“கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 22 வயது மதிக்கத்தக்க பீகார் பெண்ணைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பீகாரைச் சேர்ந்தவர் கிருத்தி குமாரி என்கிற 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவர் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் பெண்கள் விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பெண்கள் விடுதிக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் கிருத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி அறையில் தங்கியிருக்கும் தோழியின் காதலன்.

அவர் வேலையில்லாமல் இருப்பதால் அடிக்கடி கிருத்தியின் தோழிக்கும் அவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த சண்டையில் கிருத்தி குமாரி பெரும்பாலும் தலையிட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

மேலும் அந்த நபரிடம் இருந்து தோழியை விலகி இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார் கிருத்தி. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கிருத்தியை கொலை செய்துள்ளார்” என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் விடுதி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சியில், குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி இருந்த அறையின் கதவைத் தட்டுகிறார். வெளியே வந்த கிருத்தியின் தலை முடியைப் பிடித்து, அவரை சுவரில் தள்ளி கத்தியால் பலமுறை கழுத்தில் குத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த சக அறை பெண்கள் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். குற்றவாளியை பிடிக்க பெங்களூரு போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த நபரின் பெயர் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க பெங்களூருவில் குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version