கறுப்பின ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகக் கருதப்படுபவருமான கமலா ஹாரிஸின் இன அடையாளமான ஆசிய – அமெரிக்க பாரம்பரியத்தை பற்றி சில காலங்களுக்கு முன்பு வரை பேசியதே இல்லை என்றார் டிரம்ப்.

மேலும், மிக சமீபத்தில்தான் “அவர் கறுப்பர் இன பெண்ணாக மாறினார்,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கறுப்பர் இனப் பெண்ணாக மாறிய போது தான் அவர் கறுப்பர் இனப்பெண் என்றே எனக்கு தெரியும். ஆனால் தற்போது அவர் கறுப்பர் இனப்பெண்ணாகவே அறியப்பட விரும்புகிறார்,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

புதன் அன்று சிக்காகோவில் நடைபெற்ற தேசிய கறுப்பின ஊடகவியலாளர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“எனக்கு தெரியவில்லை… அவர் இந்தியரா இல்லை… கறுப்பின பெண்ணா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றிய கமலா ஹாரிஸ், “பிளவுபடுத்தும், மரியாதையற்ற இந்த கருத்து டிரம்பின் நெடுநாள் செயலாகும்” என்று குறிப்பிட்டார்.

ஹுஸ்டனில் நடந்த ‘சிக்மா காமா ரோ’ என்ற கறுப்பின பெண்கள் சங்கத்தின் கூட்டத்தில் பேசினார் அவர் கமலா ஹாரிஸ்.

“நம்முடைய வேறுபாடுகள் நம்மை பிரிக்காது என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் தான் நமக்கு தேவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய – கறுப்பின வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்

இந்திய – ஜமைக்கா வம்சாவளியை சேர்ந்த பெற்றோர்களுக்கு மகளாக பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் கறுப்பின மற்றும் ஆசிய – அமெரிக்க பெண் துணை அதிபராவார்.

வரலாற்று ரீதியாக கறுப்பின பல்கலைக்கழகமாக அறியப்பட்ட ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். பிறகு ஆல்பா கப்பா ஆல்பா பெண்கள் சங்கத்தில் அவர் சேர்ந்தார்.

2017ம் ஆண்டு செனட்டில் காலடி எடுத்து வைத்த அவர், அமெரிக்க காங்கிரஸின் கறுப்பின குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சிகாகோவில் ஏ.பி.சி. செய்திகளின் செய்தியாளரும் அந்த நிகழ்வின் நடுவருமான ரேச்சல் ஸ்காட்டுடனான விவாதத்தின்போது இந்த கருத்துகளை வெளியிட்டார் டிரம்ப்.

கமலாவின் இனம் குறித்து பேசிய அவர், “நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் கமலா அப்படி மதிக்கவில்லை. ஆரம்ப காலம் தொட்டே இந்திய அடையாளத்தை பயன்படுத்தி வந்த கமலா, திடீரென தன்னை கறுப்பின பெண்ணாக அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்,” என்று பேசினார் டிரம்ப்.

வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளரான கரீன் ஜீன்-பியரி, “ஒருவர் யார் என்றும், எப்படி அவர்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூற ஒருவருக்கும் உரிமை இல்லை. இது எந்த ஒரு நபரின் உரிமையும் கிடையாது,” என்று குறிப்பிட்டார்.

கறுப்பினத்தின் நடுவராக டிரம்பை நியமித்தது யார்? என்று கேள்வி எழுப்பினார் நியூயார்க்கின் பிரதிநிதியான ரிச்சி டோரஸ்.

“கடந்த கால இனவெறியின் மிச்சம்,” என்று டிரம்பை விமர்சித்துள்ளார் ரிச்சி.


படக்குறிப்பு, குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இனத்தை குறிப்பிட்ட விமர்சிக்கும் டொனால்ட் டிரம்ப்

தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை அவர்களின் இனம் சார்ந்து தாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் டிரம்ப்.

அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பாரக் ஒபாமா அந்நாட்டின் குடிமகனே இல்லை என்று தவறாக கூறினார்.

