காஸாவில் சண்டைகளுக்கு ஓய்வு கொடுப்பது பற்றி உலக அரங்கில் அதிகமாக பேசப்படும் பின்புலத்தில், போர் இயந்திரம் வேகமாக இயங்கி இன்னுமின்னும் உயிர்களைப் பலிகொண்டு வருகிறது.

ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலென்ன, ஜி-7 மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் என்ன, நான் என் வேலையை செய்வேன் என்ற முனைப்பில் ஆயுதமோதல் தனது வேலையைக் காட்டிக் கொண்டு வருகிறது.

ஒருபுறத்தில் ஆயுத மோதல் பிஞ்சுக்குழந்தைகளில் எந்தளவு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று விபரிக்கும் அறிக்கைகள். மறுபுறத்தில் சண்டையைத் தொடர்வதற்கு ஆயிரம் சாக்குப் போக்குகளை தேடும் போர் வெறியர்களென இதற்கு விமோசனமே கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

சண்டையை நிறுத்த முயற்சிக்கிறோம் என்ற பிரசாரத்தொனியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு விளம்பரம் தேடும் ஜோ பைடன் போன்றவர்களின் சமாதான பாசாங்குகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இதன்மூலம் உயிர்க்கொலையும் மனிதப் பேரவலமும் எந்தளவு நிறுத்தப்பட்டுள்ளது என்று கேட்டால், அதற்குப் பதிலில்லை.

இத்தகைய பின்புலத்தில் போர் நிறுத்த யோசனை என்ற மற்றொரு பாசாங்கின் உண்மை நிலையை ஆராய வேண்டியிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், புதிய போர் நிறுத்த யோசனையின் அடித்தளம் எனலாம்.

நகல் தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்திருந்தது. இன்னும் சில மாதங்களில் அமெரிக்க தேர்தலில் போட்டியிடப் போகும் ஜோ பைடன் நகல் தீர்மானம் பற்றி அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் இணங்கியதாகவும், ஹமாஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா கூறினால், அதில் வியப்பில்லை அல்லவா?

இதனால் தானோ என்னவோ பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோது, ரஷ்யா வாக்களிப்பைத் தவிர்த்து நின்றது.

இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் எதுவித நிபந்தனையும் இன்றி தாமதிக்காமல் யோசனைகளை அமுலாக்க வேண்டுமென போர் நிறுத்த தீர்மானம் கோருகிறது. பாதுகாப்புச்சபை என்பது மிகவும் செல்வாக்குள்ள அமைப்பு என்பதால், போர் நிறுத்த யோசனையை ஏற்க வேண்டும் என்ற அழுத்தம் இருதரப்பினருக்கும் உண்டு.

ஆனால், இதனை முன்னெடுத்துச் செல்ல இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் இணக்கம் காணுமா என்ற நிச்சயமற்ற நிலையுள்ளது. அமெரிக்கத் தரப்பில் ஏதோ சொல்லப்பட்டாலும் கூட, இரு தரப்புக்களும் தத்தமது கடப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவில்லை.

போர் நிறுத்த யோசனை கோரும் பொதுவான விடயத்தை ஹமாஸ் ஏற்றதென்னவோ உண்மை தான். இருந்தபோதிலும், சில சரத்துக்களில் திருத்தம் அவசியமென ஹமாஸ் கேட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெத்தன்யாஹ_ சில சரத்துக்களை பகிரங்கமாகவே ஆட்சேபித்துள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கைக்காக எட்டாவது தடவையாக மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர்; அன்டணி பிளிங்கன், தமது பேச்சுவார்த்தை முயற்சிகளை கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

இவ்விடயத்தை மாற்ற வேண்டுமென ஹமாஸ் வலியுறுத்தும் சிலதை மாற்றலாம். எனினும், எல்லாவற்ற மாற்ற முடியாது என்பது பிளிங்கனின் நிலைப்பாடாகும். ஹமாஸின் நிலைப்பாடு யாதெனில், போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இருக்கக்கூடாது என்பது தான்.

போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருப்பதையும், இஸ்ரேல் காஸாவில் இருந்து முற்று முழுதாக வெளியேறுவதையும் உறுதிப்படுத்தக்கூடிய திருத்த யோசனைகளை முன்வைப்பதாக ஹமாஸின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் புதியதைக் கேட்கவில்லை. போர் நிறுத்த யோசனையில் உள்ள விடயங்களை இஸ்ரேல் நிராகரிக்கிறதாயின், அமெரிக்கா இஸ்ரேலின் பக்கம் சாய்கிறதென அவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரானதாக இருப்பதில் வியப்பில்லை. ஹமாஸ் முன்வைத்த சில கோரிக்கைகள் எளிமையானவை. அவற்றை ஏற்கலாம். ஆனால், ஏனைய கோரிக்கைகள் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து பெரிதும் விலகிச் செல்கிறது என்று வெள்ளை மாளிகை குற்றம் சுமத்துகிறது.

இங்கு கயிறு இழுப்பாக அமைந்துள்ள விடயம் மோதல்களை நிறுத்துவது என்ற பிரதான பிரச்சினை தான். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலியர்கள் சிலரை பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கிறது.

பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமாயின், நிரந்தரப் போர் நிறுத்தம் அமுலாக்கப்பட்டு இஸ்ரேலியப் படைகள் காஸாவில் இருந்து வெளியேற வேண்டுமென ஹமாஸ் நிபந்தனை விதிக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி சமர்ப்பித்தபோர் நிறுத்த யோசனையில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஆனால், இஸ்ரேலியப் பிரதமரோ ஹமாஸ் இயக்கத்தின் படைபல ஆற்றல்களை இல்லாதொழித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். ஆற்றல்களை, களையும் பட்சத்தில் மாத்திரமே எதிர்காலத்தில் ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்த மாட்டாதென பெஞ்சமின் நெத்தன்யாஹ_ கருதுகிறார்.

