-பங்களாதேஷில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே காணப்படுகின்ற அதிக ஒற்றுமை, மீண்டும் ‘அரகலய’ குறித்து எழுகின்ற விமர்சனங்களுக்கு முக்கியமான காரணம்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டம் இடம்பெற்றதை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடியதுடன், ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டார்.

அதற்கு பின்னர் அரகலய போராட்டம் முடக்கப்பட்டதுடன் அந்தப் போராட்டத்தில் பிரதான பங்கேற்றிருந்தவர்கள் இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

இவர்கள் அந்தப் போராட்டத்தில் முன்னிலை பங்கேற்பாளர்களாக இருந்தார்களே தவிர, அவர்களுக்கு பின்னால் வேறு பல சக்திகள் இருந்தன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர், “என்னை அகற்றுவதற்கான சதி” என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த நூலில் அவர், பதவியில் இருந்து தான் அகற்றப்பட்டதற்கு காரணமாக இருந்த உள்நாட்டு காரணிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட சில தவறான முடிவுகள் காரணமாக, அதனை சில வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை நிறைவேற்றியதாக அவர் கூறியிருந்தார்.

அவர் அந்த நூலில் எந்த தரப்பையோ எந்த நாட்டையோ வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்க வில்லை.

அதேவேளை, அவர் குறிப்பிட்டிருந்த இரண்டு முக்கியமான குறைபாடுகளில் ஒன்று, இராணுவத் தரப்பின் ஒத்துழைப்பின்மை. மற்றொன்று புலனாய்வுத்துறையின் தோல்வி.

கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, அரகலய போராட்டத்தின் போது பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சிலர், நாட்டில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இராணுவத் தலைமையோ, பாதுகாப்பு தலைமையோ, முப்படைகளின் தளபதியான, நாட்டின் தலைவரை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாக்க அப்போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேயின் பிரதான குற்றச்சாட்டு.

‘அரகலய’ போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில், கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹான இல்லம், ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

அந்த கட்டத்தில், ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தன்னை அழைத்து, தனது இல்லத்துக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திரா சில்வாவிடம் கூறும்படி கேட்டுக் கொண்டார் என்றும் மதுர விதானகே கூறியிருக்கிறார்.

இதையடுத்து, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுடன் தொடர்பு கொண்டு, பாதுகாப்பை பலப்படுத்துமாறும், கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹான இல்லம் அமைந்துள்ள வீதியில், இராணுவ வாகனங்களை நிறுத்தி அதனைத் தடை செய்யுமாறும் கேட்டுக் கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மறுப்புத்தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அரசியல் விடயங்களில் இராணுவம் தலையிடாது என கூறினார் என்றும் மதுர விதானகே தெரிவித்திருக்கிறார்.

அதனை அடிப்படையாக வைத்து, அவர் இராணுவப் புரட்சிக்கான முயற்சியில் சில இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர் என்றும், அரசியல் தலைவர்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இராணுவம் தயங்கியது என்பது உண்மை.

ஆனால்அதேவேளை, நாட்டின் தலைவராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவம் மறுத்ததா என்பதில் சந்தேகம் உள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபாய ராஜபக்ஷவை, கடற்படை தளபதி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று, துறைமுகத்தில் வைத்து கடற்படை கப்பலில் ஏற்றி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு கொண்டு சென்றார்.

அதன் பின்னர் விமானப்படை விமானத்திலேயே அவர் மாலைதீவுக்குத் தப்பி சென்றார். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முப்படைகளில் ஒருபோதும் தயங்கியிருக்கவில்லை.

அதேவேளை அவரது அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு அல்லது அரசாங்கத்தின் மீதான மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் கைகொடுக்கவில்லை.

இதற்கான காரணத்தை கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் தெளிவாகக் கூறியிருக்கிறார். அதற்கான சில காரணங்களை அவர் முன் வைத்திருக்கிறார்.

அதில் ஒன்று, ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவின் பயணத் தடைகளால் அச்சமடைந்து இருந்தார் என்பது.

