ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்து விடுவார் என்று எதிர் கட்சிகளிடையே சந்தேகங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு சந்தேகங்களை கலைத்து தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினத்தை அறிவிக்கும் முழுமையான அதிகாரம் தற்போது ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதுடன், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு திகதி என்பவற்றை இம்மாதம் இறுதிக்குள் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தேர்தல் ஓட்டப்பந்தயத்தில் ஜனாதிபதியுடன் இரு வேட்பாளர்கள் வெறுமனே ஒடுவதாகவே தனக்கு தோன்றுகின்றது என்று சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் சாடைமொழியில் பேசியிருந்தமை அனைவரின் அவதானத்திற்கும் உட்பட்டிருந்தது.

ஜனாதிபதியை சந்தித்த சட்டத்தரணிகள்

ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட பல சந்திப்புகளில் கலந்துக்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக உறுதிப்படுத்தும் அரசியலமைப்ப திருத்தம் அமைச்சரவையில் அனுமதிப்பெறப்பட்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஏற்பர்டுகளை முன்னெடுக்க பணிப்புரை விடுத்தார்.

இதன் பின்னர் சட்டத்தரணிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.

‘ஜனாதிபதி தேர்தல் போட்டியில் தற்போது இரு குதிரைகள் ஒடுகின்றன. நீங்கள் எப்போது போட்டியில் பங்கேற்பீர்கள்’ என்று சட்டத்தரணி ஒருவர் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

இல்லை. ஜனாதிபதி தேர்தல் ஓட்ட பந்தயத்தில் இரு வேட்பாளர்களும் ஜனாதிபதி ஒருவரும் பங்கேற்றிருப்பதாகவே எனக்கு தோன்றுகின்றது’ என ஜனாதிபதி ரணில் கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.

‘எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் பதவியை பொறுப்பேற்க செல்வதற்கு முன்னர், நீங்கள் அந்த பதவிளை பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்’ என சட்டத்தரணி தினேஷ் விதானபதிரன ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

‘அவர் பொறுப்பேற்க மறுத்தமையினால்தான் என்னை அழைத்து, பிரதமர் பதவியை வழங்கினார்கள். யாரும் நாட்டை பொறுப்பேற்க அப்போது தயாராக இருக்கவில்லை. எனவே தான் நான் பொறுப்பேற்றேன்.

ஆனால் பொதுவாகவே பிரதமர் ஒருவர் பதவி விலகினால், எதிர்க்கட்சி தலைவர் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார். ஏனெனில், எதிர்க்கட்சி தலைவர் தான் நாட்டின் நிழல் பிரதமர். ஆனால், எமது நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஓடி ஒழிந்துக்கொண்டார்’ என்று ஜனாதிபதி நீண்ட விளக்கத்தை அளித்தார்.

‘உரம்’ கொடுத்த சமந்தா பவர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்துபச்சாரம் வழங்கப்பட்டது.

இதன் போது குறுகிய காலத்திற்குள் நாட்டின் பொருளதாரத்தை மீட்டெடுத்தமை தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு யுனெஸ்கோ பிரதிநிதிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

‘பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க மூன்று பெண்கள் காரணமாகினறர்.

அதில் முதலாவதாக அமெரிக்க திறைச்சேறி செயலாளர் ஜெனட் எலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய மூவருமே அந்த பெண்கள். இவர்கள் இருந்திருக்கா விடின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டிருப்பது கடினமாகியிருக்கும்’ என ஜனாதிபதி யுனெஸ்கோ பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தினார்.

‘சேர். நான்காவதாகவும் ஒரு பெண் இருக்கிறார். அவர்தான் சமந்த பவர். சர்வதேச அபிவிருத்திகளுக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலவசமாக உரம் வழங்கியதால் தான், நாட்டில் விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்றது.’ என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க கூற அனைவரும் தலையசைத்து ஏற்றுக்கொண்டனர்.

புதிய கூட்டணியின் சந்திப்பு

பதுளை கூட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்த புதிய அரசியல் கூட்டணியினர் வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சமார சம்பத் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்னர்.

‘பதுளை கூட்டத்திற்கு வந்த மக்கள் தொகையை பார்த்து எதிர்க்கட்சிகள் மாத்திரம் அல்ல, பொதுஜன பெரமுனவும் திகைத்துப்போய் உள்ளது’ என்று அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதன் போது கூறினார்.

‘வெளிப்பிரதேசங்களில் இருந்து நாங்கள் ஆதரவாளர்களை அழைத்து வரவில்லை. யார் வேண்டுமென்றாலும் உண்மையை கண்டறியலாம். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆதரவாளர்களும் எனது ஆதரவாளர்களுமே கூடுதலாக வந்திருந்தனர் ‘ என்று அமைச்சர் சாமர கூறினார்.

