ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது.
மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு ஒரு கலந்துரையாடலை வலு உற்சாகமாகச் செய்திருந்தது. “தமிழ்ச்சிவில் சமூகத்தினர்(?)” என்ற பேரிலும் அரசியல் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று தம்மைக் கருதிக் கொள்வோரும் இதில் இணைந்துள்ளனர்.
மேலும் சில மதகுருக்களும் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்குப் பின்புலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனமொன்று செயற்பட்டு வருகிறது.
அதுவே “மக்கள் மன்றம்” என்ற பெயருடைய ஒரு திடீர் அமைப்பை கடந்த மாதம் இதற்காகத் தோற்றியது. “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் காலத்தின்தேவை” என்றே இதற்கு நியாயம் சொல்லப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.
2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.
3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.
4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.
5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.
இதைப்படிக்கும் வாசகர்கள் சிரிக்க வேண்டாம். இதில் என்ன உண்டு? எந்தப் புதிய உள்ளடக்களும் இல்லையே. இதைத்தான் இந்தத் தரப்புகள் காலாகாலமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனவே என்று கோபித்துக் கொள்ளவும் வேண்டாம்.
ஏனென்றால் இவர்களால் இப்படித்தான் சிந்திக்க முடியும். இதற்கு மேல் புதிதாகச் சிந்திக்கக் கூடிய – யதார்த்தத்தை உணரக் கூடிய, காலமாற்றம், சூழல் மாற்றம், சமூக மாற்றம் பற்றிய அறிதிறன் ஆற்றல் இவர்களிடம் இல்லை. என்பதால் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள்.
ஆகவே இவர்களைக் கோபித்து எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், இவர்களுடைய இவ்வாறான தவறான சிந்தனை மிக ஆபத்தான விளைவுகளை மக்களுக்கு உண்டாக்கக் கூடியது. கடந்த காலத்திலும் இதுவே நிகழ்ந்தது. வரலாறு அதை நிரூபித்திருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம்.
இந்தப் பொதுவேட்பாளர் பற்றிய (முசுப்பாத்திக்) கலந்துரையாடல் நடந்து மறுநாள், கிளிநொச்சியில் நடந்த “தமிழ்த்தேசிய மேதினக் கூட்டத்தில்” கலந்து கொண்ட மனோ கணேசன், தாம் இந்தத் தீர்மானத்துக்கு வெளியே நிற்பதாகப் பகிரங்கமாகவே அறிவித்தார்.
மட்டுமல்ல, “வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழர்களை இந்தப் பொதுவேட்பாளர் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம். அந்தச் சூழலே வேறு” என்றும் சொன்னார்.
ஆக மனோகணேசனும் இந்தப் பொதுவேட்பாளர் என்ற “பகிடி” விவகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே இன்னொரு வேடிக்கையும் உண்டு. தமிழ்ப்பொது வேட்பாளருக்கு மனோ கணேசனின் பெயரைக் கடந்த வாரம் சிலர் பரிந்துரைத்திருந்தனர்.
ஆனால் மனோ கணேசனோ, பொதுவேட்பாளர் விடயத்தில் தாம் சம்மந்தப்படவே போவதில்லை என்று முகத்திலடித்துச் சொல்லி, அதிலிருந்து வெளியேறி விட்டார்.
மனோ கணேசனுக்கு இதில் பங்கெடுப்பது சிக்கலானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சியில் பங்கெடுக்கிறார்.
அப்படியிருக்கும்போது சஜித்துக்கு மாறாக அவரால் சிந்திக்க முடியாது. மட்டுமல்ல, 13 ஆவது திருத்தத்துக்கு சஜித் ஆதரவளிக்கிறார் என்ற சேதியையும் கிளிநொச்சியில் வைத்துச் சொல்லியிருக்கிறார் மனோ.
ஆகவே மறைமுகமாக பொதுவேட்பாளர் விடயம் பயனற்றது என்பதையும் தமிழர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாம் என்பதையும் ஒரே மேடையில் வைத்துச் சொல்லாமற் சொல்லியுள்ளார் மனோ கணேசன். மனோவின் சிறப்பும் கவனிக்கத் தக்க அம்சமும் இதுதான். அவர் எப்போதும் துணிச்சலோடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தலைவர்.
இன்று இலங்கைத்தீவில் பரவலாக அறியப்பட்ட தீர்மானச் சக்தியுடைய தமிழ்த்தலைவர்களில் மனோ கணேசன் முக்கியமானவர்.
அவரைப் பல சந்தர்ப்பங்களிலும் வடக்குக் கிழக்கு அரசியலில் தமிழ்த் தலைவர்களும் சேர்த்தே பயணித்திருக்கின்றனர்.
வடக்கில் தேர்தல் மேடைகள் தொடக்கம் முக்கியமான அரசியற் கலந்துரையாடல்கள், கட்டமைப்பு உருவாக்கங்கள், தீர்மானங்கள் எல்லாவற்றிலும் இணைத்தே வந்திருக்கின்றனர்.
