சார்ஜாவில் அண்மையில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைத் தொழிலாளி ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர் கல்வி பயின்ற 26 வயதுடைய திருமணமாகாத பெண்ணே ஜெயமினி சந்தமாலி விஜேசிங்க.
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி இரவு 09.30 மணி அளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே அமைந்துள்ள கடைக்கு சென்று கொண்டிருந்த போது ஜெயமினி சந்தமாலி இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அன்றைய தினத்தில் 2 எகிப்தியர்கள், 1 பங்களாதேஷ் மற்றும் 1 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
அதனை அடுத்து, உடனடியாக செயற்பட்ட அந்நாட்டு பாதுகாப்பு படையினர், அப்பகுதிக்கு சென்று அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜெயமினி சந்தமாலி வேலை செய்த நிறுவனம் 4,000 திர்ஹம் தொகையை இலங்கைக்கு அனுப்பியதாகவும் சகோதரர் கூறினார்.
ஆனால், சந்தமாலியின் பிரேத பரிசோதனை அறிக்கையை உறவினர்கள் ஏற்காமல், புதிதாக பிரேத பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் தலைமையில் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சந்தமாலியின் இறுதிக் கிரியைகள் நாளை (04) மத்துகம பொது மயானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.