உடல் வியர்த்து மூச்சுத் திண­ற­வைக்கும் காற்­றோட்ட வச­தி­யில்­லாத, காலை நீட்டிப் படுப்­ப­தற்கு கூட போதிய இட­மில்­லாத, தொண்டை கிழியக் கூச்­ச­லிட்டும் எவரும் பதில் குரல் கொடுக்­காத தனி­மை­யான சிறிய அறை­யொன்றில் ஒரு சில மணித்தியாலங்களைக் கழிப்­பது பற்றி கற்­பனை செய்து பார்த்­தா­லே பல­ருக்கும் விழிகள் பிதுங்கும்.

ஆனால் தென் ஆபி­ரிக்­காவின் கேப் நகரின் வடக்கே 11 கிலோ­ மீற்றர் தொலைவில் 5.18 சதுர கிலோ­மீற்றர் மட்­டுமே பரப்­ப­ளவைக் கொண்ட தனி­மை­யான ரொப்பன் தீவில் மேற்­படி சூழ்நி­லையை அச்­சொட்­டாக பிரதி­ப­லிக்கும் சிறைக்­கூ­ட­மொன்றில் ஒரு சில நாட்கள் அல்­லது மாதங்­க­ளை­யல்­லாது

18 வரு­டங்­களை கழித்து உயி­ருடன் மீண்டு தனக்­கே­ உ­ரிய துடிப்பும் தைரி­யமும் கம்­பீ­ரமும் குறை­யாது அதே ஆத்­ம சக்­தி­யுடன் உல­கையே வியப்பில் விழி உயர்த்த வைத்த ஒரு­வ­ராக மறைந்த தென் ஆபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா விளங்­கு­கிறார்.

இலங்­கையின் யாழ்ப்­பாண தீப­கற்­பத்­துடன் ஒப்­பி­டு­கையில், சுமார் நான்­கி­ல் ஒரு மடங்கு சிறி­தா­னதும் நயி­னா­தீ­வுடன் ஒப்­பி­டு­கையில், 1.18 சதுர கிலோ­மீற்றர் மட்­டுமே பெரி­தா­ன­து­

மான ரொப்பன் தீவில் 2 மீற்றர் நீளமும் 2 மீற்றர் அக­லமும் உடைய அறையில் சமச்­சீ­ரற்ற கரடு­மு­ர­டான தரையில் மெல்­லிய பாயொன்­றில் பகலில் வியர்த்துக் கொட்டும் கடும் வெப்பத்­தையும் இரவில் விறைக்க வைக்கும் குளி­ரையும் தாங்கி உறங்­கவும் முடி­யாமல் புரண்டு படுக்­கவும் முடி­யாமல் இர­வு­களைக் கழித்து உயிரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே கார­ணத்­துக்­காக தொண்டைக் குழிக்குள் இறங்க மறுக்கும் எது­வித சுவை­யு­மற்ற,

ஆரோக்­கி­ய­மில்­லாத உணவை மென்று விழுங்கி, கல் அகழ்வுத் தளங்­களில் தகிக்கும் வெயிலில் சுத்­தி­யலால் பாறை­களைத் தகர்த்து கடூழிய பணி செய்து தனது 27 வருட சிறைவாசத்தில் 18 வரு­டங்­களை கழித்த தென் ஆபி­ரிக்­காவின் இரும்பு மனி­த­னாக விமர்­சிக்கப்­படும் நெல்சன் மண்­டே­லாவின் நெஞ்­சு­ரத்­துக்கும் மன தைரி­யத்­துக்கும் ஈடு இணை­யாக எவ­ரையும் எதனையும் ஒப்­பிட முடி­யாது.

