“இதுதான் தமிழ்நாட்டுக்கு என்னுடைய கடைசி வீடியோ. இரண்டு நாள்களுக்குப் பிறகு, நான் எப்படி இறந்தேன் என்பதை கர்நாடகாவிலிருந்து தெரியப்படுத்துவார்கள்.” – விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக தன்னுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு ஏமாற்றியதாக, 2011-ல் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸில் புகாரளித்திருந்தார்.
அதன் பிறகு, சீமான் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகக் கூறிவந்த விஜயலட்சுமி, ஒருகட்டத்தில் சீமானுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவந்தார்.
அதையடுத்து கடந்து ஆண்டு ஆகஸ்டில் சென்னை வந்த விஜயலட்சுமி, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகாரளித்தார்.
அடுத்த சில நாள்களில் அந்தப் புகாரைத் திரும்பப்பெற்றார். இதற்கிடையில், 2011-ல் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் ஒருபகுதியாக, மார்ச் 19-ம் தேதி விஜயலட்சுமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், தான் இறக்கப் போவதாகவும், இரண்டு நாள் கழித்து கர்நாடகாவிலிருந்து செய்தி வரும் என்றும் விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், “2008-ல் என் அக்காவின் பிரச்னைக்காகத் தான் சீமானிடம் சென்றோம்.
அப்போது சீமானுக்குத் திருமணமாகவில்லை. என்னைத் திருமணம் என்று செய்துகொள்கிறேன் என்று கூறி, மூன்று வருடம் என்னுடன் குடும்பம் நடத்தி, என் வாழ்க்கையைச் சீரழித்தார்.
மேலும், ரகசியமாக என்னைத் திருமணமும் செய்து, அதனை வெளியில் சொல்லாமல் என்னை ஏமாற்றினார். பிறகு தனக்குப் பிரச்சனை என்று கூறி, என்னை அப்படியே நடுரோட்டில் விட்டுச் சென்றார்.
சென்ற ஆண்டு `என்னைப் பற்றி பேச வேண்டாம். நான் காப்பாற்றுகிறேன். நான் அவரின் புருஷன். மாதம் ரூ.50,000 கொடுக்கிறேன்’ என மதுரை செல்வத்தை வைத்து டீலிங் பேசினார்.
ஆனால், இப்போது நாடகம் போடுகிறார். கர்நாடகாவில் என்னால் வாழ முடியவில்லை என்று நான் சொல்லும்போது, பரவாயில்லை சாகட்டும் விடு என்கிறார் என்றால், அடுத்ததாக அதுதான் நடக்கப்போகிறது.
இதுதான் தமிழ்நாட்டுக்கு என்னுடைய கடைசி வீடியோ. இரண்டு நாள்களுக்குப் பிறகு, நான் எப்படி இறந்தேன் என்பதை கர்நாடகாவிலிருந்து தெரியப்படுத்துவார்கள்.
கர்நாடகாவில் பிறந்தேன் என்பதற்காக என்னை மிகவும் துன்புறுத்தினார். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.
என் உயிரை நான் முடித்துக்கொண்ட பிறகு, கர்நாடகாவிலிருந்து சீமானுக்கு அழைப்பு வரும்.
என் மரணத்துக்கு அங்கு வந்து பதில் சொல்லட்டும். சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி என்றால் என்ன என்பதை என்னுடைய மரணம் புரியவைத்துவிடும்.
அதன் பிறகு, இந்த மாதிரி ஒரு ஆள் தமிழ்நாட்டுக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று விஜயலட்சுமி கூறினார்.