ஜார்ஜியா நாட்டில், ‘ரஷ்யா சட்டம்’ என்று அழைக்கப்படும் ‘வெளிநாட்டுச் செல்வாக்கு’ பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மற்றொருபுறம் ரஷ்யாவில் இருந்து விலகி ஐரோப்பாவை நோக்கி நகரும் முயற்சிகள், தற்போது யுக்ரேனுக்கு நேர்ந்திருக்கும் போர் மற்றும் ஆக்கிரமிப்பை ஜார்ஜியாவிலும் ஏற்படுத்தும் என்ற கவலைகளும் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன.
கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா.
இதன் மக்கள்தொகை 37 லட்சம். இது முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. இந்நாடு இன்றைய ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வருகிறது.
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பின், அதன் பல கூட்டமைப்பு நாடுகள் எந்த அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பது, எந்த சர்வதேசக் கூட்டணிகளில் சேர்வது என்ற அடிப்படையில் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்கியது.
எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா போன்ற பால்டிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேரும் முடிவை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.
ஆனால் யுக்ரேனின் கதை வேறு. ரஷ்யா தன் செல்வாக்கு மண்டலத்தின் பகுதியாக நீண்ட காலமாகக் கருதிய ஒரு மிகப் பெரிய நாடு யுக்ரேன். 2014இல் ஐரோப்பிய சார்பு மக்கள் போரட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் நெருக்கமான பொருளாதார ஒன்றியத்தில் இருந்து விலகிச் செல்ல யுக்ரேன் முடிவு செய்தது.
இதனால் கிரைமியா மற்றும் கிழக்கு யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது யுக்ரேன் மீது ரஷ்யா ஒரு முழு அளவிலான போரை நடத்தி வருகிறது. மேலும் பல யுக்ரேனிய பகுதிகள் ரஷ்ய ஆதிக்கத்தின் கீழ் உள்ளன.
ஜார்ஜியாவும் இதேபோன்ற கதியைச் சந்திக்கக் கூடுமா?
இந்த வாரத் துவக்கத்தில், ஜார்ஜியாவின் நாடாளுமன்றம் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
அதில் வெளிநாட்டிலிருந்து 20%-க்கும் அதிகமான நிதியைப் பெறும் சில நிறுவனங்கள் தங்களை`வெளிநாட்டுச் செல்வாக்கின் முகவர்களாகப்` பதிவு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டுமென்றும், விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது.
ஜார்ஜியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சுயாதீன ஊடகங்களும் வெளிநாட்டிலிருந்து மானியங்கள் மற்றும் பிற நிதிகளுக்கு விண்ணப்பிப்பது பொதுவானது என்று, ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிசியில் உள்ள பிபிசி நிருபர் நினா அக்மெடெலி கூறுகிறார். இந்த அமைப்புகளின் பணி, நாட்டின் குடிமைச் சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது.
ஜார்ஜியாவை ஆளும் கட்சியான ‘ஜார்ஜிய கனவு’ (Georgian Dream), நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை முன்மொழிந்தது.
ஆனால் இது அரசின் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்படவில்லை, மாறாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும், பல்வேறு அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் என்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது.
ஆனால் திபிலிசியில் உள்ள இலியா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை பேராசிரியரான ஹான்ஸ் குட்ப்ராட், இந்த மசோதா ‘பெயருக்கு மட்டும்தான்’ வெளிப்படைத்தன்மை பற்றியது என்று கூறுகிறார்.
“இது பொதுச் சமூகத்தின் மீதான பலமுனைத் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இது ஜார்ஜியாவில் சில காலமாகவே நடந்து வருகிறது.
இந்தச் சட்டம் ‘யாரை வேண்டுமானாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும்’ சட்டமாகும். நீங்கள் விரும்பாத எந்தவொரு குடிமைச் சமூக அமைப்பையும் அடக்குமுறைக்கு உள்ளாக்க அனுமதிக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது,” என்று குட்ப்ராட் கூறுகிறார். இவர் 1990களில் இருந்து காகசஸ் பகுதியைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து வருகிறார்.
இந்தச் சட்டம் இறுதியாக நிறைவேற்றப்பட்டபோது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தன.
“இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதையில் பயணிக்கும் ஜார்ஜியாவின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்தச் சட்டத்தை ‘எதேச்சதிகாரமானது’ மற்றும் ‘ரஷ்ய-பின்புலமுடையது’ என்று கண்டித்து திபிலிசியின் தெருக்களில் இறங்கிப் போராடினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் சம்பவித்தது.
சர்வாதிகார சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக ஜார்ஜியா இருந்த வரலாற்றைக் குறிப்பிட்டு பிபிசியிடம் பேசிய ஒரு போராட்டக்காரர், “நாங்கள் எந்தக் குழியிலிருந்து வெளியே வந்தோமோ அதற்குள் மீண்டும் தள்ளப்படக்கூடாது என்பதற்காகப் போராடி வருகிறோம்,” என்றார்.
போராட்டத்துக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு?
இந்த ஜார்ஜிய சட்டம், தனது எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த ரஷ்யா பயன்படுத்தும் ஒரு சட்டத்தை ஒத்திருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அடுத்த ஜார்ஜிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்படது.
இந்தத் தேர்தல், 2012 முதல் ஜார்ஜியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஜார்ஜியன் ட்ரீம்’ கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கக்கூடும்.
இக்கட்சியின் கொள்கைகள், ரஷ்யாவை போலவே ஒரு அரசியல் குழுவின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதாகக் கருதப்படுகிறது.
‘ஜார்ஜியன் ட்ரீம்’ கட்சியின் கௌரவத் தலைவர், ஃபிட்ஜினா இவானிஷ்விலி என்ற கோடீஸ்வரர்.
அவருடைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.40,905 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது (4.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இது ஜார்ஜியாவின் பட்ஜெட்டைவிட அதிகம், மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆகும். அவரது பல வணிகங்கள் ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளன.
“ஜார்ஜியா அரசின் எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாகவும், குடிமைச் சமூகத்தை அடக்கும் செயல்முறையில் ரஷ்யாவை பின்பற்றப் பார்ப்பதாகவும் நான் நினைக்கிறேன்,” என்கிறார் பொலிட்டிகோ என்ற ஊடக நிறுவனத்தின் தெற்கு காகசஸ் நிருபர் கேப்ரியல் கேவின்.
“அதே நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இவானிஷ்விலிக்கு இதுகுறித்து அறிவுரை வழங்க வேண்டியிருந்தது என்று நான் நினைக்கவில்லை.
இந்த விஷயத்தில் இவானிஷ்விலிக்கு உந்துதல் தேவையில்லை. ஏனெனில் புதினைப் போலவே வெளிநாட்டுச் செல்வாக்கின் அச்சுறுத்தலைப் பற்றி அவர் அதே அச்சங்களை அனுபவிக்கிறார்,” என்றார் அவர்.
உலக அரசியலில் ஜார்ஜியா எவ்வளவு முக்கியமானது?
ஜார்ஜியா அமைந்துள்ள தெற்கு காகசஸ் பகுதி ‘ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான நுழைவாயில்’ என்று விவரிக்கப்படுகிறது.
இது பண்டைய உலகின் வர்த்தகப் பாதைகளின் தாயகம். இது இன்று வரை முக்கியமாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக, இரான், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசுகள் இந்தப் பிராந்தியத்திற்காகச் சண்டையிட்டன. மேலும் இப்பகுதியில் செல்வாக்கு செலுத்துவதற்காகத் தொடர்ந்து போட்டியிடுகின்றன. சமீபகாலமாக, சீனா மற்றும் மேற்கத்திய சக்திகளும்கூட இப்பகுதியின்மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
கடந்த 1918இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 1991 வரை ஜார்ஜியா ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 1980களில் தேசிய அடையாள மறுமலர்ச்சியை அனுபவித்த முதல் சோவியத் குடியரசுகளில் ஜார்ஜியாவும் ஒன்று.
இது நாடு தழுவிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைந்தது. அது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கடந்த 2003இல் நடந்த ‘ரோஜாப் புரட்சி’யின் மூலம் (Rose Revolution) ஜனநாயக மாற்றத்தை அனுபவித்த முதல் முன்னாள் சோவியத் நாடு ஜார்ஜியா.