‘எது எப்படியானாலும் அமைச்சர் சமாரவின் பேச்சுக்கு தான் மக்கள் கூடதலாக கரகோஷங்களை எழுப்பினர்’ என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

‘உண்மையான நோக்கத்திற்காகவும் இதயப்பூர்வமாகவுமே மக்கள் வந்திருந்தனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது’ என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

‘ இரு நாட்களுக்கு முன்னர் எனது ஊரில் வாக்களர்கள் சிலரை அழைத்து கருத்து கணிப்பு செய்தேன். அதில் 90 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணிலின் வேலைத்திட்டங்களை ஏற்கின்றனர்.’ என்று அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

‘உண்மை தான். வெரிட் ரிசேர்ச் என்ற அமைப்பு செய்த ஆய்விலும் அந்த விடயம் வெளிப்பட்டுள்ளது ‘ என்று கையடக்க தொலைப்பேசியில் இருந்த ஆய்வறிக்கையை நிமல் லான்சா காண்பித்தார்.

‘இந்த ஆய்வறிக்கையினால் தான் சஜித் பிரேமதாச தற்போது அச்சப்பட்டுள்ளார் ‘ என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

‘வாய் சொல் வீரனின் முகநூல் கணக்கு குறித்து மக்கள் விழிப்பாகவே உள்ளனர் ‘ என துமிந்த திசாநாயக்க கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.

இதேவேளை ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களை சந்தித்த புதிய அரசியல் கூட்டணியினர், கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பொதுஜன பெரமுன ஒத்துழைப்பு அவசியம்

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியுள்ளார்.

அதாவது, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார – அரசியல் கொந்தளிப்புகளுக்கு பின்னரும், கிராமிய மட்டத்தில் பொதுஜன பெரமுனவிற்கு 25 வீதமான ஆதரவு உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க நம்புகின்றார். எனவே தான் அந்த கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக களமிரங்கும் நோக்கில் சில அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் அநுர பிரியதர்ஷன யாபா ஆகியோரின் தலைமையில் உள்ள புதிய அரசியல் கூட்டணி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தது.

இதன் போது ஜனாதிபதி ரணில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து கருத்து கூறியுள்ளார்.

பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கியர்தர்கள் ஜனாதிபதி ரணிலை ஏமாற்றுவதாக புதிய அரசியல் கூட்டணி கருதுகின்றது. எனவே தான் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விடயத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு நிமல் லான்சா குழுவினர் ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்றனர்.

தனித்து வேட்பாளரை களமிறக்கும் பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் யாரும் இதுவரையில் உறுதிப்பட கூறவில்லை.

பொதுஜன பெரமுனவின் ஆரம்ப காலம் தொட்டு இணைந்திருந்த உறுப்பினர் என்ற வகையில், இறுதி வரை அவர்களை நம்ப இயலாது என்று பாராளுமன்ற நிமல் லான்சா ஜனாதிபதி ரணிலிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்காது தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்பதே எனது தற்போதைய நிலைப்பாடு என்றும் கூறியுள்ளார்.

அந்த வேட்பாளர் தம்மிக பெரேரா அல்லது வேறுரொருவரா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனார் பஷில் ராஜபக்ஷ தனித்து வேட்பாளரை நிறுத்தும் வகையிலா நகர்வுகளையே திரைக்கு பின்னால் முன்னெடுத்து வருகின்றார். அவரின் அரசியல் நகர்வுகள் குறித்து எனக்கு நன்கு தெரியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை வைக்க இயலாது.

மக்கள் எதிர்ப்பதற்கு 3 காரணங்கள் உள்ளன

ராஜபக்ஷர்களை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் எதிர்ப்பதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் உள்ளன.

அதில் முதலாவதாக 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்காக செய்த சதி என்று நாட்டில் உள்ள கத்தோலிக்க மக்கள் நம்புகின்றனர்.

எனவே கத்தோலிக்க மக்கள் ராஜபக்ஷர்களுக்கோ அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்று புதிய அரசியல் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவதாக, கொவிட் பெரும் தொற்றின் போது உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு ராஜபக்ஷர்களே காரணம் என்று நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர்.

அது மாத்திரமன்றி முஸ்லிம் இனத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட சில அடக்குமுறைகளை காரணம் காட்டி அந்த மக்கள் ராஜபக்ஷர்களை தேர்தல்களில் இனி ஆதரிக்க மாட்டார்கள்.

மூன்றாவதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளாக காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், போரின் போது ஏற்பட்ட விடயங்கள், காணி விவகாரம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் ராஜபக்ஷர்களை அந்த மக்கள் ஏற்க மாட்டார்கள். அதே போன்ற தான் சிங்கள மக்களும் ராஜபக்ஷர்களுக்கு இம்முறை ஆதரவளிக்கமலிருக்க பல காரணிகள் உள்ளதாக புதிய அரசியல் கூட்டணியினர் கூறுகின்றனர்.

நாமல் ராஜபக்ஷவின் இலக்கு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறுவது நாமல் ராஜபக்ஷவின் நோக்கமல்ல. மாறாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதே அவரது இலக்காக உள்ளது என்று நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் வரக்கூடிய பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் வலவாக களமிரங்குவது நாமலின் நீண்ட அரசியல் பயணமாக உள்ளது. இதனை தவறு என்று நாங்கள் கூற வில்லை.

இதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற செய்யும் நோக்கம் பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply

Exit mobile version