செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், இலங்கை அதற்கு எதிராக செயற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்து, சரியாக ஆறு நாட்களுக்குப் பின்னர், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

செங்கடலில் அதிகரித்து வரும் பதற்றம் இலங்கையை நேரடியாகப் பாதிக்கிறதோ இல்லையோ, இந்த விவகாரத்தில் இலங்கையின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலிய கப்பல்களைத் தாக்கத் தொடங்கிய ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், இப்போது, எல்லா கப்பல்களையும் தாக்குகின்றனர்.

ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் பயன்படுத்தி, அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள், செங்கடலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சூயஸ் கால்வாய் மற்றும் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

இதுவரை 45 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. பெப்ரவரி 18ஆம் திகதி ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகிய, 21 ஆயிரம் மெட்ரிக் தொன் அமோனியம் நைட்ரேட் உரத்தை ஏற்றிய, ரூபிமார் (Rubymar) என்ற சரக்குக் கப்பல், கடந்த 2ஆம் திகதி செங்கடலில் மூழ்கிப் போனது.

பதற்றம் ஆரம்பித்த பின்னர் செங்கடலில் முற்றாக மூழ்கடிக்கப்பட்ட முதல் கப்பல் இதுவாகும்.

இந்த நிலையில் தான், கடந்த 6ஆம் திகதி முற்பகல், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து சீனா நோக்கி, செங்கடல் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த, ட்ரூ கொன்பிடன்ஸ் (True Confidence) என்ற எண்ணெய்க் கப்பல், பாப் அல் மன்டாப் (Bab el-Mandeb) நீரிணையைக் கடந்து, ஏடன் வளைகுடாவுக்குள் பிரவேசித்த போது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

20 கப்பல் பணியாளர்கள் மற்றும், 2 இலங்கை ஒரு நேபாளி ஆயுதக் காவலர்கள் என 23 பேருடன் சென்ற அந்தக் கப்பல் தாக்கப்பட்டதில், 2 பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு வியட்நாம் மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய கப்பல் காவலர். காயமடைந்தவர்கள் அனைவரையும், மறுநாள் இந்திய கடற்படைக் கப்பலான கொல்கத்தா மீட்டெடுத்தது.

தாக்குதலுக்குள்ளான கப்பல், எந்த வகையிலும், அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய தொடர்புகளைக் கொண்டதல்ல. பார்படோஸ் கொடியுடன் பயணித்த அந்தக் கப்பல், லைபீரிய நிறுவனத்துக்கு சொந்தமானது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் பதற்றம் இன்னும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது.

சூயஸ் கால்வாய் வழியாக நாளாந்தம் பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை, சுமார் 80 இல் இருந்து 35 ஆக குறைந்திருக்கிறது.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும், என்ன தான் பாதுகாப்பு வழங்கினாலும், யேமனில் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தினாலும். செங்கடலில் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பை முற்றிலுமாக உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

கடந்த ஜனவரி 3ஆம் திகதி செங்கடலில் கப்பல்களின் பாதுகாப்புக்காக இலங்கை கடற்படை கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். எனினும் கூடுதல் விபரங்களை அவரோ அல்லது கடற்படையோ வெளியிடவில்லை.

செங்கடலுக்கு கடற்படைக் கப்பலை அனுப்புவதற்கு, பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை, பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

இரகசியமாக செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்ட கடற்படைக் கப்பல், 22 நாட்கள் அங்கு பணியை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் தான், அது குறித்த தகவல்களை அரசாங்கம் படிப்படியாக வெளியிடத் தொடங்கியது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கொழும்பில் கடல் பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய போதே, இதனை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னரே, அமெரிக்க கொடையாக வழங்கிய கஜபாகு என்ற போர்க்கப்பல் தான், 22 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கடற்படை பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

இதே கஜபாகு கப்பலில் தான், கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு துறைமுகத்தின் ஊடாக, திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.

கஜபாகு போர்க்கப்பல், சர்வதேச கடல் பாதுகாப்புப் பணியை முடித்துக் கொண்டு, கடந்த 1ஆம் திகதி திருகோணமலைக்கு திரும்பியது. அன்றைய தினம் திருகோணமலையில், கடற்படைக் கப்பல்களை ஜனாதிபதி பார்வையிடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கப்பல் திருகோணமலைக்கு அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஈரானிய மீன்பிடிப் படகு ஒன்றை வழிமறிந்தது.

அந்தப் படகில் இருந்தவர்கள், சுமார் 200 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை கடலில் கொட்டி விட்டனர். இதனை கடற்படையினர் கண்ட போதும், ஆதாரபூர்வமாக அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

அது ஈரானிய படகு என்பதாலும், இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சர்வதேச கடற்பரப்பில் என்பதாலும், அந்தப் படகு மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமலேயே, திரும்பி விட்டது கஜபாகு.

கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை விமானப்படைத் தளத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போது, செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமானால், நாடு அதற்கு எதிராக நிற்கும் என கூறியிருந்தார்.

பிராந்தியத்திலும் உலகிலும் சமாதானம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம், ஐ.நா அமைப்புக்கு தேவையான ஆதரவை, இலங்கை வழங்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மறுநாள் திருகோணமலை கடற்படைக் கப்பல்களை ஆய்வு செய்யும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் கடல் பிரதேசங்கள் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

நாட்டின் பொருளாதார முயற்சிகளுக்கோ, இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கோ, எந்தப் பாதிப்பும் ஏற்பட அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், 1967 இஸ்ரேலிய -அரபு யுத்தத்தின் பின்னர், ஒரு தசாப்த காலமாக சூயஸ் கால்வாய் மூடப்பட்டதன் வரலாற்றுச் சூழலையும், அதனால் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்ட தாக்கங்களையும், ஜனாதிபதி எடுத்துரைத்திருந்தார்.

