இரானில் ஏப்ரல் ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதலில் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு அந்நாடு பதிலடி தரும் என அச்சம் நிலவிவரும் நிலையில், இரான் இஸ்ரேலை “விரைவில் தாக்கும்” என்று எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள இரான் தூதரகத்தைத் தாங்கள் தாக்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல்தான் அத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் விரைவில் நிகழலாம் என, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் “வேண்டாம்” என, இரானுக்கு பைடன் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம்,” என பைடன் தெரிவித்தார். “இஸ்ரேலை பாதுகாக்க நாங்கள் உதவுவோம். இரான் இதில் வெற்றி பெற முடியாது,” என அவர் எச்சரித்தார்.
விளம்பரம்
காஸாவில் இஸ்ரேலுடன் சண்டையிடும் பாலத்தீன குழுவான ஹமாஸ் மற்றும் அப்பிராந்தியத்தில் அதுபோன்ற மற்ற குழுக்களையும் இரான் ஆதரித்து வருகிறது. இஸ்ரேலியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து வரும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பையும் இரான் ஆதரித்து வருகிறது.
லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி “டஜன்” கணக்கிலான ராக்கெட்டுகளை ஏவியதாக ஹெஸ்புல்லா அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சுமார் 40 ஏவுகணைகள் மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதில் எந்த உயிர்ச்சேதமும் பதிவாகவில்லை. மேலும், இதில் தொடர்புடைய மற்ற அமைப்புகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை.
போரை விரும்பாத அண்டை நாடுகள்
இரான் வேண்டுமென்றே மத்திய கிழக்கு மற்றும் வாஷிங்டனை யூகிக்க வைப்பதாக, பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃப்ராங்க் கார்ட்னர் தெரிவிக்கிறார்.
டமாஸ்கஸில் உள்ள தூதரகத்தில் ஏப்ரல் 1 அன்று கடும் தாக்குதலைத் தொடர்ந்து, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இரானிய பினாமிகளுக்கு இரான் தனது ரகசிய ஆயுத விநியோகத்தை வழிநடத்துவதாக இஸ்ரேல் நம்பி வருகிறது.
அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரானின் பாதுகாப்பு அமைப்புகள், தங்கள் பதிலடி குறித்து விவாதித்து வருகிறது.
மிகவும் கடுமையாகத் தாக்கினால், இஸ்ரேல் பேரழிவு சக்தியுடன் பதிலளிக்கும். மிகவும் இலகுவாகச் சென்றால், இரான் பலவீனமானதாகவும் பயனற்றதாகவும் கருதப்படும் அபாயம் உள்ளது.
ஒரு தந்திரோபாய கண்ணோட்டத்தில், பிராந்தியம் முழு விழிப்புடன் இருக்கும்போதும் அமெரிக்கா உலகிற்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கூறிவரும் நிலையிலும் இரான் இப்போது பதிலளிப்பதில் அர்த்தமில்லை.
தெஹ்ரான் மற்றும் கோம்-இல் உள்ள நடைமுறைவாதிகள் கட்டுப்பாட்டை வலியுறுத்துவர். அதேநேரத்தில், இரானின் வயதான அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமேனி உட்பட பருந்துகள் உறுதியான பதிலைக் கோருவர்.
ஆனால் இரான் ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை. வளைகுடாவின் அரபுப் பக்கத்தில் உள்ள அதன் அண்டை நாடுகளும் போரை விரும்பவில்லை.
அங்குள்ள அரசாங்கங்கள் ஏற்கெனவே இரானிடம் கட்டுப்பாடு காக்க வேண்டும் எனக் கேட்டுள்ளன. வெற்றி பெறப்போவது, பருந்துகளா அல்லது புறாக்களா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
ராணுவத்தைத் தயார் செய்யும் இஸ்ரேல்
படக்குறிப்பு, டமாஸ்கஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.
அதிகரித்து வரும் பதற்றங்களால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளன. இரானை விட்டு வெளியேறுமாறு ஜெர்மனி தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பீர்ஷெபா நகரங்களுக்கு வெளியே பயணம் செய்வதையும் அமெரிக்க வெளியுறவுத் துறை தடை செய்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தனது அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். சில இஸ்ரேலியர்கள் இரானிய தாக்குதலைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினர்.
“தெற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் நாங்கள் எதிரிகளால் சூழப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்” என்று ஜெருசலேமில் உள்ள சந்தையில் ஏ.எஃப்.சி. செய்தி முகமையிடம் டேனியல் கோஸ்மன் கூறினார். “நாங்கள் பயப்படவில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சுற்றிப் பாருங்கள்: மக்கள் வெளியே செல்கிறார்கள்” என்றார்.
தண்ணீர், மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கான தற்போதைய வழிகாட்டுதலைத் தவிர, இஸ்ரேலிய அரசாங்கம் அதன் மக்களுக்கு எந்தப் புதிய ஆலோசனையையும் வழங்கவில்லை.
எவ்வாறாயினும், பொது தங்குமிடங்களின் தயார்நிலையை மதிப்பிடுவது உட்பட, தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளுக்கு தயாராகுமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், இஸ்ரேலிய ராணுவம் போர் துருப்புகளுக்கான விடுப்பை ரத்து செய்தது, வான் பாதுகாப்பைப் பலப்படுத்தியது மற்றும் ரிசர்வ் படைகளை அழைத்தது.
மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு எச்சரிக்கை
படக்குறிப்பு, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்தியாவின் அறிவிப்பு
டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் மூத்த இரானிய ராணுவத் தலைவர்களும் அடங்குவர். மேலும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள இரானின் உயர்மட்ட குட்ஸ் படையின் மூத்தத் தளபதியான பிரிக் ஜெனரல் முகமது ரேசா ஜாஹேடியும் அடங்குவார்.
இஸ்ரேல் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல்தான் தாக்குதலை நடத்தியதாக பரவலாகக் கருதப்படுகிறது. பரந்த பிராந்திய போரைத் தூண்டும் என்ற அச்சத்தால், பல நாடுகளில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலைத் தடுக்க முயன்று வருகின்றனர்.
சீனா, சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் பேசியுள்ளார்.
அமெரிக்க ஒருங்கிணைந்த படைத்தளபதியை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த அச்சுறுத்தலால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு வலுப்பெற்றுள்ளது என்றும், “எப்படி பதிலளிப்பது என்பதை நாங்கள் அறிவோம்” என்றும் கூறினார்.
காஸாவுக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சமூகங்களை ஹமாஸ் தாக்கியதில் காஸாவில் போர் மூண்டது.
இதில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். மேலும், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். காஸாவில் 130 பணயக் கைதிகளில், குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 33,600க்கும் மேற்பட்டோரில் பொதுமக்களே பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் இஸ்ரேல் தனது வடக்கு எல்லையான ஹெஸ்பொல்லாவுடன் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
அதேநேரம், இராக் மற்றும் ஏமனில் உள்ள இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய பகுதிகளையும் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்க முயன்றன.
ஏமனின் ஹூத்தி இயக்கம் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்தியது. இதில், குறைந்தது ஒரு கப்பலையாவது மூழ்கடித்தது. ஏமனில் உள்ள ஹூத்தி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டனை தூண்டியது.
-BBC TAMIL NEWS-