முதலில் இளவரசரின் மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இல்லை. ஆனால் தானும் வருவேன் என்று அவர் அடம் பிடிக்க (விதி), இருவருமே ஜோடியாகக் கிளம்பினார்கள்.

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஆஸ்திரிய இளவரசரின் தேனிலவுப் பயணம் தொடங்கி வைத்த அரசியல் ஆட்டங்கள்!

 

ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டைத் தீர்த்துக் கட்ட கறுப்புக் கை இயக்கம் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தது அல்லவா? இந்த மூன்றுபேரும் சரயேவு நகரிலுள்ள (போஸ்னியாவின் தலைநகர் இது) வேறு ஐந்து பேரையும் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஜூன் 28, 1914 அன்று காலை பத்து மணியாவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அப்போது சரயேவு நகருக்கு ரயிலில் வந்து சேர்ந்தார்கள் இளவரசரும் அவர் மனைவியும்.

அவர்களை வரவேற்கச் சென்றிருந்தார் போஸ்னியாவுக்கான ஆஸ்திரிய கவர்னர். நகரின் முக்கிய அரங்கிற்கு அவர்களை அழைத்துக்கொண்டுபோய் பிரமாண்டமான ஒரு வரவேற்பை அளிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் அவர்.
.
ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும் அவரின் மனைவி சோபியும் காரில் ஏறும் காட்சி…

மூன்று கார்கள் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பின. முதல் காரில் நகர மேயரும் போலீஸ் கமிஷ்னரும் இருந்தனர்.

இரண்டாவது காரில் இளவரசரும் அவர் மனைவியும். கூடவே கவர்னரும். இரண்டாவது காரின் மேற்புறம் திறந்துவிடப்பட்டிருந்தது.

அப்போதுதானே தெருவின் இரண்டு பக்கங்களிலும் நிற்கும் மக்களால் இளவரசரையும் அவர் மனைவியையும் நன்றாகப் பார்க்க முடியும்? சற்றுத் தள்ளி இன்னொரு காரும் வந்துகொண்டிருந்தது. அதில் இளவரசரின் கட்சியைச் சேர்ந்த இரண்டுபேர் வந்து கொண்டிருந்தனர்.

காவல் துறை எச்சரிக்கையாகத்தான் இருந்தது. கலவரம் செய்யக்கூடும் என நினைத்த 35 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்திருந்தார்கள்.

வழியெங்கும் காவல்காரர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். இந்த வரிசையில்தான் கொலை செய்யக் காத்திருந்தவர்களும் எப்படியோ இடம்பிடித்துவிட்டார்கள்.

காலை 10:15 மணி இருக்கும். முன்னும் பின்னுமாக இரண்டு கார்கள் வர, நடுவிலிருந்த காரில் வந்துகொண்டிருந்தனர் இளவரசரும் அவர் மனைவியும். சாலையின் இருபுறமும் காவலர்கள் நிற்க, இளவரசரைக் கொல்லும் திட்டத்தின்படி செயல்படக் கொலைகாரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.

இளவரசரின் கார் தன்னைக் கடக்கையில் அவரைக் கொல்வதற்காகத் துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்தான் அவர்களில் ஒருவன்.

ஆனால் அப்போதுதான் தனக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரர் இருப்பதைக் கவனித்தான். “அடடா, நான் வெடிகுண்டைத் தூக்கி எறிந்தபிறகு, சயனைடு குப்பியை எடுப்பதற்குள் இந்த போலீஸ்காரர் என்னைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது? ரிஸ்க் வேண்டாம். அடுத்த கூட்டாளி பார்த்துக்கொள்வான்” என்று சும்மா இருந்துவிட்டான்.


ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும் அவரின் மனைவி சோபியும்…

கார் மேலும் நகர்ந்தது. இரண்டாவது கூட்டாளி தன் கையிலிருந்த வெடிகுண்டை இளவரசர் இருந்த காரை நோக்கி வீசினான்.

கார் டிரைவர் திறமைசாலி. தவிர எந்த நேரமும் அந்த இடத்தில் இளவரசர் உயிருக்கு அபாயம் நேரலாம் என்பதும் அவருக்குத் தெரியும்.

எனவே ஏதோ ஒரு பொருள் தங்கள் காரை நோக்கி வருகிறது என்பதை உணர்ந்தவுடனேயே காரை மிகவேகமாகச் செலுத்தினார்.

அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு காரின்மீது வெடிகுண்டு விழுந்தது. அதில் இளவரசருக்கு வேண்டியவர்களான எரிக் வோன் மெரிசி என்பவரும் லுட்விக் ஜோசப் என்பவரும் பலத்த காயமடைந்தனர்.

அதுமட்டுமா? வேடிக்கை பார்க்க வந்திருந்த பன்னிரண்டு பேர்மீதும் வெடித்த வெடிகுண்டின் பாகங்கள் விசையுடன் விழுந்தன.

