மஹிந்த தேரர் அரசனையும் அவருடைய நாற்பது ஆயிரம் படைகளையும் புத்த மதத்துக்கு மாற்றினார் என்கிறது தீபவம்சம்.
ஆனால் இது ஓர் சில நாட்களில் ஒரு சொற்பொழிவின் [பிரசங்கம் / sermon] பின் நடைபெறக்கூடிய ஒன்று அல்ல. மத மாற்றம் பொதுவாக வற்புறுத்தல், தூண்டுதல், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான அதற்கான உழைப்பு தேவை.
மஹிந்த தேரர் முதலில், புத்தர் செய்தது போலவே பயத்தை, திகிலை ஏற்படுத்தும் தந்திரங்களை பாவித்தார். அவர் ஒவ்வொரு முறையும் பூக்களை எறியும் பொழுது நிலநடுக்கம் ஏற்பட்டது. வட அல்லது வடமேற்கு இந்தியா நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள் ஆகும், அந்த நினைவு மரபால் கதையை சோடித்து இருக்கலாம்?
என்றாலும் தேவநம்பிய தீசன், தான் ஒரு தாது கோபுரம் கட்டுவதாகவும், ஆகவே இங்கேயே வழிபடலாம் என்றும், அதற்கு புத்தரின் உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை தேடும்படி கூறினார்.
எனவே மஹிந்த தேரர் சுமணாவை பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினார். அங்கே அசோகனிடம் அதை பெற்று வரும் படி. அசோகனும் மகிழ்வாக ஒரு அன்னதான கிண்ணம் நிரப்பி அதை வழங்கினார் என்று கூறுகிறது.
அசோகன் 84,000 துறவிமடங்கள் புத்தரின் உடல் எச்சங்களை நினைவு சின்னமாக வைத்து இந்தியாவில் கட்டினார் என்று பரவலாக இந்தியா மக்களால் நம்பப்படுகிறது. ஒருவரின் உடல் எச்சங்களை இந்த அளவுக்கு பிரித்து எடுக்கக் கூடிய தொழில் நுட்பம் இன்று கூட கிடையாது.
அதன் பிறகு தான் அசோகன் சுமணாவுக்கும் கொடுத்தார் என்பது என்னால் நம்பமுடியவில்லை?
அது மட்டும் அல்ல, நாகர்கள் கொண்டு சென்ற புத்தரின் எட்டாவது பகுதி எச்சங்களை, அசோகனால் கண்டு பிடிக்கவோ / பறித்து எடுக்கவோ முடியவில்லை என்றும், ஆனால் துட்டகாமினி அதை நாகர்களின் பாதாள லோகம் [Naga’s underworld] போய் எடுத்து வந்தார் என்று மறைமுகமாக துட்டகாமினியை பெருமைப்படுத்துகிறது.
மேலும் இலங்கையிலும் அனுராதபுர காலம் வரை தமிழர்கள் பௌத்தத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது தெளிவு.
உதாரணமாக கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்து இருக்கலாம் என்பதும், யாழ்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் சைவமதம் அல்லது இந்து மதம் மீண்டும் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்பு வரை தமிழ் வழி மகாயான (உயர்ந்த வழி) பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக இது அமைகிறது.
பொதுவாக, அடித்தளம், அண்டம், தூபி ஆகிய மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது தாதுகோபம் ஆகும். மற்றது இன்று சிங்களவர்கள் ஆதரிப்பது தேரவாத பௌத்தம் (மூப்பர்களின் வழி) என்பது குறிப்பிடத் தக்கது. இதை ஒரு பழமைவாத தொகுதியாக சிலர் கருதுகின்றனர்.
இதுவே வடக்கே உள்ள சான்றுகள் சிங்களத்துக்கு சம்பந்தமற்றவை என்பதாகிறது. தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காதது.
ஆனால் இன்று புத்த மதத்தை பின்பற்றுகிற அல்லது போதிக்கின்ற புத்த துறவிகள், புத்தர் விக்கிரகங்களை எங்கும், எதிலும் சிலவேளை வலுக்கட்டாயமாக, அங்கு வாழும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக, சிலவேளை மக்களின் காணிகளில் அல்லது பிற ஆலய காணிகளில் அத்துமீறி, நிறுவுவதில் கண்ணும் கருத்துமாக மூழ்கிப்போயிருக் கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
“அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையளும் அல்லது
கண்ட தில்லை”
என்று சுருக்கமாக, எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் பாதுகாப்பாக வாழ இடம் ஆகிய மூன்றினை இன்றியமையாதனவாகக் கூறி, அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினையையும் விளக்கிக் காட்டு கிறார். [“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.”]
இவ்வற்றை இன்றைய புத்த பிக்குகளும், பௌத்த அரசுகளும் சரியாக கடைபிடித்தால், கட்டாயம் எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை தானாகவே ஏற்படும். அதைத்தான் புத்தரும் உண்மையில் விரும்பினார். தன் சிலைகளை நிறுவி சர்ச்சை, அமைதியின்மை, பேதம் ஏற்படுத்தவல்ல?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]