பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ திடீரென நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

நாமல் ராஜபக்ஷவை தேசிய அமைப்பாளராக பதவியில் அமர்த்துவதற்கு ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளனர் என்று பல மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்தன.

பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பிய நிலையில், இந்த நியமனம் திடீரென நிகழ்ந்திருக்கிறது.

பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பஷில் ராஜபக்ஷ தான், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

அவரிடம் இருந்தே இந்தப் பதவி பறிக்கப்பட்டு நாமலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பஷில் விரும்பி கொடுத்ததா, விரும்பாமல் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதா என்ற சந்தேகங்கள் உள்ளன. ஏனென்றால் இப்போது பொதுஜன பெரமுனவில் பஷில் நிறுவுநர் என்று அழைக்கப்படும் நிலையில் இருக்கிறாரே தவிர, கட்சியில் அவருக்கென எந்தப் பதவியும் இல்லை.

தேசிய அமைப்பாளர் என்பது முக்கியமான பதவி. அதனை வைத்துக்கொண்டு தான் பஷில் ராஜபக்ஷ, கட்சியைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே அதனை அதிகாரத்துக்கு கொண்டு வந்திருந்தார். ஆனால் இப்போது அவரிடம் அந்த வலிமையான பதவி இல்லை. அது நாமலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு தனியான அரசியல் இருக்கிறது. பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அப்போது, முதலில் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்தின் கீழ் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணங்கவில்லை. அவர், முதலில் ஜனாதிபதி தேர்தல் தான் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதற்குப் பின்னர், மீண்டும் ஒரு சந்திப்பு நடந்தது. அதிலும் அதே கோரிக்கை தான் விடுக்கப்பட்டது. அதற்கும் அதே பதில் தான் ஜனாதிபதி தரப்பில் அளிக்கப்பட்டது.

ஆக மொத்தத்தில், எப்படியாவது முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இணங்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் பசிலுக்குத் தோல்வியே கிட்டியது.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியை அசைத்துப் பார்க்கும் முயற்சிகளில் இறங்கியது ராஜபக்ஷ தரப்பு.

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தக் கோரும் பிரேரணையை கொண்டு வர பொதுஜன பெரமுன திட்டமிடுவதாக தகவல்கள் கசிந்தன.

அவ்வாறான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஜனாதிபதி மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மடக்கிப் போடுவதற்காகத் தான், பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ரணில் விக்கிரமசிங்க இறங்கி வரவில்லை. அவ்வாறான பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக்கழித்துவிட்டார்.

அவருக்கு தனது பலம் என்னவென்று தெரியும். அதேவேளை ராஜபக்ஷவினருக்கும் தங்களின் பலம் என்னவென்று தெரியும்.

பாராளுமன்றத்தைக் கலைக்க கோரும் பிரேரணை முன்வைக்கப்பட்டால், தனது கட்சியை ரணில் உடைத்து விடுவார் என்ற பயமும் பொதுஜன பெரமுனவுக்கு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவளிக்காது என்பதும், மொட்டு கட்சிக்கு தெரியும். அதனால் அந்த திட்டத்தில் இருந்து மெதுவாக நழுவிக்கொண்டு அடுத்த காயை நகர்த்தியிருக்கிறது. அதுதான், நாமல் ராஜபக்ஷவுக்கு, தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டதாகும்.

திடீரென நாமல் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவரை பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப் போகிறதா என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால் பொதுஜன பெரமுனவுக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொருத்தமான வேட்பாளர் இல்லை என்றே வாதிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன ஆதரிக்க கூடும் என்ற ஊகங்களும் நிலவின.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய போது, ராஜபக்ஷவினர் எவரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருத்து வெளியிட்டிருந்தனர். அது ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில் திடீரென நாமல் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கான முக்கியத்துவம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது ஜனாதிபதி வேட்பாளராக அவரை முன்னிறுத்தும் உத்தி என்றே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பில் உள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கு சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது, பொதுஜன பெரமுனவுக்குள் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்றும், நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குப் பின்னரே போட்டியிட முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமிக்கப்பட்ட பின்னர் வெளியான கருத்து. இந்தளவுக்கும் பிரசன்ன ரணதுங்க மொட்டுக் கட்சியின் முக்கிய பிரமுகர்.

நெருக்கடியான தருணங்களில் எல்லாம், ராஜபக்ஷவினருக்கு முண்டு கொடுத்து வந்தவர். அப்படிப்பட்டவரை வைத்தே, ரணில் விக்கிரமசிங்க இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது என்ற வகையில், பதில் கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, 2010 பொதுத் தேர்தலின் ஊடாக அரசியலுக்கு வந்த நாமல், அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

அவர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நீலப் படையணி (Blue brigade) என்ற பெயரில் இளைஞர் அணி ஒன்றை உருவாக்கித் தலைமை தாங்கியிருந்தார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, அந்தப் படையணி காணாமல் போனது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அவர்களின் கையை விட்டுப் போனது.

திடீரென தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கட்சியை மீளமைக்கப் போவதாக நாமல் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அவரால் தனித்து அதனைச் செய்ய முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

இதனைச் செய்வதற்காகத் தான் நாமல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது நகைச்சுவை. ஏனென்றால், பஷில் ராஜபக்ஷ அளவுக்கு அவரிடம் அனுபவமோ ஆற்றலோ கிடையாது. சுதந்திரக் கட்சி கைவிட்டுப் போன பின்னர், மஹிந்த கூட வெளியே வராத போது, பஷில் மட்டும் தான் மொட்டுக் கட்சியை தனியாக கட்டியெழுப்பினார்.

அத்துடன் தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படிப்பட்டவரிடம் இருந்து தேசிய அமைப்பாளர் பதவி, நாமலுக்கு கைமாற்றப்பட்டிருப்பது, கட்சியை வலுப்படுத்துவதற்கான நகர்வு என்று கொள்ள முடியாது.

இது நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்த ராஜபக்ஷ தரப்பு தயாராகிறது என்ற செய்தி வெளியே கொண்டு செல்லப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மாற்றமாகவே தெரிகிறது.

ஆனால் என்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தப் பருப்பு வேகவில்லை. அவர் பனங்காட்டு நரி. சலசலப்புகளுக்கு அஞ்சாதவராயிற்றே.

– என்.கண்ணன்-

Share.
Leave A Reply

Exit mobile version