இது ஜார்ஜியாவின் சோவியத் எதேச்சாதிகார வரலாற்றை அசைக்க முயன்றது. இது ரஷ்யாவை நேருக்கு நேர் பார்க்காத ஓர் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேர்வதை நோக்கி ஜார்ஜியாவை தீவிரமாக வழிநடத்த முயன்றது.
2008ஆம் ஆண்டில், ரஷ்யா ஜார்ஜியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. இன்றும் ரஷ்ய படைகள் திபிலிசியில் இருந்து சுமார் 130கி.மீ. தூரத்தில் நிறித்தி வைக்கப்பட்டுள்ளன.
யுக்ரேனுடனான ஒப்பீடுகள் சரியா?
கடந்த சில வாரங்களாக, பல ஆய்வாளர்கள் ‘வரலாறு திரும்புவதை’ பற்றிப் பேசி வருகின்றனர்.
ஓர் அரசின் எதேச்சாதிகாரப் போக்குகள் தீவிரமடைகின்றன, அதன் ஜனநாயகப் போக்கில் இருந்து திசை திரும்புகிறது, அங்கு எதிர்ப்புகள் வெடிக்கின்றன, இறுதியில் ரஷ்யா அங்கு நுழைந்து காலூன்றுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் 2013-2014இல் யுக்ரேனில் நடந்தன. 2022இல் மோசமடைந்தன. 1945க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் வெடித்தது. ஆனால் ஜார்ஜியாவின் விஷயத்தில் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
முதலாவதாக, ஜார்ஜியா 2003 மற்றும் 2008க்கு இடையில் யுக்ரேன் பாணியிலான நிகழ்வுகளை அனுபவித்தது. அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் நிகழ்ந்தன. ரஷ்ய படையெடுப்பு நிகழ்ந்தது. அதன் 20% நிலப்பரப்பு ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
இங்கு உண்மையான கேள்வி என்னவென்றால்: ஜார்ஜியாவின் ரஷ்ய-நட்பு அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்தால் ரஷ்யா ஜார்ஜியாவை மேலும் ஆக்கிரமிக்குமா?
இந்தச் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் ‘ஜார்ஜியன் ட்ரீம்’ கட்சி தன் கட்டுப்பாட்டை இழப்பதும் சந்தேகம்தான்.
பிபிசி நிருபர் நினா அக்மெடெலி கூறுவது போல, ஜார்ஜியா ஒரு பிளவுபட்ட சமூகம். அங்கு பெரும்பான்மையான மக்கள் நிலமை மோசமடைவதைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். சிலர் உண்மையிலேயே ஆளும் கட்சியை ஆதரிக்கின்றனர்.
ஜார்ஜியா போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு ரஷ்யாவுடன் ஒட்டிக்கொள்வது ஒரு நடைமுறைத் தேர்வு என்று சிலர் நம்புகிறார்கள்.
அதன் பொருளாதாரம் அதன் பரந்த அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை நம்பியுள்ளது, ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஜார்ஜியாவின் ராணுவம் மிகச் சிறியது, என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
சர்ச்சைக்குரிய ‘வெளிநாட்டு செல்வாக்கு’ சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இவானிஷ்விலி ஓர் அரிய பொது உரையை நிகழ்த்தினார்.
அதில் ரஷ்யாவுடனான மோதலில் ஜார்ஜியா மக்களைப் பலிகொடுக்க நினைக்கும் மேற்கு நாடுகளின் முயற்சியைத் தடுக்க இந்தச் சட்டம் அவசியம் என்று கூறினார்.
திபிலிசியின் தெருக்கள் போரட்டக்காரர்களால் நிறைந்துள்ளன. அவர்களில் பலர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள்.
ஜார்ஜியாவின் எதிர்காலம் ஒரு நூலிழையில் தொங்குகிறது. அங்கு, ரஷ்யா போன்ற ஒரு நாட்டில் வாழும் சாத்தியத்தை நினைத்துப் பலரும் அதிர்ச்சியடைகிறார்கள். யுக்ரேன் எதிர்கொண்ட அழிவு மற்றும் உயிரிழப்பு போன்றவற்றைப் அனுபவிக்கும் சாத்தியத்தை நினைத்துப் பலரும் பயப்படுகிறார்கள்.
எழுதியவர், கடெரினா கின்குலோவா
பிபிசி தமிழ் செய்தி-