கைதி­களின் ஆக்­ரோ­ஷத்தை ஒட்டுமொத்­த­மாக அடக்கிக் கொல்­லும் தனி­மையில் சர்­வமும் ஒடுங்­கச்­செய்து, அவர்­களை தமது வழிக்கு கொண்டுவரும் வெள்­ளை­யின ஆதிக்­க­வா­தி­களின் தந்­தி­ரோ­பா­யங்கள் நெல்சன் மண்­டே­லாவைப் பொறுத்­த­வரை பிசு­பி­சுத்துப்போனதே யதார்த்­த­மா­னது.

1810ஆம் ஆண்­ட­ளவில் கேப் மாகா­ணத்தின் பகு­தி­யாக முன்­பி­ருந்த தெம்பு இராஜ்­ஜி­யத்தின் மன்­ன­ராக விளங்­கிய நகு­பென்­கு­காவின் வம்ச வாரி­சு­களில் ஒரு­வ­ராக 1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி கிழக்கு கேப் பிராந்­தி­யத்­தி­லுள்ள மவெஸோ கிரா­மத்தில் பிறந்த நெல்சன் மண்­டே­லாவின் இயற்­பெயர் ரோலிஹ்லாஹ்லா மண்­டேலா என்­ப­தாகும்.

நெல்சன் மண்­டே­லாவின் தந்தை கட்லா ஹென்றி மப­க­னி­யிஸ்வா மண்­டேலா. இவர் பிராந்­திய தலைவராகவும் மன்­னரின் ஆலோ­ச­க­ராகவும் பணி­யாற்­றிய ஒருவர் என்­பது குறிப்­பிடத்தக்­கது. கட்­லாவின் நான்கு மனை­வி­யரில் மூன்­றா­வது மனை­வி­யான நோஸ்­கெ­னி பான்­னியே நெல்சன் மண்­டே­லாவின் தாயார் ஆவார்.

பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்சிக் காலத்தில் தென் ஆபி­ரிக்க பாட­சா­லை­களில் கல்வி கற்கும் சிறு­வர்­க­ளுக்கு கிறிஸ்­தவ பெயர் வைக்­கப்­படும் நடை­முறை பின்­பற்­றப்­பட்­டதால் ரோலிஹ்லாஹ்லா மண்­டே­லாவின் ஆசி­ரி­யைகளில் ஒரு­வ­ரான மிடின்­கனி அவ­ரது பெய­ருடன் நெல்சன் என்ற பெயரை இணைத்து அவரை நெல்சன் மண்­டே­லா­வாக்­கினார்.

போர்ட் ஹேர் பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரியில் கலை இள­மாணிப் பட்­டப்­ப­டிப்பை தொடர்ந்த நெல்சன் மண்­டேலா பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான மாணவர் போராட்­டங்­களில் கலந்துகொண்­ட­மைக்­காக பல்கலைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­டமை கார­ண­மாக பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்­ய­ மு­டி­யாத நிலை ஏற்­பட்­டது.

எனினும் அவர் 1941ஆம் ஆண்டில் ஜொஹன்­னஸ்பேர்க் நக­ரி­லுள்ள தென் ஆபி­ரிக்க பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலை இள­மாணிப் பட்­டத்தை பூர்த்தி செய்து பட்டம் பெற்றார்.

பின்னர் அவர்­ அந்­ந­க­ரி­லுள்ள விட்­வோட்­டர்ஸ்ரன்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்டக் கல்­வியை ஆரம்­பித்தபோதும் அதனைக் கைவிட நேர்ந்­தது. அவர் பின்னர் லண்டன் பல்­கலைக்­க­ழ­கத்தில் சட்டக் கல்­வியை தொடர முயற்­சித்தபோதும் அதுவும் தோல்­வியில் முடி­வ­டைந்­தது.

