“பஸ், ரெயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ. விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்துள்ளார்.

இதனால் அவர் அருகே அமர்ந்திருந்த மற்றொரு பயணி விமானத்தில் காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் இருமிக்கொண்டிருந்த பயணி எழுந்து சென்று, ஏற்கனவே தன் அருகே இருந்து விலகி சென்று அமர்ந்த பயணியின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சண்டை போட்ட பயணிகளை விலக்கி விட முயன்றனர்.

ஆனாலும் 2 பயணிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சமாதானபடுத்த முடியாமல் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏற்கனவே பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை பாராட்டி பதிவிட்டனர்.

மேலும் மோதலில் ஈடுபட்ட பயணிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version