ஐபிஎல் டி20 தொடரின் 2024ம் ஆண்டு சீசனில் முதலிடத்தில் பல வாரங்களாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது இருக்கும் 2வது இடத்தையாது தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி 2வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்தது. 215 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரப்சிம்ரன் சிறப்பான ஆட்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கில் அதர்வா தெய்டே, பிரப்சிம்ரன் சிங் 97 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் அளித்தனர்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தனர்.

முதல் வாய்ப்பு பெற்ற அதர்வா 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ரூஸோ களமிறங்கி, பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுக்கவே, 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 100ரன்களை எட்டியது.

கடந்த பல போட்டிகளாக சொற்ப ரன்களில் சொதப்பலாக ஆட்டமிழந்த பிரப்சிம்ரன் சிங் கடைசி ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக பேட் செய்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

2வது விக்கெட்டுக்கு ரூஸோவுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்த பிரப்சிம்ரன் சிங் 54 ரன்கள் சேர்த்து விஜயகாந்த் பந்துவீச்சில் 71 ரன்களில் (45பந்துகள், 4சிக்ஸர்கள், 7பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

கோட்டை விட்ட பஞ்சாப்

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் என வலுவாக இருந்ததால், ஸ்கோர் 240க்கு மேல் உயரலாம் என கணிக்கப்பட்டது. ஆனால், 15 முதல் 18 ஓவர்களுக்கு இடையே 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகன் சஷாங்க் 2 ரன்களில் வந்த வேகத்தில் ரன்அவுட்டில் ஆட்டமிழந்தார். பல போட்டிகளில் பஞ்சாபை வெல்ல வைத்த சஷாங்க் சிங் தொடர்ந்து 3வது போட்டியில் குறைந்த ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜிதேஷ் ஷர்மா, ரூஸோவுடன் சேர்ந்து ஆடினார். அதிரடியாக ஆடிய ரூஸோ 24 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து அரைசதத்தை தவறவிட்டார்.

5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஷுதோஷ் 2 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் ஜிதேஷ் ஷர்மா கேமியோ ஆடி 2 சிக்ஸர், 2பவுண்டரி உள்பட 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அபிஷேக் அதிரடி ஆட்டம்

215 ரன்களை சேஸிங் செய்கிறோம், ப்ளே ஆஃப் சென்றுவிட்டோமோ தோல்வி அடைந்தால் என்ன என்ற மிதப்புடன் சன்ரைசர்ஸ் அணி இந்த ஆட்டத்தை துளிகூட அணுகவில்லை என்று அந்த அணியின் சேஸிங்கில் தெரிந்தது.

டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் ஆட்டமிழந்தவுடன், அபிஷேக் ஷர்மா என்ன செய்யப் போகிறார், அடித்து ஆடப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் பவுண்டரி, சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கினார். அவருடன் சேர்ந்த ராகுல் திரிபாதியும் அவர் பங்கிற்கு சிக்ஸர், பவுண்டரி விளாசினார்.

முதல் விக்கெட் ஒரு ரன் சேர்ப்பதற்குள் இழந்தாலும் பவர்ப்ளே ஓவர்களை சன்ரைசர்ஸ் அணி சரியாகப் பயன்படுத்தியது.

ராகுல் திரிபாதி சிறிய கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 18 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக்-திரிபாதி 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்து நிதிஷ்குமார் ரெட்டி களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார்.

பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் 84 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக பேட் செய்த அபிஷேக் 21 பந்துகளில் அரைசதம் எட்டினார். 8.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை எட்டியது.

அபிஷேக்குடன் சேர்ந்த நிதிஷ்குமார் சிக்ஸர்களாக விளாச சன்ரைசர்ஸ் ரன்ரேட் எகிறியது. இருவரின் பார்ட்னர்ஷிப் 28 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

சிறப்பாக பேட் செய்த அபிஷேக் 66 ரன்கள் சேர்த்த நிலையில் சஷாங்சிங் ஓவரில் விக்கெட்டை இழந்தார். 3வதுவிக்கெட்டுக்கு அபிஷேக், நிதிஷ்குமார் 54 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து கிளாசன் களமிறங்கி, நிதிஷுடன் சேர்ந்தார். கிளாசனுக்கு அதிகமான ஸ்ட்ரைக்கை வழங்கி, நிதிஷ் பொறுமையாக பேட் செய்தார்.

