ரசிகரின் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது
கன்னட திரைப்பட நடிகையும் நடிகர் தர்ஷனின் மனைவியுமான பவித்ரா கவுடாவிற்கு பெங்களூரைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், ரேணுகாசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன.
முன்னதாக, கொலையை ஒப்புக்கொள்வதற்காக நடிகர் தர்ஷன் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இந்தக் கொலைக்கு போலீஸ் ஒருவர் உதவியதாகவும் தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ‘உடலில் 15 காயங்கள் இருந்ததாகவும், அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக இறந்துபோயுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரேணுகாசாமியை காரில் அழைத்துச் சென்ற டிரைவர் போலீஸிடம் வாக்குமூலம்
இந்த நிலையில், ரேணுகாசாமியை ஏற்றிச் சென்ற கார் ஓட்டுநரான ரவி என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், “என்னையும் இந்தக் கொலையை ஏற்றுக்கொள்ளுமாறு தர்ஷன் தரப்பினர் கேட்டனர். ஆனால், நான் அதை ஏற்கவில்லை. முன்னதாக, என் காரில் ரேணுகாசாமி வலுக்கட்டாயமாக ஏற்றப்படவில்லை.
அதாவது, கடத்தப்படவில்லை. ’தர்ஷன் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் எனவும், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதற்காக அவர்களிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனச் சொல்லித்தான் தர்ஷனின் கூட்டாளிகள் அவரை என் காரில் ஏற்றினர்” என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை, சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருவுக்கு தர்ஷன் கூட்டாளிகளுடன் ரேணுகாசாமியை காரில் அழைத்துச் சென்றவர் டிரைவர் ரவி. சித்ரதுர்கா ரசிகர் மன்றத்தை நிர்வகித்து வந்த ரகு என்கிற ராகவேந்திராதான் ரவியின் காரை ஏற்பாடு செய்தவர்.
இந்த ரகுதான் மற்றவர்களுடன் இணைந்து ரேணுகாசாமியை, கடந்த ஜூன் 8ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றுள்ளார். இந்த கொலை விவகாரத்திற்குப் பிற்கு டிரைவர் ரவி தலைமறைவாகி உள்ளார்.
பின்னர் தன்னுடைய டாக்சி சங்கத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே ரவி, சித்ரதுர்காவில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். தற்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீஸுக்குப் பெரும் உதவியாக இருப்பதாக நம்பப்படுகிறது.
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்குத் தொடர்பு| பாதுகாக்கிறதா மாநில காங்கிரஸ்?
கர்நாடகாவில் புயலைக் கிளப்பியிருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. தர்ஷனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜங்கம் சமாஜம் வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம் இவ்விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நடிகர் தர்ஷனைப் பாதுகாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும், ’’இந்த விவகாரத்தில் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை’’ என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார்.
”வரவிருக்கும் சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில் தர்ஷனை களமிறக்குவதற்காகவே, மாநில காங்கிரஸ் பாதுகாக்கிறது” என பாஜக தலைவர் சிபி யோகேஷ்வர் தெரிவித்துள்ளார்.
ஜனதா தளம் (எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.