‘ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு… ஷேக் ஹசீனா ஒரு சர்வாதிகாரி’
கடந்த சில வாரங்களாக இந்த வார்த்தைகள் தான் வங்கதேசத்தில் போராட்ட குரலாக ஒலித்து வருகிறது. இந்த போராட்டம் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது.
76 வயதான ஹசீனா தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தை 2009 ஆம் ஆண்டு முதல் இரும்புக்கரம் கொண்ட ஆட்சி செய்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன் வெடித்த இந்த போராட்டம் இவரை பதவி விலக வைத்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வாகும்.
திங்கட்கிழமை காலையில் போராட்டக்காரர்களின் நெருக்கடியில் அவர் சிக்கிவிட்டார். கடந்த ஜூலை மாதம் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரும் கிளர்ச்சியாக மாறிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நடந்த மோதலில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.
ஞாயிறு அன்று மட்டும் 13 காவலர்கள் உட்பட 90 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. வங்கதேச போராட்ட வரலாற்றில் ஒரு நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இதுவே மோசமானதாகும்.
ஹசீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற போதிலும், விமர்சகர்கள் இதை படுகொலை என்று குறிப்பிட்டனர்.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை அன்று தலைநகர் டாக்காவில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.
வங்கதேசத்தில் மக்கள் இனி தோட்டாக்களுக்கு அஞ்சப் போவதில்லை என்ற நிலை உருவானது. அரசியல் ரீதியிலான இப்போராட்டம், மக்கள் எழுச்சியாக உருவெடுத்தது.
ஹசீனா நாட்டை விட்டே வெளியேறும் முடிவுக்கு ராணுவமும் ஒரு காரணம். பதவி விலகுமாறு ராணுவம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் வங்கதேசத்தை ஆட்சி செய்துள்ள ராணுவம், இன்றும் அங்கே மக்களால் மதிக்கப்படுகிறது. வங்கதேச அரசியலில் இராணுவம் பெரும் செல்வாக்கை கொண்டிருக்கிறது.
கடந்த வார இறுதியில் இருந்து பெருகி வரும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள், இராணுவம் ஹசீனா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கலாம்.
வெள்ளிக்கிழமை அன்று, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த இராணுவ தலைவர் ஜெனரல் வகெர்-உஸ்-ஜமான் ஆணையிட்டதற்கு, கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
நம் முன் என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஜெனரல் வகெர்-உஸ்-ஜமான் ஒரு “இடைக்கால” தீர்வைக் காண எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட “பல்வேறு தரப்புடன்” பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், என்று உயர் மட்டத்தில் உள்ள, இந்த விஷயம் குறித்து நன்கு அறிந்தவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
ஹசீனா இந்தியாவுக்கு சென்றது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லைக்கு அப்பாலிருந்து இவர் என்ன ஆலோசனை பெற்றார் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால், வங்கதேசத்தின் நீண்ட நாளைய முக்கிய நேச நாடு, இவருக்கு ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வந்தது.
இதனால் தான் வங்கதேசத்தில் ஹசீனாவின் செல்வாக்கு குறைந்த பிறகு, இந்தியாவுக்கு எதிரான வலுவான குரல் வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்வதால், தனது சொந்த பாதுகாப்புக்காக வங்கதேசத்தின் மீது எப்போதும் டெல்லிக்கு ஒரு கண் இருந்தது. ஹசீனா தன் நாட்டின் வழியே அந்த மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டுசெல்ல இந்தியாவுக்கு அனுமதி வழங்கி இருந்தார்.
இந்தியாவின் மிக முக்கிய பிரச்னையாக இருந்த, வங்கதேச இந்திய எதிர்ப்பு போராட்ட குழுக்களை ஹசீனா கட்டுப்படுத்தினார்.
சமீபத்திய வாரங்களில், வங்கதேசத்தில் செல்வாக்கு குறைந்து வரும் ஹசீனாவை ஆதரிப்பதா வேண்டாம் என்பதில் இந்தியாவுக்கு குழப்பம் ஏற்பட்டது.
ஏனென்றால், பெரும் மக்கள் போராட்டத்தில் இருந்து தள்ளி இருந்தால் வங்கதேசத்துடனான நீண்ட நாள் நல்லுறவு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. ஹசீனாவின் ராஜினாமா அந்த பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளது.
மக்கள் கோபத்திற்கு ஆளான ஹசீனா
வங்கதேசத்தை உருவாக்கிய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா, உலகில் நீண்ட காலம் ஓர் அரசை ஆட்சி செய்த பெண் ஆவார்.
1975ஆம் ஆண்டு இராணுவ சதியால், இவரது தந்தை உட்பட குடும்பத்தில் பெரும்பாலான நபர்கள் கொலை செய்யப்பட்டனர். அப்போது, வெளிநாட்டில் வசித்து வந்த ஹசீனா மற்றும் அவரது சகோதரி மட்டுமே அவரது குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தனர்.
இந்தியா புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த ஹசீனா 1981ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு திரும்பி, ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிற அரசியல் கட்சிகளுடன் கைகோர்து மக்கள் எழுச்சியை உருவாக்கினார். இதனால் அவர் ஒரு தேசிய அடையாளமாக மாறினார்.
ஹசீனா 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். ஆனால், அதற்கு அடுத்து வங்கதேச தேசியவாத கட்சித் தலைவர் பேகம் கலீதா ஜியாவிடம் 2001ஆம் ஆண்டு அவர் ஆட்சியை இழந்தார்.
அதன் பின் மீண்டும் ஹசீனா 2009ஆம் ஆண்டு தேர்தல் மூலம் அரசு அதிகாரத்திற்கு வந்தார்.
மக்கள் காணாமல் போகும் நிகழ்வுகள், நீதிக்கு புறம்பான படுகொலைகள் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் மற்றும் விமர்சகர்களை நசுக்கியது என்பன போன்ற குற்றச்சாட்டுகள் இவரது அரசு மீது வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை ஹசீனா மறுத்தார். எதிர்க்கட்சிகளே போராட்டங்களை தூண்டுவதாக ஹசீனா அரசு குற்றம் சாட்டியது.
நாட்டில் கலகம் மூண்டதற்கு எதிர்க்கட்சியினரே காரணம் என ஹசீனாவும், அவரது அவாமி லீக் கட்சியும் குற்றம்சாட்டினர்.
ஆனால், இம்முறை முன்பை விட கோபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் கிடைத்த சர்ச்சைக்குரிய தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஹசீனா எதிர்கொண்ட கடுமையான சவாலாக அமைந்தது இந்த போராட்டம்.
பதவி விலக மறுத்து வந்த இவர், ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்றும் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் படைகளை குவிப்பது மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி விடாது என்பதே வங்கதேச நிகழ்வுகள் உணர்த்தும் சேதி. அது எந்தவொரு தலைவருக்கும் நல்லதல்ல.