லண்டன்:இங்கிலாந்து அரச குடும்ப நிகழ்வுகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொள்வதில் இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறது. அரச குடும்பத்தில் நடக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறது.
அவ்வகையில், சமீபத்தில் மன்னரின் மருமகளான இளவரசி கேத்தரின் (கேத் மிடில்டன்) வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகான முதல் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அன்னையர் தினத்தையொட்டி அவர் தனது மூன்று குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அது டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டது தெரியவந்ததும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அந்த புகைப்படத்தை செய்தி நிறுவனங்கள் நீக்கிவிட்டன.
சர்ச்சையை உணர்ந்த இளவரசி, வருத்தம் தெரிவித்ததுடன், அந்த புகைப்படத்தை தான் எடிட் செய்ததாக கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மன்னரின் மகன் இளவரசர் வில்லியம் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.
அதாவது, இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டனின் முன்னாள் நெருங்கிய தோழி ரோஸ் ஹான்பரி இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பரவும் தகவல்தான் இப்போது விவாதப்பொருளாகி உள்ளது.
இந்த தகவலை ஸ்டீபன் கோல்பர்ட் என்பவர் கிளப்பிவிட்டுள்ளார். நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஸ்டீபன், தன்னிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றிய கவலை தரும் செய்தி இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், \”இங்கிலாந்தின் இளவரசி கேத் மிடில்டன் வெளியில் வராததால், வருங்கால மன்னர் வில்லியமுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று இணையவாசிகள் யூகிக்கிறார்கள்.
அந்த பெண் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறேன். வில்லியம் மற்றும் ரோஸ் ஹான்பரி இடையே தொடர்பு இருப்பதாக 2019 முதல் வதந்திகள் உள்ளன.
பின்னர் ரோஸ், வில்லியமின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டேவிட்டை திருமணம் செய்துகொண்டார்\” என்றார்.
இவ்வாறு பழைய புரளியை மீண்டும் கிளப்பிவிட்டதால், கோல்பர்ட் மற்றும் ரோஸ் ஹான்பரி இருவரின் பெயர்களும் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆனது.
ரோஸ் ஹான்பரி மற்றும் அரச குடும்பத்துடனான அவரது தொடர்பை பற்றி பலர் கேட்கத் தொடங்கினர்.
இளவரசர் வில்லியம் மற்றும் ஹான்பரி ஆகியோருக்கு இடையே ஒரு காதல் கதையை இணையவாசிகள் கட்டவிழ்த்துவிடலாம் என அரச குடும்பமும் கருதுகிறது.
இந்த தகவல் தொடர்பாக ஹான்பரி, கேத் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை.
இருப்பினும், வில்லியமின் சட்டக்குழுவினர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவை ஆதாரமற்றவை என்றும், தீங்கு விளைவிக்கும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.
யார் இந்த ரோஸ் ஹான்பரி?
முன்னாள் மாடல் அழகியான ரோஸ் ஹான்பரி, இளவரசி கேத் மிடில்டனின் நெருங்கிய தோழிகளில் ஒருவர்.
ரோஸ் ஹான்பரியின் குடும்பம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் நீண்ட கால தொடர்புடையது. ஹான்பரியின் பாட்டி லேடி எலிசபெத் லம்பார்ட், 1947-ல் மன்னர் பிலிப் மவுண்ட்பேட்டனை, இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் செய்தபோது மணப்பெண்ணின் தோழியாக இருந்துள்ளார்.
மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் ரோஸ் ஹான்பரியின் மகன் லார்ட் ஆலிவர் முக்கிய பங்கு வகித்தார். “,