இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயத்தை முன்னெடுப்பவர்கள் கூறுகின்ற இன்னுமொரு காரணம் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம் வெளிக்கிளம்பியதால்தான் பிரதானமான ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்குத் தமிழர்களை நோக்கி வருகிறார்களாம். அது இவ்விடயத்தில் முதற்கட்டச் சாதனையாம். இதில் என்ன சாதனை நிகழ்ந்திருக்கிறது?
ஜனாதிபதி வேட்பாளர்கள் அண்மைக் காலத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களிடம் வழமைக்கு மாறாக அடிக்கடி வந்து போகிறார்கள் என்பது உண்மைதான்.
வந்தவர்களில் யாராவது சமஸ்டியைத் தருவேன் என்று வாக்குறுதி வழங்கி விட்டார்களா? இல்லையே. அப்படி வாக்குறுதி வழங்கினாலும்கூட அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் அதனை நிறைவேற்றி வைப்பார்களா?
உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்குக் கிழக்கு வந்து செல்வதால் தமிழ்ப் பொது வேட்பாளர் அணியினர் எதனைச் சாதித்து விட்டார்கள்? எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?
மேலும், ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயத்தில் அது குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஏழு அரசியல் கட்சிகளையும் எடுத்துக் கொண்டால் ‘ரெலோ’வும் (செல்வம் அடைக்கலநாதனும்), ‘புளொட்’ டும் (சித்தார்த்தனும்) ஓடும் புளியம்பழமும் போல பட்டும் படாமல் இருந்து கொண்டு அடக்கியே வாசிக்கின்றனர்.
இப்போது தமிழர்கள் தமது இரண்டாவது தெரிவை தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்கிறார். இறுதியாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவை நம்ப முடியாது என்றார். சாதாரண அரசியல் மாணவனுக்கும் அவரது அரசியல் கோமாளித்தனங்கள் புரியும்.
செல்வம் அடைக்கலநாதனும் (ரெலோ), சித்தார்த்தனும் (புளொட்) ஏதோ ஒப்புக்காக ஒப்பந்தத்தில் கையப்பமிட்டுவிட்டு உள்ளுக்குள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர் என்று அவர்களுடன் நெருங்கிய அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பதிவு செய்யப்படாத அரசியற் கட்சிகளான அதாவது தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளான சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சியும் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் பெரிதாகப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.
அவர்களும் ஏதோ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ யினருடன் ஊரோடு ஒத்தோடுகிறார்கள் போலும்.
ஆக, ‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் ஆரம்பத்திலிருந்து துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டுமே.
அவருடைய ஈ பி ஆர் எல் எப் கட்சிக்குள்ளும் இது விடயத்தில் மாறுபட்ட கருத்துக்களும் உண்டென்றே அறிய முடிகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டுமே அடிக்கடி ஊடக சந்திப்புக்களை நிகழ்த்தித் தனது இருப்பைத் தமிழ் வாக்காளர்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இறுதி இலக்கும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்தான்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசியல் கட்சிகளின் சீத்துவம் இதுவென்றால், சிவில் அமைப்புகளின் சார்பில் கையெழுத்திட்ட ஏழு பேரும் வெறும் தனி நபர்களே தவிர அவர்கள் எந்த அமைப்பின் சார்பிலும் கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை.
எந்த அமைப்பும் அவர்களின் பின்னால் அணிதிரண்டுள்ளதாகவும் இல்லை. இந்த ஏழு பேரும் தனி மரங்களே தவிர தோப்புகள் அல்ல. இது இந்த ஒப்பந்தத்தின் முதற்கோணல். ‘முதற் கோணல் முற்றும் கோணல்’.
அதன் பலம்-பலவீனம்; சரி-பிழைகள் மற்றும் அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்பவைகளுக்கும் அப்பால் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களிடையே ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை விடவும் ஒப்பீட்டளவில் கூடிய வீத வாக்கு வங்கியைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சி இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.
தமிழரசு கட்சியின் முன்னாள் (?) தலைவர் மாவை சேனாதிராசாவோ தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்தாலும் கூட சிறீதரன் அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை.
எது எப்படியிருப்பினும் இவர்கள் இருவரும் இப்போதைய தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுப்பவர்களாக இல்லை.
தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவராக மறைந்த இரா சம்பந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திற்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டுவிட்டுத்தான் கண்ணை மூடினார்.
அவரது விசுவாசிகள் அவரது ஆத்ம சாந்திக்காக உழைப்பார்கள். தமிழரசுக் கட்சியை இன்று இழுத்துக் கொண்டிருக்கின்ற சுமந்திரன் பா.உ.வும் சாணக்கியன் பா.உ. வும் தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்த்து நிற்கிறார்கள். இதனால் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளது. இதில் சுமந்திரன் கையே ஓங்கும்.
இந்தப் பின்புலத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒப்பந்தம் பலவீனமானதும் பயனற்றதுமாகும். மட்டுமல்ல இது ஓர் அரசியல் ‘பம்மாத்து’.
தமிழ் மக்கள் சிவில் சமூகங்களின் பொதுக் கட்டமைப்பெனப் பெருப்பித்துக் காட்டப்படும் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ யுடன் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ (?) ஏழையும் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ எனும் பசையைப் பூசி ஒட்டி (எப்போது கழன்று விழும் என்று தெரியாது) உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள அமைப்பு பலவிதமான இழுபறிகளுக்குப் பிறகு இப்போது தமிழ்ப் பொது வேட்பாளரின் பெயரையும் அறிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது வேட்பாளரையும் அவரைத் தேர்ந்தெடுத்தவர்களையும் பார்க்கும்போது ‘பரமார்த்த குருவும் சீடர்களும்’ எனும் அங்கதக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு ‘கோமாளித்தனம்’ இதுவரையில் நடந்ததேயில்லை.
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இறுதியில் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகத்தான் முடியப்போகிறது.
– தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.-