ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் டுபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார்.
இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான்.
இதனை ஒடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது. இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும்.
டுபாயில் உள்ள பிரபல சிட்டி மொலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 84 இலட்சம் பார்வைகளை குவித்துள்ளது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், தங்கம் உடலால் உறிஞ்சப்படுவதில்லை எனவும், மற்றொரு நபர் தங்கத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன? எனவும் பதிவிட்டுள்ளனர்.
இது முட்டாள் தனத்தின் உயரம் என ஒரு பயனரும், நம் உடலுக்கு தங்கம் தேவையில்லை, ஒரு சொட்டு தண்ணீர் இந்ததங்கத்தை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளார். இது போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.