நாட்டின் துறைமுகங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க, சூயஸ் கால்வாய் மற்றும் செங்கடலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

செங்கடலின் பாதுகாப்பு என்று ஜனாதிபதி கூறினாலும், இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் செங்கடலிலோ அதனையடுத்த ஏடன் வளைகுடாவிலோ பாதுகாப்பில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில், அமெரிக்கா தலைமையிலான 41 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் கூட்டுப் படையணியின் CTF 153 என்ற ஒரு பிரிவு மாத்திரமே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.

2011இல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலை அடுத்து இந்தக் கூட்டுப் படையணி உருவாக்கப்பட்டது. இதில் ஐந்து அணிகள் உள்ளன.

இலங்கை கடற்படையின் கஜபாகு போர்க்கப்பல், CTF 153 அணியில் இடம்பெறவில்லை. அது செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவுக்கு அப்பால், சர்வதேச கப்பல் பாதையின் பாதுகாப்பிலேயே ஈடுபட்டது.

CTF 150 என்ற இந்த கடற்படைக் கப்பல்களின் அணி அரசு அல்லாத சக்திகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மாத்திரமே, எதிர்கொள்கிறது.

செங்கடலிலோ, ஏடன் வளைகுடாவிலோ, பணியில் ஈடுபடத் தேவையான ஏவுகணைகள், ஏவுகணை இடைமறிப்பு கருவிகள், மற்றும் அதிநவீன ராடர்கள் போன்றவற்றை இலங்கை கடற்படைக் கப்பல்கள் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்க கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை கொண்டுள்ள போதும், அவற்றில் ஹூதிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் கிடையாது.

அதேவேளை, ஹூதிகளுடன் நேரடியாக மோதுகின்ற நடவடிக்கையில் இறங்கினால், இலங்கை அரசுக்கும், ஈரானுக்கும் உள்ள நெருங்கிய உறவில் விரிசல் ஏற்படும்.

அதேபோல, இஸ்லாமிய நாடுகளையும் பகைக்க நேரிடும். உள்ளூரில் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும்.

எனவே தான், அமெரிக்க கூட்டணியில் இடம்பெற்றாலும், அரேபிய வளைகுடாவுக்கு அப்பாலேயே, இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன.

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையில் கஜபாகு கப்பலின் பங்களிப்பை உறுதி செய்துள்ள, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை கடற்படைக் கப்பல் இரகசியமாக அனுப்பப்பட்டது என்பதையும் நிராகரித்திருக்கிறார்.

இத்தகைய நடவடிக்கைகளில் இரகசியத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் அவர், செங்கடல் பதற்றம் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், பிராந்திய பாதுகாப்பு கவலைகளை தீர்ப்பதில் கடற்படை அர்ப்பணிப்புடன் பணியாற்றவதாகவும், குறிப்பிட்டிருக்கிறார்.

சர்வதேச கடல்சார் பிரகடன சட்டத்தில் கையொப்பமிட்டுள்ள இலங்கை, கடலில் ஒழுங்கையும் பாதுகாப்பையும் பேணுவதில் முக்கிய பங்காற்றுவதாகவும், கடற்படைத் தளபதி கூறியிருந்தார்.

செங்கடல் நெருக்கடிக்குப் பிறகு கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் மற்றும் கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.ஆனால், அரசாங்கமோ இந்த நெருக்கடியை இலங்கையின் மீதான பாதிப்பாக காட்ட முற்படுகிறது.

அதற்குக் காரணம், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையணியில் இடம்பெறுவதை நியாயப்படுத்துவது தான். இந்தக் கூட்டுப் படையணியில் இடம்பெறுவதால் இலங்கைக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது?

அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் தொடர்ச்சியான ஆதரவையும் உதவிகளையும் பெற முடியும். நான்காவதாக ஒரு போர்க்கப்பலை அமெரிக்கா விரைவில் வழங்கப் போகிறது. அதுபோல விமானம் ஒன்றும் கிடைக்கப் போகிறது.

இதனால், விரைவிலேயே இரண்டாவது கப்பலை அரபிக் கடலுக்கு இலங்கை கடற்படை அனுப்பப் போகிறது.

இந்த நிலையில், “இலங்கை கடற்படையின் மூலோபாயம் 2030 மற்றும் அப்பால்” என்ற தலைப்பிலான திட்ட அறிக்கை கடந்த 1ஆம் திகதி கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச கடற்பரப்பில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையை படை பலரீதியாக வலுப்படுத்தும் திட்டங்களை கொண்டிருக்கிறது இந்த அறிக்கை.

ஒரு பக்கத்தில் படைக்குறைப்பு பற்றிய திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கிறது. இன்னொரு பக்கம், கடற்படையைப் பலப்படுத்தும் மூலோபாயம் வகுக்கப்படுகிறது.

படைக்குறைப்புக்கு அழுத்தம் கொடுத்த மேற்குலகத்தை வைத்தே, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு என்ற விடயத்தை கொண்டு, படைபலத்தை பெருக்குவதற்கான வழியை கண்டுபிடித்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்.

இனியெப்படி கடற்படையின் படைக்குறைப்புத் திட்டம் சாத்தியமாகும்?

-சுபத்ரா-

Share.
Leave A Reply

Exit mobile version