இஸ்ரேல் — அமெரிக்க போர்த் தந்திரத்திற்குள் ஒன்றாக போர்நிறுத்தத்திற்கான திட்டமிடல் அமைந்துள்ளதைக் கண்டு கொள்ள முடிகிறது. காரணம் போர் நீடிக்கிறது என்பதுடன், போர் நிறுத்தத்துக்கான உரையாடலும் ஒப்புதல்களும் சமகாலத்தில் நகர்த்தப்படுகிறது.
பாலஸ்தீனர்கள் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையிலிருக்கும் போது, அவர்கள் மீதான தாக்குதல் நிகழுகிறது.
இதுவே இஸ்ரேல்- –அமெரிக்க கூட்டின் போர்த் தந்திரமாக உள்ளது. அரைகுறை அரச வடிவத்தைக் கொண்டுள்ள அரசற்ற சமூகங்களுக்கும் அரசுகளுக்குமான போர் நகர்வுகள் தவிர்க்க முடியாது நெருக்கடியை எதிர்கொள்வதுடன் அதற்கான அடிப்படைகளை அழித்தொழிக்கும் அரசியலையே வல்லரசு நாடுகளும் நிகழ்த்தி வருகின்றன.
இதற்கான நிதி அளிப்புகளுக்கும் ஆயுத தளபாடங்களுக்கும் அத்தகைய வல்லரசுகள் தமது பொருளாதாரத்தை பயன்படுத்துகின்றன.
உலகத்தை ஆளும் வல்லரசு நாடுகளின் அரசியல் பொருளாதார திட்டமிடல் என்பது தமது ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கு தடையான சக்திகளை அழித்தொழிப்பதேயாகும்.
இதற்காகவே வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் சந்திப்புக்களும் திட்டமிடல்களும் நிகழ்கின்றன.
அதில் ஓரங்கமாக பொருளாதாரம், சூழலியல், காலநிலை மாற்றம் போன்ற விடயங்கள் அமைந்திருந்தாலும் நடைமுறையில் மேற்குலக வல்லரசுகளின் அதிகார அரசியலுக்கு எதிரான சக்திகளை அழிவுக்குள்ளாக்கும் நகர்வுகளை கூட்டாக எதிர்நோக்குவதற்கான தயார்படுத்தலாகவே உள்ளது.
அதில் முக்கிய அம்சமாகவே இத்தாலியில் கூடியுள்ள ஜி-7 நாடுகளது உரையாடலைக் கண்டு கொள்ள முடிகிறது.
வர்த்தகம் மற்றும் சந்தை தொடர்பிலும் அதிக கவனம் கொண்டிருந்தது. இத்தாலியில் நிகழ்ந்த மாநாட்டில் பார்வையாளராக அழைக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் ஒருவராக காணப்பட்டார்.
உக்ரையின் -ரஷ்யப் போரை ஊக்குவிக்கும் நகர்வுகளும் ஜி-7 நாடுகளது சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.
அதாவது உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிகழ்ந்த பாதுகாப்பு உடன்படிக்கையே முக்கியமான இராணுவ அரசியலாக விளங்குகிறது.
அரசியல் பொருளாதாரத்தின் அங்கமான ஜி-7 நாடுகள் மாநாட்டில் இராணுவ உடன்படிக்கைக்கான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமன்றி ஜப்பான்- உக்ரைனுக்கு இடையிலும் பாதுகாப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க – உக்ரைன் பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை அவதானிப்பது அவசியமானது.
உக்ரைன் மீது எதிர்காலத்தில் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டால், அமெரிக்காவும் உக்ரைனும் 24 மணித்தியால இடைவெளியில் உயர்மட்ட அளவில் இராணுவ ஆலோசனைகளை நிகழ்த்தி முடிவுகளை மேற்கொள்வதெனவும், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுத தளபாடங்களையும் இராணுவ ரீதியான பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்குவதெனவும் அடுத்துவரும் பத்து ஆண்டுகளுக்கு இத்தகைய உடன்படிக்கை செயல்பாட்டில் தொழிற்படும் எனவும் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய உடன்படிக்கை தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குறிப்பிடும் போது ரஷ்யாவுடன் போராடிவரும் உக்ரைனுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு எனவும் உக்ரைனின் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கவும் பயிற்சிகளை பலப்படுத்தவும் உக்ரைன் உள்நாட்டில் இராணுவத் தொழில்சாலைகளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கும் எனக்குறிப்பிட்டார்.