போருக்குப் பின்னர், காஸாவை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி நகல் திட்டம் போர் நிறுத்த யோசனையில் உண்டு. அதை இஸ்ரேல் ஏற்க மறுக்கிறது.

அது தவிர, பலஸ்தீனத்தை ஒரு இராஜ்ஜியமாக அங்கீகரிப்பதற்குரிய படிமுறைகள் பற்றி அமெரிக்கா முன்மொழிந்த யோசனையையும் இஸ்ரேல் நிராகரிக்கிறது. இந்த மறுப்பும், நிராகரிப்பும் சேர்ந்து நிலைமையை சிக்கலாக்கி இருக்கின்றன.

உத்தேச போர் நிறுத்த திட்டத்தின் பிரகாரம், முதற்கட்டமாக ஆறு வாரகால சண்டை நிறுத்தப்பட வேண்டும். இந்தக் காலப்பகுதியில் பெண்கள், காயமடைந்தவர்கள் அடங்கலாக பணயக்கைதிகள் சிலரை ஹமாஸ் இயக்கம் விடுதலை செய்ய வேண்டும்.

இதற்குப் பதிலாக சனநெருக்கடி மிகுந்த பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட்டு, இடம்பெயர்ந்த பலஸ்தீன சிவிலியன்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வழிவகுக்கப்படுதல் அவசியம்.

போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்டமானது, சகல பணயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு, இஸ்ரேலியப் படைகள் முற்றுமுழுதாக வாபஸ் பெறுவதை இலக்காகக் கொண்டதாகும்.

இது சவாலாக இருப்பதற்குக் காரணம், இஸ்ரேலியப் படைகள் மீது ஹமாஸ் கொண்டுள்ள சந்தேகம் தான். அதாவது, ஹமாஸ் இயக்கத்திற்கு பேரம் பேசும் சக்தியை வழங்கியிருப்பது இஸ்ரேலிய பணயக்கைதிகளை தடுத்து வைத்திருப்பது தான்.

பணயக்கைதிகள் சகலரையும் விடுதலை செய்து விட்டால், இஸ்ரேல் பழையபடி சண்டையை ஆரம்பித்து விடலாம். அப்படிச் செய்ய மாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் கிடையாதென ஹமாஸ் சந்தேகிக்கிறது.

மறுபுறத்தில், காஸா மண்ணில் ஹமாஸ் இயக்கம் அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கு இடமளிக்க முடியாதென இஸ்ரேலிய தூதுவர் ஐக்கிய நாடுகள் சபையில் பகிரங்கமாகவே பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் நிலவும் அவநம்பிக்கை ஆழ வேரூன்றியதொன்றாகும். இவ்விரு தரப்புக்களும் ஐந்து நேரடி யுத்தங்களில் பங்கேற்றுள்ளன. பரஸ்பரம் ஒன்றையொன்று இல்லாதொழிப்பதற்கு உறுதிபூண்டுள்ளன.

இத்தகைய பின்புலத்தில் போர் நிறுத்தத்தை நோக்கி நகர்வது மிகவும் கஷ்டமான காரியம் என்பதை விபரிக்க வேறு விளக்கங்கள் அவசியமில்லை.

ஆனால், இஸ்ரேலிய மக்கள் பெஞ்சமின் நெத்தன்யாஹ_ மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். போர் நிறுத்தம் என்ற சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தி பணயக் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மறுபுறத்தில், கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும் நெத்தன்யாஹ_விற்கு தலையிடி உள்ளது. காஸாவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்து அங்கிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றி யூதக் குடியிருப்புக்களை அமைக்குமாறு தீவிர வலதுசாரி தேசியவாத கட்சிகள் கோருகின்றன. இவற்றை நெத்தன்யாஹ_ நிராகரித்தால், ஆளும் கூட்டணியின் ஆயுள் முடிந்து போகும் சாத்தியமும் உண்டு.

எத்தகைய சவால்கள் இருந்தாலும், இரு தரப்புக்களும் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை கைவிட்டு விட முடியாது. அவை பேசிக் கொண்டு இருக்கத் தான் போகின்றன. பேசாவிட்டால் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக் கைதிகள் விஷயத்தில் பதில் சொல்ல முடியாத நிலை இஸ்ரேலுக்கு ஏற்படலாம்.

அதேபோன்று, பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டால் காஸா மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமாகி மனிதப் பேரவலம் தீவிரமாவதை ஹமாஸ் இயக்கம் தடுக்க முடியாமல் போகலாம். அப்போது, சர்வதேச சமூகம் ஹமாஸின் மீது பழிபோடலாம். பேச்சுவார்த்தை முறிதல் மாத்திரமன்றி, அது முடிவு காணாமல் நீடித்துக் கொண்டே போவதும் கூட அமெரிக்காவிற்கும் தோல்வியாக அமையும்.

இதுவொரு திரிசங்கு நிலையெனில், நிலைத்திருக்கக்கூடிய போர் நிறுத்தம் எப்போது சாத்தியம் என்று இலவு காத்த கிளி போல காத்திருப்பது தான் சர்வதேச சமூகத்தின் தலைவிதியாக இருக்கப் போகிறது.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

Share.
Leave A Reply

Exit mobile version