அப்படித்தான் கிளிநொச்சி மேதினக் கூட்டத்திலும் மனோவின் பங்கேற்பு நடந்தது. என்பதால் மனோவை விட்டு யோசிக்க முடியாது. அவரைச் சுண்டித் தள்ளி விடமுடியாது.
இதில் கவனிக்க வேண்டிய கேள்வி ஒன்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனைக் கலந்து கொள்ள வைத்து, அவர் மூலமாகச் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறாரா? என்பதுவே அது.
இதை விட, இந்தத் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயம், மிகப் பலவீனமாக உள்ளது என்பதற்கு சில காரணங்களைப்பார்க்கலாம்.
1. பொதுவேட்பாளர் என்பது தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை மட்டும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும்.
குறைந்த பட்சம் இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மலையக மக்களையும் முஸ்லிம்களையும் கூட இதில் உள்ளடக்க முடியாதிருப்பது, தமிழர்கள் மேலும் தனிமைப்பட்டுச் சுருங்கிச் செல்வதையே காட்டுகிறது.
குறுகிய சிந்தனைக்கு இதுவே சரியெனப்படும். ஆனால், அரசியல் ராசதந்திர முதிர்வுக்கு இது பொருத்தமானதல்ல. குறிப்பாக வெளியுலகம் இதைக்குறித்துச் சிந்திக்கும்போது அல்லது கவனிக்கும்போது “தமிழ்பேசும் மக்களாகக் கூடச் சேர்ந்து ஓரணியில் நிற்க முடியாத அளவுக்குத்தான் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சமூகங்கள் உள்ளனவா?” என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பும்.
2. மட்டுமல்ல, ஜனாதிபதித்தேர்தலை கஜேந்திரகுமார் அணி நிராகரிக்கிறது. தமிழ் மக்கள் இதில் பங்கேற்கத் தேவையில்லை என்கிறார் கஜேந்திரகுமார்.
ஆகவே அவர்களுடைய கணிசமான வாக்காளர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை.
அத்துடன், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் அங்கயன் ராமநாதன், வியாழேந்திரன் போன்ற தரப்புகள் பொது வேட்பாளரை ஏற்கப்போவதில்லை.
மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்களும் உண்டு. (மஸ்தான் போன்றவர்களுக்குப் பெரும்பாலான தமிழ் வாக்குகளே கிடைக்கின்றன). அவர்களுடைய வாக்குகளும் பொ. வே க்குக் கிடையாது.
இதை விடச் சமத்துவக் கட்சி, மாக்ஸிஸ, லெனினிஸ ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் நிலைப்பாடு என்ன என்று இன்னும் தெளிவாகவில்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அந்தக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவோரின் கட்டுரைகளும் உரைகளும் சொல்கின்றன.
தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஆதரவு – எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடே உண்டு. இதை விட ஏற்கனவே சிறிலங்கா, சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, ஜே.வி.பி போன்றவற்றுக்கான வாக்குகளும் உண்டு. அவையும் இந்தப் பொ.வே விளையாட்டில் பங்கேற்காது. ஆகவே பொ.வே. பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை எந்தளவில் பிரதிபலிக்கும்?
3. பொதுவேட்பாளரை நிறுத்தித்தான் “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும்” என்றால் இதை விட வேறு பலவீனமான நிலை இல்லை எனலாம். வேறு வழிகள், வேறு முறைகள் ஏதுமில்லாத கையறு நிலையிலா தமிழ் மக்கள் உள்ளனர்.
சரி பிழைகளுக்கு அப்பால் 1977 லிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதற்கு முன் என்றும் சொல்லலாம். இன்னும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் முன்னிலைப் பாத்திரத்தை வகிக்கின்றன என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? அல்லது, புலம்பெயர் தேசங்களில் இன்னும் பெருவாரியான தமிழ் மக்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்? தமக்கு விடுதலை வேண்டும் என்றுதானே!
அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை எனத்தானே! அப்படியிருக்கும்போது பொது வேட்பாளரை நிறுத்தித்தான் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை வெளியுலகத்துக்குப் புதிதாகக் காண்பிப்பது என்றால், இதை விட வேடிக்கை என்ன?
தேசமாகத் திரள்வது, சமூகமாகச் சிந்திப்பது என்பதெல்லாம் குறித்த மக்களோடு இணைந்து நின்று களப்பணிகளைச் சிந்திப்பதன் மூலமே சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டமும் கட்சிகளுக்கிடையில் உள்ள இணக்கப்பாடுகளும் முதலில் உருவாக்கப்படுவது அவசியம். அதைச் செய்வதற்கு இந்தச் சிவில் அமைப்புகளால் முடியவில்லை.
ஏன் மதகுருக்களினாலும் முடியவில்லை. பதிலாக ஒவ்வொருவரும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விட்டனர். யாரோ, எங்கோ, எப்படியோ எடுக்கின்ற தீர்மானங்களுக்கு இங்கே காவடி ஆடுவோராக மாறியுள்ளனர்.