தென் ஆபி­ரிக்க பிர­ஜைகள் தமது சொந்த நாட்­டுக்­குள்ளே அடி­மை­க­ளாக நடத்­தப்­பட்டு நாட்­டுக்குள் ஓரி­டத்­தி­லி­ருந்து இன்­னோர்

இடத்­துக்கு பய­ணிக்க கட­வுச்­சீட்டு பெற வேண்­டிய கட்­டா­யத்­துக்குள் தள்­ளப்­பட்டு அடிப்­படை உரி­மைகள் மறுக்­கப்­பட்டு சொல்லொண்ணா துன்­பங்­களை அனு­ப­வித்து வரும் நிலை­யா­னது நெல்சன் மண்­டே­லாவின் சிறு வயது முதல் அவ­ரது மனதை பாதித்த ஒன்­றாக இருந்துவந்­தது.

இந்­நி­லையில் அர­சி­யலில் ஈடு­பாடு காட்­டிய அவர் 1944ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியில் இணைந்து அந்தக் கட்­சியின் இளை­ஞர்­க­ளுக்­கான பிரிவை ஸ்தாபிக்க உத­வினார்.

அவர் இள­மாணிப் பட்டம் பெற்­றமை மற்றும் சட்டக் கல்­வியில் இரண்டு ஆண்­டு­களை பூர்த்தி செய்­தமை ஆகிய தகு­தி­களின் அடிப்­ப­டையில் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது நண்­ப­ரான ஒலிவர் தம்­போ­வுடன் இணைந்து மண்­டேலா அன்ட் தம்போ சட்ட நிறு­வ­னத்தை ஆரம்­பித்தார்.

இந்த நிறு­வ­ன­மா­னது தென் ஆபி­ரிக்­காவின் கறுப்­பி­னத்­த­வரால் செயற்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது சட்ட நிறு­வனம் என்ற பெரு­மையைப் பெற்­றது. எனினும், அவ­ரது சட்ட நிறு­வ­னத்­துக்கு 1952ஆம் ஆண்டில் தடை விதிக்­கப்­பட்­டது. இது கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான நெல்சன் மண்­டே­லாவின் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

1956ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி பொலி­ஸாரால் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின்போது நெல்சன் மண்­டேலா கைது­செய்­யப்­பட்டார். இதுவே பின்னர் அவர் 1956ஆம் ஆண்டு தேசத் துரோக குற்­றச்­சாட்டு விசா­ர­ணைக்கு உள்­ளாக வழி­வ­குத்­தது.

1960ஆம் மார்ச் 21ஆம் திகதி புதி­தாக நிறை­வேற்­றப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு எதி­ராக ஷாப்­பர்­வில்லே பிராந்­தி­யத்தில் நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தின்போது பொலி­ஸாரால் நிரா­யு­த­பா­ணி­க­ளான 69 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை அமைதிவழிப் போராட்டம் குறித்து அவ­நம்­பிக்­கையை நெல்சன் மண்­டே­லா­வுக்கு தோற்­று­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் வெள்ளையின ஆட்­சி­யா­ளர்கள் நாட­ளா­விய ரீதியில் அவ­ச­ர­கா­ல ­நி­லை­மையை பிர­க­ட­னப்­ப­டுத்தி ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ர­ஸுக்கு தடை விதித்­தனர்.

இத­னைய­டுத்து மண்­டே­லாவும் அவ­ரது சகாக்­களும் தேசத்­து­ரோக குற்­றச்­சாட்டு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். மேற்­படி விசா­ரணை முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­னரே நெல்சன் மண்­டேலா நாட­ளா­விய ரீதியில் வெள்ளையின ஆதிக்­கத்­துக்கு எதி­ராக பிரசாரங்­களை முன்­னெ­டுத்­த­துடன் 3 நாட்கள் பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

தொடர்ந்து 1961ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆயுதப் போராட்­ட­மொன்றை முன்­னெ­டுக்க தனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுத்த நெல்சன் மண்­டேலா, 1961ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி ‘தேசத்தின் ஈட்டி’ என அழைக்­கப்­படும் போராட்டக் குழுவை ஸ்தாபித்தார்.

