மத்திய கிழக்கில் நடப்பது என்ன ? உண்மை நிலைவரத்தை அறிய உலகமே இன்று ஆவலாக இருந்து வருகிறது. ஒருபுறம் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் அதேவேளை , மறுபுறம் சம்பந்தப்பட்ட தரப்பால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று மறுக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் அது தொடர்பான வீடியோக்கள் படங்கள் என்பன வெளிவரவே செய்கின்றன . இறுதியாக , சனிக்கிழமை ஈராக்கில் நடைபெற்ற சம்பவம் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

அதாவது ஈராக்கில் உள்ள ஈரானுடன் இணைந்த குழுவினர் பயன்படுத்திய இராணுவ தளத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது. மின்னாமல் முழங்காமல் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பாபில் (பாபிலோன்) மாகாணத்தின் தலைநகர் பக்தாத்தில் இருந்து 50 கி.மீ தெற்கே அமைந்துள்ள கல்சு இராணுவ தளத்தை குறிவைத்தே இந்த “தாக்குதல்” நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து வீடியோக்கள் மற்றும் படங்கள் ஒரு பெரிய வெடிப்பை காட்டின. சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்கள் , கருகி சேதமடைந்துள்ளதுடன் அங்கு ஒரு பெரிய பள்ளம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது .

வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளன . இஸ்கந்தாரியா நகருக்கு அருகில் அமைந்துள்ள கல்சோ [கல்சு] இராணுவ தளத்தை இலக்கு வைத்தே குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகின்றது.

அமெரிக்கா தாக்கியதா?

குண்டுவெடிப்புக்கு முன்போ அல்லது பின்போ பாபில் பகுதியின் வான்வெளியில் ஆளில்லா விமானங்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஈராக் இராணுவம் சனிக்கிழமை கூறியது.

ஈராக்கில் வான்வழித் தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக வெளியான தகவலை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் வரை, தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பின் போது கல்சு முகாம் அமெரிக்க வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் அது 2011 இல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு வெடிமருந்து கிடங்கு மற்றும் தாங்கிகள் ஆயுதங்களைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மறுபுறம் அனைத்து விரல்களும் இஸ்ரேலை நோக்கி சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் . இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய கேந்திர நிலைகள் மீது தாக்குதல்

காசாவில் தொடரும் மோதலுக்கு மத்தியில் கடந்த அக்டோபரில் ,அந்தப்பகுதியில் ஈராக்கில் உள்ள குறித்த ஈரானுடன் இணைந்த படைகள் , அமெரிக்க ,மற்றும் இஸ்ரேலிய கேந்திர நிலைகள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாகவும், ஜோர்டானுடனான சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்கவீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் பெப்ரவரி முதல் அதன் தாக்குதல்களை அதுபெரும்பாலும் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் தாக்குதல்

அடுத்து , ஈரான் மீதான இஸ்திரேல் நடத்திய தாக்குதல் தொடர்பில் பார்ப்போம் ;

முன்னதாக ஏப்ரல் 13 அன்று, ஈரான் நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும், மற்றும் ஏவுகணைகளையும் இஸ்ரேல் மீது ஏவியது, அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான் பாதுகாப்பு கூட்டணியால் சுட்டு வீழ்த்தப்பட்டன.ஏப்ரல் 1ம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதலை இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரானின் இஸ்பஹான் பிராந்தியத்தின் மீது வெள்ளிக்கிழமை காலையில் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது ஆனால், இந்ததாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

இந்த பதற்றம் தணிவதற்குள்ளாகவே ஈராக் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேலும் இஸ்பஹான் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் நடத்த போகும் தாக்குதல் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. அமெரிக்காவுக்கு இறுதி நேரத்திலேயே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான் – இஸ்ரேல் நிழல் யுத்தம்

ஈரான் – இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒன்றை ஒன்று எதிரியாகப் பார்த்து வருவதுடன் நிழல் யுத்தத்தையும் நடத்தி வருகின்றன,

இந்த இரு நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் மறைமுகப் போரை நேரடி மோதலாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இஸ்ரேல் மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றன .

இந்த நீண்டகால விரோதத்திற்கு இஸ்ரேலிய இராணுவம் ஈரான் ஆதரவுடைய ஹமாஸுக்கு எதிராக காஸாவில் போரிட்டு வருவதே பிரதான காரணம். ஆனால் சர்வதேச அழுத்தங்களை இஸ்ரேல் கணக்கில் எடுப்பதில்லை

இஸ்பஹான் மாகாணம் ஏன் முக்கியத்துவமானது?