அவ்வாறே நேட்டோவில் உக்ரைன் இணைவதற்குரிய பாலமாக இது அமைந்துள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியது.
அதேநேரம் எதிர்கால உக்ரைனது இராணுவப் பாதுகாப்புக்கு அடிப்டையான மூலோபாயத்தை உடன்பாடு ஏற்படுத்தியுள்ளதாக ஜெலன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த உடன்பாடு எத்தகைய விளைவை உக்ரைன்- ரஷ்யா போரில் ஏற்படுத்தப் போகிறது என்பதை தேடுவது அவசியமானது.
ஓன்று, உக்ரைன்- — ரஷ்ய போர் இராணுவ ரீதியில் முனைப்புப் பெறத் தொடங்கவுள்ளது. இதுவரையும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ உதவிகளை வழங்கிவந்த அமெரிக்காவும் நேட்டோவும் நேரடியாகவும் பாரிய ஆயுததளபாடங்களை வழங்கவும் முன்வந்துள்ளன.
அது மட்டுமன்றி பாரிய விமானப் படைகளுக்கான திட்டமிடலையும் விமான எதிர்ப்புக்கான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அமெரிக்க வழங்க முன்வந்துள்ளதை உடன்பாடு உறுதிப்படுத்தியுள்ளது.
இது ரஷ்யாவின் இராணுவ நகர்வுக்கு சவாலான உடன்பாடாக அமைந்திருப்பதோடு நேரடியாக இராணுவ நகர்வுகளில் அமெரிக்கா நகரத் தொடங்குகிறது.
இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால் உக்ரைன்- — ரஷ்யப் போர் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. கடந்த இருவாரங்களாக அத்தகைய தாக்குதலின் முனைப்புக்களை அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் தகர்ந்துள்ளது.
அதிலும் கிரிமியா. டேன்பாஸ் போன்ற ரஷ்யா கைப்பற்றிய பகுதியிலிருந்த ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்ப மையங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளது.
அது மட்டுமல்லாது ரஷ்யாவின் நிலப்பரப்பிலுள்ள இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகளை தாக்குவதற்கான நீண்டதூர ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியதுடன் தாக்குதலுக்கான அனுமதியையும் வழங்கியிருந்தமை கவனத்திற்குரியதாகும்.
எனவே அமெரிக்கா- — உக்ரைன் இராணுவ உடன்பாடு, இராணு ரீதியில் அதிக திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது.
ஈரானிய ஜனாதிபதி ரைசியின் படுகொலைக்குப் பின்னர், இஸ்ரேலிய- ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு எதிரான செறிவாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதனாலும் ரஷ்யாவின் பிரதான நட்புச்சக்தி அழிக்கப்பட்டதனாலும் ரஷ்யாவுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்க முடியுமென அமெரிக்கா கருதுகிறது.
அதனையே முதன்மையானதாகக் கொண்டு உக்ரைன்- — ரஷ்யப் போரை கையாள மீளவும் ஆரம்பித்துள்ளது.
இது ஒரு முகாமை அரசியலாகவே தெரிகிறது. இரண்டு போர் முனைகளையும் அமெரிக்கா சமநேரத்தில் முகாமை செய்யும் அரசியலை கடந்த காலங்களில் கையாண்டது போல் கையாண்டுவருகிறது.
பனிப்போர்க் காலம் முழுவதும் மேற்குலகத்தின் முகாமை அரசியல் மிக ஆரோக்கியமான நகர்வுகளைச் சாத்தியப்படுத்தியுள்ளது. அதன் நீட்சியே தற்போதைய அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் நகர்வாக உள்ளது.