இந்­நி­லையில், அவர் தென் ஆபி­ரிக்­காவை விட்டு இர­க­சி­ய­மாக வெளியேறி இங்­கி­லாந்தில் ஆத­ரவைத் தேடு­வ­தற்கு முயற்­சித்­த­துடன் மொரோக்கோ மற்றும் எதி­யோப்­பி­யாவில் இரா­ணுவப் பயிற்சி பெற்றார்.

தொடர்ந்து அவர் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நாடு திரும்­பிய நிலையில் அதற்கடுத்த மாதம் கைது­செய்­யப்­பட்டார்.

இதுவே அவர் பின்­தங்­கிய ரொப்பன் தீவில் சிறை­வா­சத்தை அனு­ப­விப்­ப­தற்கு கார­ண­மா­னது. ஆரம்­பத்தில் 5 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு ரொப்பன் தீவு சிறைச்­சா­லைக்கு அனு­பப்­பட்ட அவர் 6 மாத காலம் மட்டும் அங்கு தடுத்துவைக்­கப்பட்ட நிலையில் பின்னர் தென் ஆபி­ரிக்­காவின் பிரெ­டோ­ரியா சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.

தொடர்ந்து 1964ஆம் ஆண்டு ஜூன் மாதம் மண்­டே­லா­வுக்கும் அவ­ரது சகாக்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்­ட­னை விதிக்­கப்­பட்டு ரொப்பன் தீவு சிறைச்சாலைக்கு அனுப்­பப்பட்­டனர்.

மேற்­படி சிறைச்­சா­லையில் இடம்­பெற்று வந்த உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு எதிர்ப்­பு தெ­ரி­வித்து 1966ஆம் ஆண்டு கைதிகள் உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

ரொப்பன் தீவு சிறைச்­சா­லை­யி­லான சுகா­தா­ர­மற்ற நிலை­மைகள் நெல்சன் மண்­டே­லா­வுக்கு காசநோயை ஏற்­ப­டுத்தி அவ­ரது உடல் நிலையை மோச­மாக பாதித்­தது.

அவ­ரது உடல் நலப் பாதிப்பு கார­ண­மாக அவர் 1982ஆம் ஆண்டு மார்ச் மாத இறு­தியில் ரொப்பன் தீவு சிறைச்­சா­லை­யி­லி­ருந்து போல்ஸ்மூர் சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்டார். இதன்­போது அவர் மருத்­து­வ­ம­னையில் பல நாட்கள் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற நேர்ந்­தது.

ரொப்பன் தீவு அனு­பவம் குறித்து 1994ஆம் ஆண்டில் நெல்சன் மண்­டேலா குறிப்­பி­டு­கையில், “மருத்­துவர் ஒரு­வரால் குணப்­ப­டுத்தக் கூடிய வெளிப்­ப­டை­யாகத் தெரியும் காயங்­களை விடவும் பார்க்க முடி­யாத ஊமைக் காயங்கள் மிகவும் வேத­னை­மிக்­கவை.

எனது தாயாரின் மர­ணமே எனது வாழ்வில் நான் சிறைச்­சா­லையில் அனு­ப­வித்த மிகவும் துன்­ப­மான தரு­ணங்­களில் ஒன்­றா­கும். அத்­துடன் எனது மூத்த மகன் கார் விபத்தில் இறந்த சம்­ப­வ­மும் அவ்­வா­றா­ன­தாகும். எனக்கு அந்த மர­ணச்­ச­டங்­கு­களில் பங்­கேற்க கூட அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை” என தெரி­வித்தார்.

Nelson Mandela, in the early 1960s, before he was sentenced in 1964 to life in prison for sabotage.

நெல்சன் மண்­டேலா ரொப்பன் சிறைச்­சா­லைக்கு ஆயுள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு அனு­ப்பப்­பட்டபோது அவ­ரது வாழ்வு அங்­கேயே முடியப்போகி­றது என்றே அவ­ரது நண்­பர்கள் உட்­பட பலரும் எதிர்­வு­கூ­றி­யி­ருந்­தனர்.

