“ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த செவ்வாய்க்கிழமை [ஜூலை 30] அன்று பதவி ஏற்றார்.
இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா இந்த தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கத்தார் நாட்டில் நடந்த அரசியல் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த இஸ்மாயில் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்தபிறகு, மர்ம நபர்கள் அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்துள்ளனர் என்று நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். “,