இஸ்பஹான் மாகாணம் ஈரானின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பகுதி. அங்குள்ள மிகப்பெரிய நகரத்தால் இந்த பெயரைப் பெற்றது. அங்கு ஒரு பெரிய விமான தளம், பெரிய ஏவுகணை தயாரிப்பு வளாகம் மற்றும் பல அணுசக்தி நிலையங்கள் எனக் குறிப்பிடத்தக்க ஈ ரானிய இராணுவ உட்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதியில் உள்ளன.

மேலும் மசூதிகள் மற்றும் மினாரட்டுகளுக்கு புகழ் பெற்ற இஸ்பஹான்-இராணுவத் தொழிற்சாலைகள் நிறைந்த மையமாகவும் உள்ளது.

ஈரானின் மூன்றாவது பெரிய நகரமான இது , ஜாக்ரோஸ் மலைகளுக்கு அருகில் நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது.

நகரமும் அதன் பிராந்தியமும் ட்ரோன் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகளுக்கு தாயகமாக உள்ளது.

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்திற்கான மிக முக்கியமான மையமான Natanz அணுமின் நிலையம் இதன் அருகில் உள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்பஹான் என்ற பெயர் இணைக்கப்பட்டிருப்பதால், எதிரிகளின் முக்கிய இலக்காக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது ஒரு இஸ்ரேலிய தாக்குதலாக இருந்தால், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் ஈரானுக்கு அந்த மாகாணத்தில் உள்ள முக்கியமான இலக்குகளைத் தாக்கும் திறன் உள்ளது என்று ஒரு செய்தியை அனுப்புவதாகத் தெரிகிறது,

அணுசக்தி நிலையங்கள்

ஈரானிய அதிகாரிகள் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள் “முற்றிலும் பாதுகாப்பானவை”என்று அறிவித்தனர்.

ஈரானின் விண்வெளி ஏஜென்சி செய்தித் தொடர்பாளர் ஹொசைன் டாலிரியன்,”பல” ட்ரோன்கள் “வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக” கூறினார் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடந்ததாக வெளியான செய்திகளை நிராகரித்தார்.

பின்னர், வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மினி ட்ரோன்கள்” இஸ்பஹானில் எந்த சேதத்தையும் அல்லது உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.

சில ஈரானிய ஊடகங்கள் இஸ்பஹான் விமான நிலையம் மற்றும் இராணுவ விமானத் தளத்திற்கு அருகில் மூன்றுவெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இரசாயன ஆயுத நிபுணரும், இங்கிலாந்து மற்றும் நேட்டோ அணுசக்திப் படைகளின் முன்னாள் தலைவருமான ஹமிஷ், கார்டன் கூறுகையில் , இஸ்பஹானை குறிவைப்பது “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” ஏனெனில் அதைச் சுற்றிலும் இராணுவத் தளங்கள் உள்ளன.”ஈரான் அணுவாயுதங்களை உருவாக்க முயற்சிக்கிறது . மறுபுறம் தாக்குதலானது, இஸ்ரேலிய “திறமை மற்றும் அதன் உள்நோக்கத்தை நிரூபணம் செய்கிறது ” என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கருத்து

ஈரானுடன் நெருங்கிய இராணுவ ஒத்துழைப்பைக் கொண்டுள்ள ரஷ்யா – ஈரானில் பதற்றம் அதிகரிப்பதை விரும்பவில்லை” என்று இஸ்ரேலுக்குத் தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பிலும் அமெரிக்காவிடம் முன்னதாக இஸ்ரேல் கூறவில்லை. இறுதிநேரத்திலேயே கூறப்பட்டதாக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் ஜி 7 கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

இதேவேளை இஸ்ரேல் ட்ரோன்களை பறக்க விட்டு ஒரு அவமானகரமான தோல்வியை சந்தித்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ,

தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் உடனடியாக தமது வன வெளியில் விமானங்கள் பார்ப்பதற்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்தது, ஆனால் இந்தத் தடைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலை ஈரான் பெரிது படுத்த விரும்பவில்லை அதை குறைத்து காட்டவே விரும்புகிறது என்று கூறப் படுகிறது .

என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்?

இதுவரை, பயன்படுத்தப்பட்ட ஏவுகணை வகை குறித்து அறியாத நிலையில் நிறைய ஊகங்கள் உள்ளன.தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கே 60 கி மீ (45 மைல்) தொலைவில் உள்ள அயல் நாடான ஈராக்கில் உள்ள ஒரு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சிதைவுகளின் படங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சில தகவல்கள் கிட்டியுள்ளன .