ஆனால், நெல்சன் மண்­டேலா தனது சிறை வாழ்க்­கையை தன்னை மேலும் பண்­ப­டுத்திக்கொள்ள பயன்­ப­டுத்திக்கொண்டார்.

அவர் சிறை சூழ்­நி­லையால் ஏற்படும் மன அழுத்­தத்தைத் தவிர்க்க உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­வதில் ஈடு­பட்டார். நல்­லி­ணக்கம் மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் அவர் கொண்­டி­ருந்த நம்­பிக்கை வெற்­றி­ய­ளித்­தது என்றே கூற வேண்டும்.

வெள்ளையின ஆட்­சி­யா­ளர்கள் 1990ஆம் ஆண்டு பெப்­ர­வரி 11ஆம் திகதி அவரை விடு­தலை செய்­த­துடன், அவ­ரது கட்­சிக்கு விதிக்­கப்­பட்டி­ருந்த தடை­யையும் நீக்­கினர். 1991ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வராக அவர் தெரிவு செய்யப்­பட்டார்.

தனது நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­துக்­கா­கவும் எதிர்­கால சுபீட்­சத்­துக்­கா­கவும் தனது வாழ்வை அர்ப்­ப­ணித்து போரா­டிய அவ­ர்,

1993ஆம் ஆண்டு சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு வழங்கி கௌர­விக்­கப்­பட்­ட­துடன் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி வாழ்க்­கையில் முதல் தட­வை­யாக தனது வாக்­க­ளிக்கும் உரி­மையை பயன்­ப­டுத்­தும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து 1994ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி தென்­ ஆ­பி­ரிக்­காவின் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக பதவி­யேற்று வர­லாறு படைத்தார்.

நெல்சன் மண்­டே­லாவின் வாழ்­நாளின் கணி­ச­மான பகு­தியை கப­ளீ­கரம் செய்த ரொப்பன் தீவு சிறைச்சாலை­யையொத்த மோச­மான சிறைச்­சா­லைகள் கார­ண­மாக உல­க­மெங்கும் கைதிகள் பல்­வேறு இன்­னல்­க­ளை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

இலங்­கையைப் பொறுத்­த­வரையில், மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்டு வெளியி­டப்­பட்ட சிறைச்­சா­லைகள் தொடர்­பான அறிக்­கை­யா­னது கைதிகள் பலர் வறுமை கார­ண­மாக சட்ட உத­வியைப் பெற முடி­யாது, தமது தரப்பு நியா­யத்­துக்­காகப் போராட முடி­யாத நிலையில் உள்­ள­தா­கவும் அவர்­கள் சிறையில் தாக்­கப்­ப­டு­வதும் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளா­வது தொடர்­வ­தா­கவும் கைதிகள் தமது வசிப்­பி­டத்­துக்கு தூர இடத்­தி­லுள்ள சிறைச்­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வதால் உற­வி­னர்­க­ளு­ட­னான தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்டு கடும் மன அழுத்­தத்­துக்­குள்­ளாக நேரி­டு­வ­தா­கவும் கூறு­கி­றது.

