ஈரான், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகனைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியபோது அவற்றை தடுப்பதில் இஸ்ரேலுக்கு அண்டைய அரபு நாடுகளான சவூதி அரேபியாவும் ஜோர்தானும் உதவியுள்ளன.
அந்நடவடிக்கையானது பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அமெரிக்க – ஐரோப்பிய ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கான இரகசிய ஆதரவை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
1967 ஜூனில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பு யுத்தம் முதல் இஸ்ரேல் மேற்குகரை, காஸா, கோளான்குன்று மற்றும் கிழக்கு ஜெரூஸலம் ஆகிய பகுதிகளையும் தன்னோடு இணைத்துக் கொண்ட வேளைகளில் தன்னை வெல்ல முடியாத இராணுவ சக்தியாகவே இஸ்ரேல் வெளிக்காட்டி வந்துள்ளது.
ஆனால் கடந்த 13, 14ஆம் திகதி அதிகாலை வேளையில் ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்ட பிரம்மாண்டமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைத் தாக்குதல்கள் இம்மாயையை முறியடித்துள்ளன.
முன்னதாக சிரியாவில் உள்ள தனது தூதரக நிலைகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இத்தாக்குதலை நடத்தியிருந்தது.
காஸா பிரதேசம் மற்றும் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீதும் கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ள அழிவுகளென எதைப்பற்றியும் கொஞ்சம்கூடக் கவலைபடாது சவூதி அரேபியாவும் ஜோர்தானும் இஸ்ரேலைக் காப்பாற்றியுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய தாக்குதல்களை சமாளிப்பதற்காக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல், அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புதிய பிராந்திய இராணுவக் கூட்டணியை தாங்களும் ஆதரிப்பதாக இவ்விரண்டு நாடுகளும் வெளிப்படையாக அறிவித்துள்ளன.
தனது சுய இருப்புக்காக அமெரிக்காவிடமும் இஸ்ரேலிடமும் தங்கியுள்ள சவூதி அரேபியாவிடமிருந்து இது எதிர்ப்பார்க்கப்படாததல்ல.
இதைத்தான் சவூதியுடன் 100 பில்லியன் டொலர்கள் ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஆதரவின்றி சவூதி அரசால் இரண்டு வாரகாலங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று மிகவும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
இதுதான் இஸ்லாத்தின் புனித பூமியில் அமைந்துள்ள இராஜ்ஜியமொன்றின் தற்போதைய பரிதாப நிலை. இந்நிலை காரணமாகத்தான் கடந்த ஏழு மாதங்களாக பலஸ்தீன மக்களுக்கு தண்ணீர், மின்சாரம், மருந்து, உணவு மற்றும் வாழ்விடமென எதுவும் கிடைக்கவிடாமல் எல்லாவற்றின் மீதும் தடைகளை விதித்து தாக்குதலையும் நடத்திவரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக சவூதிஅரேபியா களமிறங்கி உள்ளது.
சவூதியின் மேற்படி பங்களிப்பால் சமாதானத்தை விரும்பும், அநீதிக்கு எதிரான உலக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இவ்விடயத்தில் ஜோர்தானும் சமமான பங்களிப்பை வழங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களைத் தடுத்து ஜோர்தானும் இஸ்ரேலைக் காப்பாற்றி உள்ளது.
ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் விமானப் படைகளை அமெரிக்க இராணுவம் நெறிப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக இஸ்ரேலும் ஜோர்தானும் தமது வான்பரப்பில் ஒன்றிணைந்து முதற்தடவையாக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் வான்பாதுகாப்பு பொறிமுறை ‘அயன்டோம்’ என்று அழைக்கப்படுவது எல்லோரும் அறிந்ததே. இப்போது மேலைத் தேசங்களால் இஸ்ரேலின் ஒட்டுமொத்த ‘அயன்டோம்’ ஜோர்தான் என்று வர்ணிக்கப்படுகின்றது.
காஸா மீதான தாக்குதல்கள் பற்றி இஸ்ரேலை வெறும் வாய்வழியாக வார்த்தைகளால் கண்டித்துக் கொண்டு, இஸ்ரேலைப் பாதுகாக்க தனது வான்பரப்பை தாராளமாகத் திறந்து விட்டு ஆதரித்துள்ளது ஜோர்தான். சர்வதேச அரங்கில் ஜோர்தானின் இந்த இரட்டை வேடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாடுகளின் நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் வகையில், ஜோர்தானின் முன்னாள் மன்னர் ஹுஸேன் 1970 செப்டெம்பரில் ஜோர்தானின் தலைநகரான அம்மான் நகர வீதிகளில் 30ஆயிரம் பலஸ்தீனர்களைக் கொன்று குவித்தார்.
இப்படுகொலைகளை நிறுத்துவதற்கு சிரியா முயன்றபோது தென்னாபிரிக்காவில் பிறந்த அன்றைய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அப்பா எபான் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படுமென எச்சரித்தார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இரு தினங்களுக்கு முன்னதாக சவூதிஅரேபியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தமது சகாக்களுக்கு ஈரான் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இத்தாக்குதலுக்கான காலநேரம் பற்றியும் அவர்கள் விளக்கமளித்தனர். அண்டை நாடுகள் தத்தமது வான்பரப்புக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.
