மேற்குலகின் அச்சுறுத்தல்கள், அணுவாயுதப் போருக்கான ஆபத்தை உருவாக்குகின்றன என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

தனது நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை நிகழ்;திய வருடாந்த உரையின்போது புட்டின் இவ்வாறு கூறியுள்ளார்.

உக்ரேனில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக கூறிய அவர், உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பும் எந்த நாடும் துயரமான பின்விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்தார்.

‘அவர்கள் உக்ரேனுக்கு மேற்குலக இராணுவத்தை அனுப்பும் சாத்தியம் குறித்து அறிவித்துள்ளார்கள். இத்தலையீடுகளின் பின்விளைவுகள் மிக துயரமானதாக இருக்கும்.

அவர்களின் பிராந்தியங்களைத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் எம்மிடமும் உள்ளன, மேற்குலகின் அச்சுறுத்தல்கள், அணுவாயுதப் போருக்கான ஆபத்தை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என புட்டின் கூறினார்.

உக்ரேனுக்கு படைகளை அனுப்பும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் அண்மையில் மறுத்திருந்தார்.

இந்நிலையில், மெக்ரோனின் கருத்துக்கான பதிலடியாகவே புட்டின் மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனக் கருதப்படுகிறது.

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமானதன் பின்னர், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுவாயுதப் போர் குறித்து பேசிவருவதை மேற்குலக தலைவர்கள் விமர்சித்திருந்தனர். கடந்த சில மாதங்களில் அணுவாயுத எச்சரிக்கைகளை புட்டின் தணித்துக்கொண்டிருந்தார்.

தற்போது உக்ரேனில் ரஷ்ய படைகள் சில பகுதிகளை புதிதாக கைப்பற்றிய நிலையில், மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் அணுவாயுத போர் குறித்து ஜனாதிபதி புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version