காதலியின் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல்போன சம்பவம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
உணவகமொன்றை நடத்திச் செல்லும் இவர் கடந்த 6 நாட்களாகக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில், இவர் கடந்த 22 ஆம் திகதி அன்று தனது உணவகத்தில் பணிபுரியும் நபரொருவருடன் குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் சென்றதாகக் கூறப்படும் வீட்டின் உரிமையாளரான காதலியின் தந்தை காணாமல் போன இளைஞரின் நண்பர் ஒருவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு “ நான் ஒரு தந்தையாக எனது மகளுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுத்தேன். நான் அவனைக் கொன்றுவிட்டேன்” எனக் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.