டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டுபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், ரத்து செய்யப்பட்டும் இருந்தன. இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
டுபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.