டமும், மறுபக்கத்தில் ஆசிய கண்டமும் உள்ளது. நைல் நதி கரையோர நகரங்களை கொண்ட எகிப்தின் வடபகுதி ஆப்பிரிக்க கண்டத்திலும், பாலை வனங்கள் மிகுந்த சினாய் மலை பகுதி எகிப்தின் தென் பக்கத்திலும் உள்ளது. இந்த தென்பக்கத்தில் தான் மாரா, ஒரேப் பர்வதம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன.
ஜெபலின் ஜான்
(தொடரும்…)