ஐ.நாவின் முன்னாள் தூதரும், குடியரசுக் கட்சியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவருமான நிக்கி ஹாலேவின் பெற்றோர்கள் அமெரிக்க குடிமக்கள் இல்லை என்றும் திரித்துக் கூறினார்.

கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகலாம் என்று தெரிய வந்ததில் இருந்து அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவரின் இனத்திற்காகத்தான் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று குடியரசுக் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

டென்னெஸியை சேர்ந்த குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிம் பர்செட், கமலா ஹாரிஸை ‘DEI’ துணை அதிபர் என்று அழைத்தார். அது பன்முகத்தன்மை (Diversity), நியாயம் (சமத்துவம்) மற்றும் உள்ளடக்கிய (Inclusion) என்ற பொருளை தருகிறது.

மாநாட்டில் பேசிய டிரம்பிடம் ஸ்காட், கமலா ஹாரிஸ் உண்மையாகவே இந்த மூன்று கூறுகளையும் பிரதிபலிக்கும் ஒருவர் என்று நம்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு தெரியவில்லை. ஆனால் இருக்கலாம் என்று கூறினார்.

கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டது குறித்தும், இந்தியாவுக்கு வருகை புரிந்தது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரின் அம்மா, அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் கலிஃபோர்னியாவின் ஓக்லாந்து கறுப்பின கலாசாரத்தில் வளர்த்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டது குறித்தும், இந்தியாவுக்கு வருகை புரிந்தது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

பார் கவுன்சில் தேர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கிய டிரம்ப்

சட்டப் படிப்பு படித்த கமலா ஹாரிஸ் அவருடைய பார் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் டிரம்ப் கூறினார். அவரின் கருத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

“நான் உங்களுக்கு உண்மையை சொல்கிறேன். அவர் (கமலா) பார் தேர்வில் வெற்றி பெறவில்லை. அவர் வெற்றி பெறுவார் என்றும் நினைக்கவில்லை. ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டிங்க்ஸ் சட்டக்கல்லூரியில் 1989ம் ஆண்டு பட்டம் பெற்றார் கமலா.

கமலா ஹாரிஸ் அவருடைய முதல் தேர்வில் தோல்வி அடைந்தது பற்றியும், அடுத்த முயற்சியில் வெற்றி பெற்றார் என்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு எழுத வரும் நபர்களில் பாதிக்கும் குறைவான நபர்களே அதில் தேர்ச்சி அடைகின்றனர் என்று கலிஃபோர்னியா மாகாண பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

சிகாகோவில் டிரம்புடன் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியானது ஆரம்பம் முதலே காரசாரமாக இருந்தது.

“மிகவும் புண்படும்படியான அறிமுகத்தை” வழங்கியிருக்கிறீர்கள் என்று ஸ்காட்டை விமர்சனம் செய்தார் டிரம்ப். ரேச்சல் ஸ்காட் தன்னுடைய விவாத நிகழ்வை துவங்கும் போது, டிரம்ப் கறுப்பின மக்களுக்கு எதிராக பேசிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

கறுப்பின ஊடகவியலாளர்களின் கேள்வி இனவெறியுடையதாகவும் முட்டாள்தனமாக இருக்கிறது என்று டிரம்ப் கூறியதை மேற்கோள் காட்டினார் ஸ்காட். மேலும் வெள்ளையின மேலாதிக்கம் கொண்ட நபருடன் மார்-ஏ-லாகோவில் (டொனால்ட் டிரம்பின் இருப்பிடம்) இரவு உணவை உட்கொண்டார் என்றும் குற்றம்சாட்டினார்.

“இந்த நாட்டில் உள்ள கறுப்பின மக்களை நான் மதிக்கிறேன். அவர்களுக்காக நிறைய செய்திருக்கிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விவாதம் முடிந்த பிறகு, இந்த நிகழ்வு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார் டொனால்ட் டிரம்ப். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், “கேள்விகள் எல்லாம் மிகவும் முரட்டுத்தனமாகவும் மோசமாகவும், கருத்துச் சொல்வது போன்ற தொனியில் இருந்தாலும் கூட நாம் சிறப்பாக விவாதித்திருக்கிறோம்,” என பதிவிட்டிருந்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version