அத்­துடன் பல சிறைக்­கூ­டங்­களில் போதிய காற்­றோட்டம் இல்­லா­துள்­ள­துடன் திறந்த மல­ச­ல­கூ­டங்­களால் கைதிகள் அசௌ­க­ரி­யத்­துக்­கு உள்­ளாவ­தா­கவும் குறிப்­பாக மல­ச­ல­கூட வச­தி­ இல்­லாத சிறைக்­கூ­டங்­க­ளி­லுள்ள கைதிகள் இரவு நேரங்­களில் பிளாஸ்டிக் வாளி­க­ளிலும் பொலித்தீன் பைக­ளிலும் இயற்கைக் கடன்களைக் கழிக்க நேரி­டு­வ­தாகவும் அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும் சிறைச்­சா­லைக்கு புதி­தாக வரும் கைதிகள் இட நெருக்­கடி கார­ண­மாக இரவு முழு­வதும் படுக்க முடி­யாமல் விழித்திருக்க வேண்­டிய நிலை உள்­ள­துடன் கைதி­க­ளுக்கு மல­ச­ல­கூ­டத்­துக்கு அருகில் அல்­லது மல­ச­ல­கூ­டத்தில் உறங்கவேண்­டிய நிர்ப்­பந்­தமும் ஏற்­ப­டு­வ­தாக அந்த அறிக்கை தெரி­விக்­கி­றது.

அத்­துடன் பல தசாப்த கால­த்­துக்கு முன்னர் நிர்­மா­ணிக்­க­ப்பட்ட சிறைக்­கூ­டங்­களின் சுவர்கள் மற்றும் கூரைகள் என்­பன இயற்கை அனர்த்­தங்­க­ளுக்கு தாக்குப் பிடிக்­காது இடிந்து விழும் அபாய நிலையில் உள்­ள­தா­கவும் கைதி­க­ளுக்­கான உணவு மற்றும் மருத்­துவ வசதி என்­ப­வற்­றிலும் குறை­பா­டுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது சிறைச்­சா­லை­க­ளி­ல் காணப்படும் மிக மோச­மான நிலை­மைகள் கார­ண­மாக நெல்சன் மண்­டேலா அனு­ப­வித்த துன்­பங்­களை கருத்திற்கொண்டு 2015ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ‘நெல்சன் மண்­டேலா விதிகள்’ என்ற தலைப்பில் கைதி­களை எவ்­வாறு கையாள்­வது என்­பது தொடர்­பான நிய­மத்­த­ரா­த­ரங்­களை உள்­ள­டக்­கிய 70/175 தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது.

நெல்சன் மண்­டேலா விதி­க­ளா­னது கைதிகள் அனை­வரும் மனிதர்கள் என்ற வகையில் அவர்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த கண்ணியம், மனித விழுமியங்களுக்கு மதிப்பளிக்கவும் அவர்களுக்கு மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் கிடைக்கவும் தடுப்புக் காவலில் இடம்பெறும் அனைத்து மரணங்கள் சித்திர வதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும் பாதிக்கப்படக்கூடிய நிலைமையிலுள்ள மற்றும் விசேட தேவையுள்ள கைதிகளை பாதுகாக்கவும், அவர்களது முறைப்பாடுகளை செவிமடுத்து நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு போதுமான காற்றோட்டம், ஒளி, கழிப்பிட வசதி, சுகாதார கவனிப்புகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுக்கவும் வலியுறுத்துகிறது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை நெல்சன் மண்டேலாவை கௌரவப்படுத்தும் வகையில் நெல்சன் மண்டேலா தினத்தை வருடந்தோறும் ஜூலை 18ஆம் திகதி அனுஷ்டிப்பதற்கான பிரகடனத்தைச் செய்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள இந்த வருடத்துக்கான நெல்சன் மண்டேலா தினத்தின் தொனிப் பொருள் ‘வறுமைக்கும் சமத்துவமின்மைக்குமான போராட்டம் எமது கைகளிலேயே உள்ளது’ என்பதாகும்.

ஒருவர் தான் எத்தகைய மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் அதனையும் விஞ்சி வெற்றியை நோக்கி அர்ப்பணிப்புடன் முயற்சித்தால் முடியாதது என்பது எதுவுமே இல்லை என்பதே நெல்சன் மண்டேலாவின் தாரக மந்திரமாகும்.

இது அனைவருக்கும் பொருந்தும் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்பதில் சந்கேமில்லை.

(ஆர். ஹஸ்தனி)
-வீரகேசரி-

Share.
Leave A Reply

Exit mobile version