இரண்டு, அமெரிக்காவுடனான உக்ரைன் இராணு உடன்பாடு ஏறக்குறைய உக்ரைன் நேட்டோவில் இணைந்ததற்கான நடவடிக்கையாகவே உள்ளது.
அதாவது உக்ரைன் நேட்டோ நாடாக மாறியுள்ளது. எதற்காக ரஷ்யா உக்ரைனுடன் போர் புரியத்திட்டமிட்டதோ அதனை இந்த உடன்பாடு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
வெளிப்படையாகவே இராணு ரீதியில் உக்ரைன் நேட்டோவின் ஆலோசனைகளைப் பெறப் போகிறது என்பதே உடன்பாட்டின் உள்ளடக்கம்.
எந்த அடிப்படையிலும் அதனை தடுக்க ரஷ்யாவால் முடியாது என்பதையும் பிராந்திய ரீதியில் ரஷ்யாவின் உத்திகள் நெருக்கடிக்குள்ளாகின்றன என்பதையும் கண்டு கொள்ள முடிகிறது.
இந்த உடன்பாடும் நேட்டோவின் 4ஆவது விதியைக் கோடிகாட்டுவதாக உள்ளது. அதாவது நேட்டோ உறுப்புரிமை நாடுகள் மீது வேறு எந்த நாடும் நடவடிக்கை மேற்கொணட்டால் அதற்கு உடனடியாக அனைத்து நேட்டோ நாடுகளும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு 24 மணித்தியாலத்தில் அமெரிக்க ஆலோசனை பெறுவதென்பதாகும். அத்தகைய இருப்பு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் சாதகமானதாக மாற்றக் கூடியது.
மூன்று, இந்த உடன்பாட்டின் எதிர்வினையும் அதிகமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடுகளை இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடத் தவறவில்லை என்றே குறிப்பிட முடியும்.
அதாவது ரஷ்யாவின் நகர்வில் சீனாவின் உதவிகளையும் ஆயுத தளபாட பரிமாற்றங்களையும் பற்றி ஜி-7 நாடுகள் அதிக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
உக்ரைனுடன் இராணுவ உடன்பாட்டை மேற்கொண்டு செயல்படும் ஜி-7, சீனாமீது அதிகமான அதிருப்தியை முன்வைத்தள்ளது.
அதாவது சீனா, ரஷ்யாவுக்கு வழங்கும் இராணுவ உதவிகளை விமர்சனம் செய்ததோடு அதனை சீனா மீதான பொருளாதார நெருக்கடியாக மாற்றவும் உரையாடியுள்ளது.
அதன் போலித்தன்மையும் இயலாமையில் வெளிப்படுத்தும் நகர்வுகளும் இவ்வாறானதாகவே அமைந்துள்ளன.
மகாநாடு முழுவதும் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை அதிகம் விமர்சனம் செய்த ஜி-7 நாடுகள், உலகளாவிய ரீதியில் மேற்கு நாடுகளது வாய்ப்புக்களை ஆக்கிரமிப்பையும் சீனா எவ்வாறு தடுக்கின்றது என்பதை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளன.
எனவே ஜி-7 நாடுகளது நகர்வுகள் அனைத்தம் மேற்குலக நலனுக்கான இராணுவ – அரசியல் நகர்வாகவே தெரிகிறது.
இராணுவ உத்திகளை அரசியல் நகர்வுக்குள்ளாலும் இராணுவ கட்டமைப்புக்குள்ளாலும் மேற்கொள்வதே வளர்ந்த நாடுகளின் செயற்பாடாகும்.
இதில் பார்வையாளர்களாக சேர்ந்துள்ள ஆசிய மற்றும் ஏனைய கண்டத்து நாடுகளும் அத்தகைய நலனை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டு ரஷ்ய-, சீனா- — ஈரான் போன்ற நாடுகளின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை எப்படித் தோற்கடிப்பது என்பதற்கான கூட்டாகவே இயங்குகின்றது.
அதற்கு அந்த நாடுகள் சூட்டிய பெயர் வளர்ந்த நாடுகளின் கூட்டாகும். இதனால் ஏற்படவுள்ள ஒழுங்கே புதிய உலக ஒழுங்குமுறையாகும்.