வெடிகுண்டை வீசியவன் தன்னிடமிருந்த சயனைடைக் குடித்துவிட்டு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த மில்ஜக்கா நதியில் குதித்துவிட்டான்.

ஆனால் பாய்ந்து சென்ற சிலர் அவனைப்பிடித்து விட்டார்கள். அவன் குடித்த விஷம் வேலை செய்வதற்குள் அதில் ஒரு பகுதியை வெளியே எடுத்துவிட்டார்கள். பக்கத்திலிருந்த காவல் நிலையத்தில் அவன் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டான்.

இளவரசரின் காரை ஓட்டிய டிரைவர் கண்மண் தெரியாத வேகத்தில் காரில் பறந்தார். போகும் பாதை முழுவதும் இளவரசர் வருகைக்காக காலியாக இருந்ததால் இந்த வேகம் சாத்தியமானது.

இவ்வளவு வேகமாக கார் செல்லும் போது வெடிகுண்டை வீசுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ பலனைத் தராது என்று முடிவெடுத்த மூன்றாமவன் சும்மா இருந்துவிட்டான்.

ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும் அவரின் மனைவி சோபியும் காரில் பயணிக்கும்போது தாக்கும் கறுப்புக் கை இயக்கத்தினர்

நகர அரங்கில் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தபடி இளவரசருக்கும் அவர் மனைவிக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

“எனக்குப் பின்னால் வந்த காரில் என் கட்சிக்காரர்கள் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்களே. அவர்கள் இப்போது எங்கே?” என்று கேட்டார் இளவரசர். வெடிகுண்டினால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லையென்றும் அதிர்ச்சி நீங்கியவுடன் அவர்களும் வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என்றும் இளவரசருக்குக் கூறப்பட்டிருந்தது.

இப்போது தயக்கத்துடன், ‘அந்த இருவரும் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று உண்மையைச் சொன்னார்கள். “அப்படியா? நான் உடனே மருத்துவமனைக்குப் போக வேண்டும். அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும்” என்றார் இளவரசர்.

நிறையப் பேருக்கு இதில் அதிர்ச்சி. வேண்டாமே என்று தடுத்துப்பார்த்தார்கள். ஆனால் கவர்னருக்கு இது கௌரவப் பிரச்னையாகிவிட்டது. “சரயேவு நகரம் முழுவதும் கொலைகாரர்கள் இருப்பதாக நீங்களாக ஏன் கற்பனை செய்துகொள்கிறீர்கள்?” என்று அவர்களைக் கேட்டார்.

முதலில் இளவரசரின் மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இல்லை. ஆனால் தானும் வருவேன் என்று அவர் அடம் பிடிக்க (விதி), இருவருமே ஜோடியாகக் கிளம்பினார்கள்.

கவர்னர் நன்றாகத்தான் திட்டமிட்டார். “நகரத்தின் நெரிசல் மிக்க சாலைகளையே தொடாமல், கொஞ்சம் சுற்றுவழியாக இருந்தாலும் வேறொரு வழியின் மூலமாகத்தான் கார் மருத்துவமனைக்குப் போகவேண்டும்”. ஆனால் ஏதோ குழப்பத்தில் தன்னுடைய இந்தத் திட்டத்தை கார் ஓட்டுநரிடம் கூறுவதற்கு மறந்து தொலைத்து விட்டார்.


ஆஸ்திரிய இளவரசரைச் சுட்ட கவ்ரிலோ பிரின்ஸிப் | Gavrilo Princip

அரங்கிலிருந்து கிளம்பிய கார், நகரத்தின் மையப்பகுதிக்குச் செல்லும் சாலையில் திரும்பியது. அப்போதுதான் இதைக் கவனித்த கவர்னர் “என்ன இது? இப்படிப் போகக்கூடாது. அப்பெல் குவே என்ற சாலையின் வழியாகத்தான் போக வேண்டும்” என்று கத்தினார்.

கார் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தினார். பிறகு மெல்ல மெல்ல காரை ரிவர்ஸில் எடுக்கத் தொடங்கினார்.

அங்கே அருகில் காத்துக்கொண்டிருந்தான் கவ்ரிலோ பிரின்ஸிப் – கறுப்புக் கையின் கூட்டுச்சதியில் ஈடுபட்டவன்.

19 வயது இளைஞன். முன்பக்கமாக நகர்ந்து துப்பாக்கியை எடுத்தான். காரிலிருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் நின்று கொண்டு பலமுறை சுட்டுத்தள்ளினான்.

போர் மூளும்…

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஆஸ்திரிய இளவரசரின் தேனிலவுப் பயணம் தொடங்கி வைத்த அரசியல் ஆட்டங்கள்!

 

ஆஸ்திரியா – ஹங்கேரி வரைபடம்

Share.
Leave A Reply

Exit mobile version