கடந்த ஜூலை 23ம் தேதி இரவில், மும்பையின் வொர்லி பகுதியில் இயங்கி வந்த ‘சாஃப்ட் டச் ஸ்பா’ நிலையத்தில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

விசாரணைக்கு பிறகு வொர்லி பகுதி காவல்துறை இறந்தவரின் உடலில் இருந்த டாட்டூ அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், அவர்களை நேரடியாக நெருங்கும் அளவிற்கு அந்த டாட்டூவில் என்ன எழுதப்பட்டிருந்தது?

இறந்தவரின் பெயர் குருசிடப்பா வாக்மரே (Gurusidappa Waghmare). குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் ஃபிரோஸ் அன்சாரி மற்றும் ஷாகிப் அன்சாரி.

காவல்துறை விசாரணையில், ஸ்பா சென்டர் உரிமையாளர் சந்தோஷ் ஷெரேக்கர் பணம் கொடுத்து குருசித்தப்பா வாக்மரேவை கொலை செய்ய வைத்தது தெரியவந்தது.

ஜூலை 23 ஆம் தேதி வாக்மரே, சியோன் எனும் இடத்தில் இயங்கி வந்த மதுபான விடுதியில் தனது காதலியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். ஸ்பா சென்டர் ஊழியர்கள் இருவர் உடனிருந்துள்ளனர்.

விருந்து முடிந்த பிறகு, நள்ளிரவு 12:30 மணியளவில் அனைவரும் ஸ்பா சென்டருக்கு சென்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஃபிரோஸ் மற்றும் ஷாகிப் அன்சாரி ஆகிய இருவரும் வாக்மரே -வை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

ஸ்பா சென்டர் ஊழியர்கள் இருவரும் சென்ற பிறகு, வாக்மரே -வை ஃபிரோஸ் மற்றும் ஷாகிப் அன்சாரி அவரைக் கொலை செய்தாக கூறப்படுகிறது.

ஜூலை 24 காலையில் தான் வொர்லி காவல்துறைக்கு இந்த கொலை பற்றி தெரியவந்துள்ளது. ஸ்பா சென்டரில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், வாக்மரே உடலைக் கைப்பற்றினர்.

வாக்மரே உடலில் குத்தப்பட்டிருந்த டாட்டூ

டாட்டூவில் என்ன எழுதப்பட்டிருந்தது?

வாக்மரேவுக்கு அனேகமாக தனக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தோன்றியதால், தன் உடலில் டாட்டூ குத்தியுள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது, வாக்மரேவின் இரு தொடைகளிலும் டாட்டூ குத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதில், ‘என் பகைவர்களின் பெயர்களை டைரியில் குறித்து வைத்துள்ளேன். விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கவும்’ என எழுதப்பட்டிருந்தது.

ஒரு டாட்டூவில் 10 நபர்களின் பெயர்களும், மற்றொரு டாட்டூவில் 12 நபர்களின் பெயர்களின் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. இதில், வாக்மரே கொலை செய்யப்பட்ட ஸ்பா சென்டர் உரிமையாளரான சந்தோஷ் ஷெரேகரின் பெயரும் இருந்தது.

டாட்டூ மூலம் துப்புக் கிடைக்கவே, காவல்துறை தனது விசாரணையை துவங்கியது.

வாக்மரே வீட்டில் காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, சில டைரிகள் கண்டறியப்பட்டன. அதில் பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் நிறைய குறிப்புகள் இடம்பெற்று இருந்தன.

அதில், ஸ்பா சென்டரில் இருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவே, காவல்துறை துப்பு துலக்க பேருதவியாக இருந்தது.

குருசிடப்பா வாக்மரே

காவல்துறை துப்பு துலக்கியது எப்படி?

ஸ்பா சென்டர் உரிமையாளரான சந்தோஷ் ஷெரேகரின் பெயரும் அந்த டாட்டூவில் இருந்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இவரை காவலில் எடுத்து விசாரித்தது. பிறகு, காவல்துறை சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்த போது, அதில் ஃபிரோஸ் மற்றும் ஷாகிபை கண்டனர்.

கொலை செய்த பிறகு, அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் காண்டிவலி (Kandivali) பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஃபிரோஸ், நல சோபராவில் (Nalasopara) தனது வீட்டுக்கும், ரயில் மூலம் ஷாகிப் டெல்லிக்கும் சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் வாக்மரேவை பின் தொடர்ந்து செல்லும் போது, சியோன் பகுதியில் புகையிலை வாங்கி அதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தியுள்ளனர். இதன் மூலம், காவலர்கள் குற்றவாளிகளின் மொபைல் எண்ணைக் கைப்பற்றினர்.

காவல்துறையினர் இருவரையும் தேடிய போது, ஷாகிப் ரயிலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஷாகிபை ராஜஸ்தானின் கோட்டா நகரத்திலும், பெரோஸை நல சோபராவில் வைத்தும் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறை ஷாகிபின் புகைப்படத்தை முன்கூட்டியே ரயில்வே காவல் துறையினருக்கும் அனுப்பி இருந்தனர்.

வாக்மரே கொலைக்கு என்ன காரணம்?

வாக்மரே மும்பையைச் சுற்றி இருந்த பகுதிகளில் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடம் இருந்து பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், வொர்லியில் சாஃப்ட் டச் ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகரிடமும் அவர் பணம் கேட்டுவந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறை இதுகுறித்து கூறுகையில், “வாக்மரே அடிக்கடி ஷெரேகரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இருவரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாக்மரே மிரட்டலால் அதிருப்தி அடைந்த சந்தோஷ் ஷெரேகர், ஃபிரோஸ் அன்சாரி மற்றும் ஷாகிப் அன்சாரி ஆகிய இருவருக்கும் பணம் கொடுத்து கொலை செய்ய தூண்டியுள்ளார்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய மும்பை மாநகர காவல் துணை ஆணையர் நலவாடே, ‘இந்த வழக்கில் சந்தோஷ் ஷெரேகர், ஃபிரோஸ் மற்றும் ஷாகிப் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version