ஆனால் இந்நாடுகள் மேற்படி தகவலை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் வழங்கி அவர்களை உஷார் நிலைக்கு கொண்டு வந்தனர். அமெரிக்க, இஸ்ரேல் யுத்த விமானங்களுக்கும் அரபு நாடுகள் தமது வான்பரப்பை தாராளமாக திறந்து விட்டதோடு ராடார் தடயங்களையும் ஏனைய தகவல்களையும் வழங்கினர்.
கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்ட மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும்; வாழும் மக்கள், பலஸ்தீனத்துக்கும் அரபு முஸ்லிம் உலகுக்கும் எதிரான சவூதி மற்றும் ஜோர்தானின் துரோகத்தால் கடும் சீற்றம் அடைந்துள்ளனர்.
மொரோக்கோ, அல்ஜீரியா, டுனீஷியா, எகிப்து, அம்மான் என்று பல இடங்களில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரபு நாடுகளின் இந்த ஈனச்செயலால் ஆத்திரம் அடைந்துள்ள பெல்ஜியம், மொரோக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்கள் இச்செயல் பலஸ்தீன வசந்த போராட்டத்தை தொடக்கி வைக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். 2010இன் கடைசிக் கட்டத்தில் டுனீஷியாவில் தொடங்கிய அரபு வசந்த போராட்டத்தை நினைவு படுத்தி அவர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி உள்ளனர்.
ஒருதசாப்தத்துக்கு முன் அவர்கள் செய்தது போலவே இத்தகைய போராட்டங்கள் இப்பிராந்தியத்தில் ஒரு முன்னோடியாகவும் அமையலாம். ‘2024இன் அரபு வசந்தம் மலர வேண்டும்’ என்ற ரீதியில் சமூக ஊடகங்களில் நிறைந்து காணப்படும் பின்னூட்டக் குறிப்புக்கள் இந்தக் கேள்விக்கு வழியமைத்துள்ளன.
மொஹமத் பொஆசிசி என்ற 26 வயதான ஒரு மீன் வியாபாரி தனக்கு தானே தீ மூட்டி ஏற்படுத்திய அந்த உயிர் தியாக நெருப்பு சமூக நீதிக்கும் பொருளாதார வாய்ப்புக்களுக்குமான அழைப்பை விடுத்தது. சர்வாதிகார தலைவர்கள் பலரின் ஆட்சியை அது கவிழ்த்தியது.
இப்போது மீண்டும் பலஸ்தீனத்தை மையப்படுத்தி அடக்குமுறை என்ற பொதுக்காரணிக்கு எதிராக அப்பிராந்திய மக்கள் மீண்டும் ஒன்றிணைய தயாராகின்றனர்.
அல்குத்ஸ், ஜெனின், அல்லது ரமல்லாஹ் என்று பல இடங்களில் பலஸ்தீனர்கள் பாதுகாப்பு படையினரின் உத்தரவுகளை மீறி வருகின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு படைகளினதும் பலஸ்தீன பொலிஸாரினதும் உத்தரவுகள் மீறப்பட்டு வருகின்றன.
காஸாவில் உள்ள தமது சகோதர சகோதரிகளுடனான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அவைவெறும் அடையாளங்கள் மட்டுமல்ல. இவை எமக்கு வழிகளைத் திறந்து விடும் வரலாறு. அவை அரபு வசந்தத்தின் சுவடுகளும் நினைவுகளுமே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இஸ்ரேலிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான பலஸ்தீன காரணியின் அடிநாதத்தோடு இவை கலந்துள்ளன. இப்பிராந்தியத்தில் எஞ்சியுள்ள மேலைத்தேச காலணித்துவத்தின் காவலர்களான கொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்க தூண்டுதலாகவும் இவையுள்ளன.
பலஸ்தீன வசந்தம் ஒன்று மலரும் பட்சத்தில் ஏற்கனவே ஏற்பட்ட அரபு வசந்தத்துக்கும் அதற்கும் இடையிலான காலஇடைவெளி ஒரு தசாப்தமாக இருக்கும். அந்த இடைவெளி புதியதொரு அரசியல் கற்பனையின் பிறப்புக்கு வழி சமைக்கும். அதில் அரபு குடிமக்கள் தமது ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்பதோடு மட்டுமன்றி அவர்களை வீழ்த்தவும் செய்வர்.
13 வருடங்களின் பின்னர் பலஸ்தீன வசந்தம் பிராந்தியத்தில் மீண்டும் தீ மூட்டுவதற்குரிய காலம் கணிந்துள்ள நிலையில் தற்போது ஏற்படும் புரட்சி முடிவடையும் தருவாயில் இதன் விளைவுகள் மிக பயங்கரமானதாக அமையலாம். அதற்கான எச்சரிக்கைளும் சமிக்ஞைகளும் இப்போதே விடுக்கப்பட்டுள்ளன.
-லத்தீப் பாரூக்-