போர்க்குற்றச்சாட்டுகளை அடுத்து, விதிக்கப்பட்ட பயணத் தடைகளினால் ஜெனரல் சவேந்திர சில்வாவின் மகள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அது மனதளவில் அவரை பாதித்திருக்கிறது என ஒரு காரணத்தை அவர் முன் வைத்திருந்தார்.

அதேபோன்று பாதுகாப்பு கட்டமைப்பில் தனது நியமனங்கள் தவறானதாக இருந்தது என்றும், கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வருவதற்கு முன்னரே ஜெனரல் சவேந்திர சில்வாவை மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதியாக நியமித்திருந்தார்.

சவேந்திர சில்வாவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நல்ல உறவு இருந்தது. அதைவிட இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கான 55 வயதை எட்டுவதற்கும் சவேந்திர சில்வாவுக்கு காலம் இருந்தது.

அதனால் அவரை இராணுவ தளபதியாக வைத்துக் கொண்டு, ஓய்வுபெற்று சென்றிருந்த இன்னொரு நெருங்கிய சகாவான ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலராக நியமித்திருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ.

கமல் குணரத்ன

கமல் குணரத்ன இராணுவத் தளபதியாக பதவி வகிக்காமல் நேரடியாகவே பாதுகாப்புச் செயலாளர் ஆனார். அவருக்கு ஜெனரலாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதே ஜெனரல் பதவியில் சவேந்திர சில்வாவும் இருந்தார்.

இந்த முரண்பாடுகள் அவர்களுக்கிடையில் சுமுகமான உறவை ஏற்படுத்தவில்லை என்றும், தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, இப்படைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல, ஜெனரல் கமல் குணரத்னவினால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த தவறை சரி செய்வதற்கிடையில் நிலைமை கைமீறிப் போய்விட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் எந்தக் கட்டத்திலும் சவேந்திர சில்வா அல்லது வேறு இராணுவ அதிகாரிகள் இராணுவப் புரட்சியை மேற்கொள்வதற்கோ அதிகாரத்தை கைப்பற்றுவதற்கோ முயற்சித்ததாக அவர் குறிப்பிடவில்லை.

புலனாய்வுப் பிரிவு கொரோனா தொற்றைக் கையாளுவதில் திறம்பட செயல்பட்ட போதும், சமூக ஊடகங்களை கையாளுவதில் பின்னடைவை சந்தித்திருந்ததாகவும், அது தமக்கு தெரியாமல் போய்விட்டது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் கூறியிருக்கிறார்.

தனது தோல்விக்கு அதாவது பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட சூழ்ச்சிக்கு, இந்த உள்ளக காரணிகள் உதவியாக இருந்தன என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வெளிப்புற சக்திகளின் தலையீடு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், அது என்னவென்பதை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் அவர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இராணுவ நிலைகளுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் இராணுவ அதிகாரிகளுடன் அதிகம் தொடர்பை பேணுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்.

வெளிநாட்டு சக்திகள் இராணுவத்தினர் மீது தலையீடு செய்ய முயன்றது குறித்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சந்தேகம் இருக்கிறது.

ஆனால் அவர்கள், அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றார்கள் என்பதற்கு நம்பகமான எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை.

ஆனால் அவருடன் இருந்த மதுர விதானகே இராணுவ அதிகாரிகள் சிலர் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றனர் என்று கூறியிருக்கிறார்.

அவ்வாறாயின் அவர் ஏன் இதுவரை அமைதியாக இருந்தார்? அரசாங்கத்தைக் கொண்டு ஏன் இந்த விவகாரத்தை கையாள முயற்சிக்கவில்லை ?

அதிகாரத்தை கைப்பற்ற இராணுவ அதிகாரிகள் முயன்றனர் என்பது கடுமையானதொரு குற்றச்சாட்டு.அதனை இலகுவாக அலட்சியம் செய்து விட முடியாது.

போர்க்குற்றங்களை போல இதனையும் மறைக்க முனைந்தால், அது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல,ஒட்டுமொத்த நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியும்.

– சுபத்ரா

Share.
Leave A Reply

Exit mobile version