யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக ‘தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு’ தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

கடந்த 22 ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கில் நடந்த நிகழ்வில், 7 தமிழ் தேசிய கட்சிகளும், சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் எழுவரும், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆ.ர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளே, இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட முக்கியமான இரண்டு கட்சிகளான, இலங்கை தமிழ் அரசு கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது. அது தங்களுக்கு ஒத்து வராத கொள்கை என்றும் கூறிவிட்டது. அதனால் அந்தக் கட்சி இந்த கூட்டில் ஒருபோதும் இணையுமென எதிர்பார்க்க முடியாது.

தமிழ் அரசு கட்சியை பொறுத்த வரையில் அவ்வாறான நிலை இல்லை. தமிழ் அரசு கட்சிக்குள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான மாறுபட்ட நிலைப்பாடுகள் இருக்கின்றன. மாவை சேனாதிராஜா , சிறிதரன் போன்றவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம் போன்றவர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், தமிழ் அரசு கட்சி இறுதியாக என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை அனுமானிக்க முடியாது.

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஆழ வேரோடுகிறதோ, அந்தளவுக்கு தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாட்டில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலையில் தான், ஒரு கட்டத்தில் அந்த கட்சி இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் உடன்பாடு, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதும் நோக்கில் மாத்திரமே கையெழுத்திடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான உரையாடல்கள் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்ட போது பல்வேறு சந்தேகங்கள் கேள்விகள் காணப்பட்டது உண்மை.

இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது, அதற்குப் பின்னால் உள்ள சக்தி அல்லது தரப்பு குறித்த கேள்விகள் எழுவது இயல்பு.

கடந்த காலங்களில் தமிழர் தரப்பு பல்வேறு பின்னடைவுகளை எதிர் கொண்டதற்கு, பின்புலத் தலையீடுகள் காரணமாக இருந்திருக்கின்றன. அதனால் தான், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்துக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து பலவாறாக கருத்துக்கள் வெளிவந்தன.

சந்தேகங்கள் கேள்விகள் எழும்புகின்ற போதுதான், எந்த முயற்சிகளிலும் ஒரு தெளிவு ஏற்படும். இந்த முயற்சிகளை தொடங்கியவர்கள் கூட, இதுபோன்ற கேள்விகள் எழத் தொடங்கிய பின்னர் தான், தங்களை செப்பனிட்டுக் கொண்டார்கள்.

வழியில் எத்தகைய இடையூறுகள் வரும், எத்தகைய குழப்பங்கள் உருவாக்கப்படும், எவ்வாறான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பனவற்றை ஓரளவுக்கு புரிந்து கொண்டு, அதற்கான தயார் நிலையுடன் பயணிக்க கூடிய சூழலை, இந்த இந்த கேள்விகளும் சந்தேகங்களும்உருவாக்கி இருக்கின்றன. சில மாத இடைவெளி இதற்கு துணையாக இருந்திருக்கிறது.

இப்போது இந்த முயற்சியின் அவசியம், அவசரத் தன்மை என்பன ஓரளவுக்கு தமிழ் சமூகத்தினால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற ஒரு தரப்பு, இன்னமும் தமிழ் சமூகத்தில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அதைவிட எதற்கும் மாற்று கருத்துக்கள், நிலைப்பாடுகள் இருப்பது வழமை. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் தமிழ் தேசிய அரசியலில் புதிய ஒரு கூட்டிணைவு உருவாகி இருக்கிறது. இது பொது நிலைப்பாட்டில் -பொதுநோக்கில் இன நலன்களை முன்னிறுத்தி செயற்படுகின்ற ஒரு கூட்டிணைவுக்கான அடித்தளம் எனவும் கொள்ளலாம்.

இந்த உடன்படிக்கையின் ஒன்பதாவது பிரிவில், கூறப்பட்டுள்ள விடயத்தில் இருந்து இதனை உணர்ந்து கொள்ள முடிகிறது. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன், தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் இணங்கிக் கொள்கின்றனர் என்று அமைந்துள்ளது அந்த பிரிவு.

தமிழ்த் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் நோக்கில்,இந்த பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக இருந்து வரும் விமர்சனங்களில் ஒன்று திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்ட விடயமாகும்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய பொதுச் சபையின் கூட்டத்தில், புதிதாக உருவாக்கப்படும் கட்டமைப்பின் பெயர் ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தான், அதன் பெயர் ‘தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணம் ஏதும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்த் தேசியப் பேரவை எனமுன்னர் பெயர் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சில அமைப்புகளுடன் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டபோது, தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் கூட்டு அமைத்திருந்தது.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அந்த கூட்டு வலுப்பெறவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை. அதற்கு பின்னர் பயன்படுத்தப்படவுமில்லை. அதைவிட அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவும் இல்லை.

இவ்வாறான நிலையில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் பொதுக் கட்டமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ், இந்தப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்திருந்தார்.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறதா அந்த கேள்வி இருந்தாலும்- ஆரம்பத்திலேயே இவ்வாறான சிக்கலுக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக, தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

இந்த பெயர் மாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டது சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதனை வைத்து இந்த முயற்சிகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி இருக்கிறார்கள்.

இது பாரதூரமான ஒரு விடயம் அல்ல. ஏனென்றால் இங்கு தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, இதன் அடிப்படை நோக்கங்களும் செயல் திறனும் தான்.

தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்வதும், அவரை முன்னிறுத்தி, போட்டியிடுவதற்கான நோக்கங்களை வரையறை செய்வதும் இந்த கட்டமைப்பின் மிக சிக்கலான ஒரு இலக்காக இருக்கப் போகிறது.

அதற்கடுத்து, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிக் கொள்வது, தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்றிணைத்துக் கொள்வது அதைவிட பெரிய சவாலாக இருக்கும்.

இது ஒரு மிகப்பெரிய சவால் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் , உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தினாலேயே அதை சாதிக்க முடியும்.

இதற்கு பெரும் உழைப்பும், பொருட்செலவும் ஏற்படும். இதனை வெற்றிகரமாக கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்புக்கு இருக்கிறது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் பிரச்சினைகளையும் உரிமைக்கான அவாவையும் சரியாக வெளிக்கொண்டு வருவதற்கு இந்த பொது வேட்பாளர் முக்கியமானது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அவர், போட்டியில் நிறுத்தப்படவில்லை. அவரது இலக்கு அதுவல்ல.

அவர் எத்தனை இலட்சம் வாக்குகளை பெறுகிறார் என்பதை விட, தமிழ் மக்களின் மத்தியில் எந்தளவுக்கு அவரது நோக்கம், ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே முக்கியமானது.

அந்த இலக்கை அடைவதற்கு தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பு வெறும் உடன்படிக்கையுடன் நின்று கொண்டால் மாத்திரம் போதாது. அதற்கு அப்பால் அதன் இலக்குகளை அடைவதற்கு தெளிவான திட்டங்களையும், தீர்க்கமான முடிவுகளையும் எடுத்து செயற்பட வேண்டியிருக்கும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இருக்கின்ற மிகக் குறுகிய காலப் பகுதிக்குள், இதனை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு அடையப் போகின்ற வெற்றி தான், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

– என்.கண்ணன்

Share.
Leave A Reply

Exit mobile version