தாக்குதலில் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் விமானத்தில் இருந்தது ஏவப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் பரந்த ஒருமித்த கருத்து உள்ளது. இஸ்ரேல் தயாரித்த புளூ ஸ்பரோ ஏவுகணைகளின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

உளவுத்துறை நிறுவனமான சிபிலைனை நடத்தும் முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி,ஜஸ்டின் க்ரம்ப் கூறுகையில் : குறித்த , சிதைவுகள் ஏவுகணை ஒன்றின் பூஸ்டராக இருக்கலாம் என்றும் இதுஏவுகணையை ஏவிவிட்டு பூமியில் விழும் மோட்டார் ஆகும் என்றார்.

மேலும் ,பூஸ்டர் பொதுவாக ஒரு விமானத்துடன் இணைக்கப் பயன்படுத்தப்படும் இதுகாற்றில் ஏவப்பட்ட அமைப்பாக இருந்திருக்கலாம் என்றும் க்ரம்ப் கூறினார். அத்துடன் இஸ்ரேல் இந்த வகை ஆயுதத்தை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார் .

மேலும் , ப்ளூ ஸ்பரோ ஏவுகணைகள் மூன்று வகைகளைக் கொண்டுள்ளன: குறுகிய தூரம் செல்லும் கறுப்பு மற்றும் இடைப்பட்ட தூரம் செல்லும் நீலம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் வெள்ளி என்பன அவை , ப்ளூ ஸ்பரோ ஏவுகணைகள் “இதுவரை அதன் பணிகள் குறைபாடற்ற முறையில் செயல்பட்டுள்ளன” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

குறித்த ஸ்பரோ ஏவுகணை 2,000 கி மீ தூரம் வரை செல்லக்கூடியது எனவே சிரிய வான்பரப்பில் இருந்து போர் விமானங்களால் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ” ஈரானிய வான்வெளிக்குள் நுழையாமல், வெளி வான்பரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல், அதன் பங்காளிகளுக்கு தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி கவலை !

இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு தெரியாமலும், அதன் உதவியை பெறாமலும் இஸ்ரேல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது . வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனில், பணியாளர்கள் படுகொலையை அடுத்து, அமெரிக்க

ஜனாதிபதி ஜோ பைடன் இறுதியாக விடுத்த அறிக்கை ஒன்றை அண்மையில் வெள்ளை மாளிகை வெளியிட்டது . அதில் இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலால் ஜனாதிபதி ‘சீற்றமடைந்தார், மற்றும் மனமுடைந்து விட்டார்’. என்று குறிப்பிடப்பட்டுள்ளது

உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனித உரிமை மீறல்களுக்காக இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வாஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதை அடுத்து அது குறித்து கருத்து வெளியிட்ட இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா விதிக்கும் எந்தத் தடைகளுக்கும் எதிராகப் போராடப் போவதாகக் கூறினார்,

தொடர்ந்து இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், ஈடுபட்ட பைடன், காஸாவுக்கு போதுமான மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் , வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் வாடும் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளுக்கு உடன் உதவிகளை அனுப்ப தடுப்புக்களை திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ,அதற்கு, இஸ்ரேல் பிரதமர் உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் தாக்கம்

மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் மோதல் சம்பவங்கள் எண்ணெய் விநியோகத்தைச் சீர்குலைக்கும் என்று கவலைகள் எழுந்துள்ளன. தாக்குதலுக்குப் பின்னர் மசகு எண்ணெய் 1.8% அதிகரித்து ஒரு பீப்பாய் 88 டொலராக இருந்தது.

எண்ணெய் விலை ஆரம்பத்தில் 3.5% வரை உயர்ந்தது, ஆனால் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன் விலை நிலையான தன்மை அடைந்தது. மேலும் தங்கத்தின் விலை – ஒரு அவுன்ஸ் $2,400 க்கு அதிகரித்தது. இது வரலாறு உயர்வு என்று கூறப்படுகிறது.

தாக்குதல் தொடருமா?

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் உடனடி நேரடி யுத்தம் தொடரும் என்பதற்கு எந்த விதமான சாத்தியமும் இல்லை என்பதையே இரு தரப்பு போக்குகளும் காட்டுகின்றன . இஸ்ரேல் , ஹமாஸை அழிக்கும் நடவடிக்கைகளில் குறியாக உள்ளது.

அதை விடுத்தது மற்றொரு யுத்தத்தில் ஈடுபடும் சாத்தியமில்லை. ஈரான் தனது நாட்டை யுத்தம் சூழ்ந்து, நாடு அழிவதையும், தனது அணு ஆயுத முயற்சிகள் தடை படுவதையும் விரும்பாது. ஆனால் பாரிய பாதிப்பில்லாத பரஸ்பரம் பதிலடிகள் தொடரும் என்று நம்பலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆர். பி. என்

 

Share.
Leave A Reply

Exit mobile version