4. தம்மால் வேறு விதமாகச் சிந்திக்க இயலவில்லை என்பதை மறைப்பதற்காகவே “ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக (பொது வேட்பாளர் விடயத்தை) கையாள்வதும் பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவதும்” இதனுடைய நோக்கமென்று சொல்கிறார்கள்.
இது எவ்வளவு பம்மாத்து? மாறாக தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், அதனுடைய (வெற்றியளிக்கக் கூடிய) எதிர்கால அரசியல் என்ன?
அதை ஆய்வு ரீதியாக – விஞ்ஞானபூர்வமாக – முன்னெடுப்பதற்கான கட்டமைப்பு எப்படியாக இருக்க வேண்டும்? அதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்? முன்னெடுப்பு எப்படி என ஆய்வுக்குட்படுத்தி உருவாக்க வேண்டும்.
முக்கியமாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு அரசியலின் உச்சமே விடுதலைப் புலிகளின் அரசியலாகும்.
அது பெரும் சேதங்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. இனியும் அதைத் தொடர முடியாது. இவையெல்லாம் தந்த படிப்பினைகளிலிருந்து நாம் புதிய அரசியலை – சமாதானத்துக்கான – தீர்வுக்கான அரசியலைத் தொடர வேண்டும்.
அது நீண்டது. கடினமானது. உச்சமான பொறுமையைக் கோருவது. போரைப்போல விறுவிறுப்பற்றது. ஆனால், அதைத்தான் நாம் தொடர வேண்டும். கால நிர்ப்பந்தம், வரலாற்று நிர்ப்பந்தம் அதுவே.
அதைச் செய்ய முடியாமலிருக்கும் தமது தவறையும் பலவீனத்தையுமே இந்த பொ.வே என்ற அவசர நடவடிக்கை காட்டுகிறது.
அதாவது இவர்கள் யாரும் நடைமுறையில் களப்பணி செய்யத் தயாரில்லாதவர்கள். உண்மையையும் யதார்த்தத்தையும் எதிர்கொள்வதற்கான துணிவற்றவர்கள் என்பதால் “தமிழ் மக்கள் பேரவை”யைப்போல இப்பொழுது பொ.வே என்ற பலூனை ஊதிப்பெருப்பிக்கப் பார்க்கிறார்கள்.
ஒரு ஆறு மாதம் இவர்களால் தாக்குப் பிடிப்பது கடினம். பிறகு இதெல்லாம் காற்றுப்போகக் கைவிடப்படும் ஒன்றாகி விடும்.
ஆனால், இதையிட்டெல்லாம் இவர்கள் ஒரு போதும் பொறுப்புக் கூறுவதும் இல்லை, திருத்தம் செய்வதும் இல்லை.
இப்படிப் பல விடயங்கள் உண்டு. உண்மையில் செய்ய வேண்டியது இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய அரசியலும் வேலைத்திட்டமுமே.
கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில், புதிய சூழலுக்குரிய (போருக்குப் பிந்திய) அரசியலைப் பகுத்து அதை முன்னெடுக்க வேண்டும்.
அதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகிறது. சமாதானத்துக்கான – தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியுங்கள், அதில் ஈடுபடுங்கள் என. அதாவது மிக நிதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வுக்கான அரசியலை. நிச்சயமாக பகை வளர்ப்பு அரசியலை அல்ல.
ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, போருக்கு முந்திய, போர்க்காலத்தைய பகை வளர்ப்பு என்ற தோற்றுப்போன, தோல்வியைத் தரக்கூடிய அரசியலையே.
இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல.
ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
கடந்த காலத்தில் கூட இவர்களுக்கு எந்தச் சேதாரங்களும் ஏற்பட்டதில்லை. 30 ஆண்டுகாலப்போரை ஆதரித்த இவர்களின் உடலில் ஒரு சிறு கீறல் விழுந்ததில்லை. என்பதால்தான் இன்றும் போர்வீரர்களாக வெறிகொண்டு நிற்க இவர்களால் முடிகிறது.
எனவேதான் தமிழ் அரசியல் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்லப்படும் ஈழத்தமிழர்களுடைய அரசியலானது, பெரும்பாலும் சிறுவர்களுடைய மணல் விளையாட்டைப்போன்றே உள்ளது எனக் கூறவேண்டியுள்ளது. கற்பனை அதிகம்.
முயற்சிகளும் அதிகம். நல்விளைவுகள் எதுவுமில்லாதவை. சிறுபிள்ளை மணல் விளையாட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியாவது இருக்கும். வெளியே பாதிப்பிருக்காது. இங்கே முன்னெடுக்கப்படும் தமிழ் அரசியலில் எதிர்விளைவுகளே அதிகம். குருதியும் கண்ணீருமே அதனுடைய விளைவு மொழி.
இதைப்பொருட்படுத்தாமல் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். இது வன்மையான கண்டத்துக்குரியது என்று சொல்ல வேண்டியுள்ளது.