வெற்றியை எளிதாக்கிய கிளாசன்

கிளாசன் நிதானமாகத் தொடங்கி, ராகுல் சஹரின் 11வது ஓவரில் முதல் சிக்ஸரை விளாசினார். அதன்பின் ஹர்பிரித் பிரார் ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸரும், நிதிஷ் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இருவரின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ரன்ரேட் எகிறியது.

ஹர்சல் படேல் வீசிய 14-வது ஓவரில் நிதிஷ்குமார் 33 ரன்கள் சேர்த்தநிலையில் சஷாங் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இருவரும் 4வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஷாபாஸ் அகமது 3 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு அப்துல் சமது களமிறங்கினார்.

கிளாசன் 42 ரன்கள் சேர்த்தநிலையில் பிரார் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அப்துல் சமது(11), சன்வீர் சிங்(6) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 20வது ஓவரின் முதல் பந்தில் சன்ரீவீர் சிங் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

பல் இல்லாத பஞ்சாப் பந்துவீச்சு

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை ஏற்கெனவே அந்த அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. வழக்கமான கேப்டன்கள் ஷிகர் தவண், சாம் கரன் இல்லாத நிலையில் ஜிதேஷ் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டார்.

பந்துவீச்சில் பஞ்சாப் அணி அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்ததால், 214 ரன்கள் சேர்த்தும் வெற்றி பெற முடியவில்லை.

ஆட்டநாயகன் அபிஷேக்

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் முதல் ஓவர் முதல் பந்தில் அர்ஷ்தீப் ஓவரில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தபோதிலும், அபிஷேக் ஷர்மா(66) ரன்கள்(28 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள்) சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அபிஷேக் ஷர்மா 21 பந்துகளி்ல் அரைசதம் அடித்தது, அவரின் 3வது அதிவேக அரைசதமாகும். இதற்கு முன் 16 பந்துகளில் மும்பைக்கு எதிராகவும், 19 பந்துகளில் லக்னெளவுக்கு எதிராகவும் அபிஷேக் அரைசதம் அடித்திருந்தார்.

இது தவிர ராகுல் திரிபாதி(33), நிதிஷ் குமார் ரெட்டி(37), கிளாசன்(42) ஆகிய நடுவரிசை பேட்டர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு உதவியது. இந்த சீசன் முழுவதும் காட்டடி அடித்துவரும் கிளாசன் இந்த ஆட்டத்தில் 26 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக அடைய உதவினார்.

பந்துவீச்சைப் பொருத்தவரை சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் மட்டுமே இன்று ஓரளவுக்கு கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். கேப்டன் கம்மின்ஸ்கூட ஓவருக்கு 9ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், நடராஜன் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு 2வது இடம் கிடைக்குமா?

இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 போட்டிகளில் 8 வெற்றி, மழையால் ஒரு ஆட்டம் ரத்து என 17 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் அணியின் நிகர ரன்ரேட்டைவிட சன்ரைசர்ஸ் நிகர ரன்ரேட் 0.410 ஆக உயர்ந்ததையடுத்து, 2வது இடத்தைப் பிடித்தது.

இதனால், குவஹாட்டியில் இன்று இரவு நடக்கும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தால் 16 புள்ளிகளும், அல்லது மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலோ ராஜஸ்தான் அணி ஒரு புள்ளியோடு 17 புள்ளிகள் பெற்று 3வது இடத்தையே பிடிக்க முடியும்.

ராஜஸ்தான் அணி தற்போது 0.273 நிகர ரன்ரேட்டில் இருக்கிறது, இந்த ஆட்டத்தில் வென்றால்தான் ராஜஸ்தான் 18 புள்ளிகள் பெற்று 2வது இடத்தைப் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் ராஜஸ்தானுக்கு 3வது இடம்தான்.

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி சேஸிங்கில் பலவீனமான அணி என்பதை ஆர்சிபி அம்பலப்படுத்திய பின் சன்ரைசர்ஸ் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தது.

அதன்பின் மீண்ட சன்ரைசர்ஸ் 10 நாட்கள் இடைவெளிக்குப் பின், தங்களால் சேஸிங்கும் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version